நிலையான வருமானம் அளிக்கும் 'ஐஸ்கிரீம் பிரீமிக்ஸ்' தயாரிப்பு

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஐஸ்கிரீமை விரும்பி சாப்பிடுவார்கள். அதனை தயாரிப்பதற்கு தேவையான பிரீமிக்ஸ் பவுடரை வீட்டிலேயே தயாரித்து ஐஸ்கிரீம் செய்து கொடுத்து குடும்பத்தினரை அசத்திவிடலாம்.

Update: 2023-07-02 01:30 GMT

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஐஸ்கிரீமை விரும்பி சாப்பிடுவார்கள். அதனை தயாரிப்பதற்கு தேவையான பிரீமிக்ஸ் பவுடரை வீட்டிலேயே தயாரித்து ஐஸ்கிரீம் செய்து கொடுத்து குடும்பத்தினரை அசத்திவிடலாம். இதனை 6 மாதங்கள் வரை குளிர்சாதனப் பெட்டியில் பாதுகாத்து பயன்படுத்தலாம். வீட்டில் இருந்தபடியே பெண்கள் இதை சுயதொழிலாக மேற்கொண்டு வருமானமும் ஈட்ட முடியும். இங்கு வெண்ணிலா மற்றும் சாக்லேட் என இரண்டு விதமான சுவைகளில் பிரீமிக்ஸ் பவுடர் தயாரிப்பது பற்றி பார்க்கலாம். இதை அடிப்படையாகக் கொண்டு மேங்கோ, ஸ்ட்ராபெர்ரி, பிஸ்தா என பல்வேறு சுவைகளிலும் ஐஸ்கிரீம் பிரீமிக்ஸ் தயாரிக்க முடியும்.

தேவையான பொருட்கள்:

பொடித்த சர்க்கரை - ½ கப்

ஜி.எம்.எஸ். (கிளிசரால் மோனோஸ்டிரேட்)

பவுடர் - ¼ கப்

சி.எம்.சி. (கார்பாக்சி மீத்தைல் செல்லுலோஸ்)

பவுடர் - ½ டீஸ்பூன்

சோளமாவு - 2 டேபிள் ஸ்பூன்

பால் பவுடர் - 3 டேபிள் ஸ்பூன்

வெண்ணிலா பவுடர் - ½ டீஸ்பூன்

கோகோ பவுடர் - 3 டேபிள் ஸ்பூன் (இனிப்பு இல்லாதது)

(இவை அனைத்தும் பேக்கிங் செய்வதற்கான பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் கிடைக்கும்).

பிரீமிக்ஸ் பவுடர் செய்முறை:

அகலமான பாத்திரத்தில், கோகோ பவுடரை தவிர்த்து கொடுக்கப்பட்டிருக்கும் மற்ற பொருட்கள் அனைத்தையும் ஒவ்வொன்றாகப் போட்டு நன்றாகக் கலக்கவும். பின்பு அந்தக் கலவையை சல்லடையில் கொட்டி சலித்துக்கொள்ளவும். இதுதான் 'வெண்ணிலா ஐஸ்கிரீம் பிரீமிக்ஸ்' பவுடர். இதனை சுத்தமான, ஈரமில்லாத, காற்று புகாத பாட்டிலில் போட்டு குளிர்சாதனப் பெட்டியில் வைத்து பாதுகாக்கவும்.

இதே செய்முறையைப் பின்பற்றி, வெண்ணிலா பவுடருக்குப் பதிலாக கோகோ பவுடரை சேர்த்தால் 'சாக்லேட் ஐஸ்கிரீம் பிரீமிக்ஸ்' பவுடர் தயார்.

ஐஸ்கிரீம் தயாரிப்பு:

தேவையான பொருட்கள்:

பிரீமிக்ஸ் பவுடர் - ¼ கப்

பால் - 250 மி.லி

செய்முறை:

பாலை நன்றாகக் காய்ச்சி அறை வெப்பநிலைக்கு கொண்டு வரவும். பின்பு அதில் பிரீமிக்ஸ் பவுடரைப் போட்டு நன்றாகக் கலக்கவும். இந்தக் கலவையை அடுப்பில் வைத்து குறைவான தீயில் தொடர்ந்து கலக்கவும். கலவை கெட்டியாக ஆரம்பிக்கும்போது, அடுப்பில் இருந்து இறக்கி மின்விசிறிக்கு கீழ் வைத்து நன்றாகக் கலக்கவும்.

சூடு முழுவதுமாக ஆறியதும் அதை ஒரு டப்பாவில் போட்டு இறுக்கமாக மூடி பிரீசரில் வைக்கவும்.

பத்து மணி நேரம் கழித்து வெளியே எடுத்து, ஒரு கனமான கரண்டியைக் கொண்டு அந்தக் கலவையை சுரண்டி எடுக்கவும். அகலமான பாத்திரத்தில் அதைப் போட்டு, எலக்ட்ரிக் ஹேண்ட் பீட்டர் கொண்டு 4 நிமிடங்கள் வரை நன்றாக பீட் செய்யவும். இப்போது ஐஸ்கிரீம் மென்மையாகி, அதன் அளவு மூன்று மடங்காக பெருகி இருக்கும். இந்த முறையில் 250 மி.லி பால் சேர்த்து தயாரித்தால் 800 மி.லி அளவு ஐஸ்கிரீம் கிடைக்கும்.

இதனை மற்றொரு டப்பாவில் போட்டு இறுக்கமாக மூடி 8 மணி நேரம் பிரீசரில் வைத்து எடுத்தால் சுவையான ஐஸ்கிரீம் தயார்.

Tags:    

மேலும் செய்திகள்