இயல்பான நடிப்பால் கவனம் ஈர்க்கும் காளீஸ்வரி

முதல் முறையாக தேர்வுக்குச் சென்றிருந்த என்னால், கேமராவுக்கு முன்னால் பதற்றமே இல்லாமல் இயல்பாக நடிக்க முடிந்தது. எனவே என்னைத் தேர்வு செய்தார்கள். அவர்களுடன் ஒரு நாள் பணியாற்றியதே நல்ல அனுபவமாக இருந்தது. எனவேதான் ‘படப்பிடிப்பு பிரான்சு நாட்டில் இருக்கும்’ என்று கூறியபோதும் தயக்கமே இல்லாமல் சம்மதித்தேன்.

Update: 2022-08-07 01:30 GMT

'என்னுடைய ஆளுமையை நான் அறிந்துகொள்வதற்கும், மேம்படுத்துவதற்கும் கலை ஒரு கருவியாக இருக்கிறது' என்கிறார் காளீஸ்வரி ஸ்ரீநிவாசன். நடிப்பின் மீது கொண்ட காதலால் நாடகங்களிலும், குறும்படங்களிலும் நடிக்கத் தொடங்கிய இவர், கதாநாயகியாக நடித்த முதல் படம் 'சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்'. பிரான்சு நாட்டில் நடக்கும் 'கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா'வின், உயரிய 'தங்கப்பனை' விருதை இந்தப் படம் வென்றது.

இப்படத்தின் கதாநாயகி காளீஸ்வரிக்கு, அந்த விழாவில் சிவப்புக் கம்பள வரவேற்பு அளித்து கவுரவித்தார்கள். மூன்று கதைகளில், முதல் கதையின் நாயகியாக இவர் நடித்திருந்த இந்தப் படம், பல சர்வதேச விருதுகளை வென்றிருந்த நிலையில், தற்போது மூன்று தேசிய விருதுகளையும் பெற்றுள்ளது. வெள்ளித்திரையில் வெற்றி பெற்றிருந்தாலும், நாடகங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார் காளீஸ்வரி.

காளீஸ்வரியுடன் உரையாடியதிலிருந்து…

"நான் பிறந்து வளர்ந்தது சென்னையில். அப்பா, அம்மா, தம்பி என்று அன்பான குடும்பம். எதிர்பாராதவிதமாகத்தான் நடிகையானேன். ஆனால், இப்போது எனக்கு நடிப்பைத் தவிர வேறு எதன் மீதும் ஈடுபாடு இல்லை.

மனோதத்துவம் படித்த நீங்கள், நடிகை ஆனது எப்படி?

மனோதத்துவ நிபுணராக வேண்டும் என விரும்பித்தான், அது பற்றி படித்தேன். ஆனால் அந்த வேலை எனக்கு மகிழ்ச்சியை, மன நிறைவை தரவில்லை.

அதன்பிறகு, பண்பலை வானொலியில் தொகுப்பாளராக முயற்சி செய்தேன். அதற்கான பயிற்சியை மேற்கொண்டபோது, ஒரு கதையை நாடகம் போல நடித்துக் காட்டச் சொன்னார்கள். நான் பேசி, ஆடிப்பாடி, அழுது நடித்தபோது என்னைச் சுற்றி இருக்கும் உலகத்தை மறந்து அதில் ஒன்றிவிட்டேன். அப்போதுதான் 'இயல்பாகவே எனக்கு நடிக்க வருகிறது என்பதையும், நடிப்பது எனக்குப் பிடித்திருக்கிறது' என்பதையும் உணர்ந்தேன். அதன் பிறகே நடிகையானேன்.

முதல் படவாய்ப்பு பெற்றதைப் பற்றி சொல்லுங்கள்?

'தீபன்' என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கு ஏற்ற பெண்ணைத் தேடிக் கொண்டு இருக்கிறார்கள் என்றும், நான் அதற்குப் பொருத்தமாக இருப்பேன் என்றும் நண்பர்கள் தெரிவித்தார்கள். அதனால் முயற்சி செய்தேன்.

முதல் முறையாக தேர்வுக்குச் சென்றிருந்த என்னால், கேமராவுக்கு முன்னால் பதற்றமே இல்லாமல் இயல்பாக நடிக்க முடிந்தது. எனவே என்னைத் தேர்வு செய்தார்கள். அவர்களுடன் ஒரு நாள் பணியாற்

றியதே நல்ல அனுபவமாக இருந்தது. எனவேதான் 'படப்பிடிப்பு பிரான்சு நாட்டில் இருக்கும்' என்று கூறியபோதும் தயக்கமே இல்லாமல் சம்மதித்தேன்.



கதாநாயகி என்றால் 'சிவப்பாக இருக்க வேண்டும்' எனும் விமர்சனங்களை எவ்வாறு கடந்தீர்கள்?

அத்தகைய விமர்சனங்கள் இப்போதும் அப்படியேதான் இருக்கின்றன. அவை என் மனதில் பெரும் தாக்கத்தை உண்டாக்கியவை. ஆனால், அதைப்பற்றியெல்லாம் நான் கவலைப்படுவதில்லை. எனக்கான வாய்ப்புகள் எப்போதும் வந்து கொண்டேதான் இருக்கின்றன. என்னையும், என் நடிப்புத் திறமையையும் மதிக்கும் இடத்தில் மட்டுமே பணியாற்றுகிறேன்.

நாடகத்தில் நடிக்கும் அனுபவங்கள் பற்றி?

ஒரு அனுபவப் பகிர்தலாகத்தான் நான் நாடகங்களைப் பார்க்கிறேன். நல்ல நாடகங்களில் நடிக்கும்போது மகிழ்ச்சியும், மனநிறைவும் கிடைக்கிறது. அண்மையில், புதுச்சேரி 'பர்ச்' நாடகக் குழுவும், 'இந்தியா நோஸ்ட்ரம்' நாடகக் குழுவும் இணைந்து தயாரித்த 'கிந்தன் சரித்திரம்' நாடகத்துக்குப் பெரும் வரவேற்பு கிடைத்தது. அதைப் பார்த்த குடும்பத் தலைவி ஒருவர், 'நீண்ட காலத்திற்குப் பிறகு, நெடுநேரம் சிரித்தேன்' என்றார். இதுபோல் பலர் நேரிலும், கைப்பேசியிலும் தொடர்புகொண்டு மகிழ்ச்சியைத் தெரிவித்தனர்.

நீங்கள் நடிக்கும் மற்ற படங்கள் குறித்து?

ஜெர்மனியைச் சேர்ந்த பெண் இயக்குநர் ஒருவரின் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன். 'குற்றம் கடிதல்' ராதிகா இயக்கிய 'பேகம் பார்வதி' என்ற குறும்படத்தில் நடித்திருக்கிறேன். அந்தக் குறும்படமும், பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு விருதுகளை வென்று வருகிறது. உலகப்புகழ் பெற்ற கவிஞரும், புரட்சியாளருமான பாப்லோ நெருடா-வின் கடைசி நாட்கள் பற்றிய குறும்படத்தில், நெருடாவாக நடிகர் நாசரும், அவரைத் துன்புறுத்தும் கர்னலாக நானும் நடித்திருக்கிறோம். அதுவும் சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு வருகிறது.

உங்கள் லட்சியம் என்ன?

எனக்கு பெரிய லட்சியமோ, கனவோ இல்லை. ஒரு அன்பான மனிதாபிமானமுள்ள பெண்ணாக இருந்தால் போதும். பணத்தையும், பெயரையும், புகழையும் நோக்கி ஓடுவதில் எனக்கு விருப்பம் இல்லை. மரங்கள், பறவைகள், தேனீக்கள், எறும்புகள் போல இயற்கையின் படைப்பில் நானும் சக உயிரியாக வாழ்க்கைப் பயணத்தைத் தொடர்கிறேன். 

Tags:    

மேலும் செய்திகள்