வீட்டை அலங்கரிக்கும் பொம்மைகள்

மனதுக்குப் பிடித்த பொம்மைகளைக் கொண்டு அலங்கரிப்பதால், மனநிறைவு கிடைக்கும். உதாரணமாக, கைவினை பொம்மைகள் உங்களை கவர்ந்தவை என்றால், அதையே தீம்மாக எடுத்துக்கொண்டு அத்தகைய பொம்மைகளைத் தேடி வாங்கலாம்.

Update: 2023-03-05 01:30 GMT

வீட்டை அலங்கரிப்பது என்பது அனைவருக்கும் பிடித்த விஷயம். அவரவரின் தனிப்பட்ட விருப்பம், ஈடுபாடு, ரசனை போன்றவற்றின் அடிப்படையில் அலங்காரம் செய்வார்கள். இதில் பொம்மைகளைக் கொண்டு அலங்கரிப்பது என்பது ஒருவகை. பெரும்பாலும் 'ஷோகேஸ்' போன்ற அமைப்புகளில் பொம்மை களை அடுக்கி வைப்பதே பலரது விருப்பமாக இருக்கும். இதற்காக அலங்கார பொம்மைகளை வாங்குபவர்களுக்கு சில டிப்ஸ்.

  • அலங்கார பொம்மைகளை உங்கள் வீட்டு ஷோகேசுக்கு ஏற்றவாறு தேர்வு செய்ய வேண்டும். பொம்மைகளின் அளவு ஷோகேசின் உள்ளே நுழையுமாறு இருப்பது முக்கியம்.
  • வீட்டில் பெரிய ஷோகேஸ் இருக்கும் பட்சத்தில், அதை இரண்டாக பிரித்து, உங்களுக்குப் பிடித்த தீம்களின் அடிப்படையில் பொம்மைகளை வாங்கி அடுக்குங்கள்.
  • நீங்கள் விரும்பும் பொம்மைகளை வாங்குவதற்கு தயக்கம் காட்டாதீர்கள். மனதுக்குப் பிடித்த பொம்மைகளைக் கொண்டு அலங்கரிப்பதால், மனநிறைவு கிடைக்கும். உதாரணமாக, கைவினை பொம்மைகள் உங்களை கவர்ந்தவை என்றால், அதையே தீம்மாக எடுத்துக்கொண்டு அத்தகைய பொம்மைகளைத் தேடி வாங்கலாம்.
  • பழங்காலத்தை நினைவூட்டும் வகையிலான அலங்கார பொம்மைகள் பார்ப்பதற்கு அழகாக இருப்பதோடு, மனதில் நல்ல உணர்வுகளையும் ஏற்படுத்தும்.
  •  கண்ணாடியால் தயாரிக்கப்பட்ட பொம்மைகளை கையாள்வதில் கவனம் தேவை. உங்கள் வீட்டில் குழந்தைகள் இருந்தால் 'கண்ணாடி ஷோ பீஸ்'களை வாங்குவதை தவிர்ப்பது நல்லது.
  •  பிளாஸ்டிக்கால் தயாரிக்கப்பட்ட பொம்மைகள் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும். எனவே அத்தகைய அலங்கார பொம்மைகளை வாங்குவதை தவிர்த்திடுங்கள்.
  • வீட்டில் பயன்படுத்தாமல் இருக்கும் பொருட்களையும், உங்கள் கற்பனைத் திறனால் அலங்கார பொம்மைகளாக மாற்றலாம். முயற்சித்துப் பார்த்தால் காகிதம் கூட அழகிய பொம்மையாய் மாறும்.
  • அளவில் பெரிய பொம்மைகளை அலங்காரத்துக்காகத் தேர்வு செய்வதை தவிர்க்கலாம். அவை இடத்தை அடைத்துக் கொள்வதோடு மட்டுமில்லாமல், பராமரிப்பதிலும் சிரமத்தை உண்டாக்கும்.
  • உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற அலங்கார பொம்மைகளை குறைவான விலையில் சந்தைகளில் வாங்குங்கள்.
  • மரத்தாலான பொம்மைகள் நீண்டகாலம் உழைப்பதோடு, சுற்றுச்சூழலுக்கும் உகந்தவை. இவை வீட்டின் தோற்றத்தையும் மேம்படுத்திக்காட்டும்.
  • ஷோகேஸை அழகுபடுத்த சிறுவர்களுக்குப் பிடித்த கார்ட்டூன் பொம்மைகளையும் தேர்வு செய்யலாம்.
  • அலங்கார பொம்மைகளை வைக்கும் இடத்திற்கு ஏற்றார்போல சிறு சிறு மின்விளக்குகளை ஒளிரச்செய்தால், வீடு அழகில் ஜொலிக்கும்.


மரத்தாலான பொம்மைகளை பராமரிக்கும் முறைகள்:

மரப்பொம்மைகளை தண்ணீரில் ஊற வைக்கக் கூடாது. அவற்றில் சிதைவு அல்லது விரிசல் ஏற்படக்கூடும். பருத்தித்துணி அல்லது பிரஷ்ஷை, வெள்ளை வினிகர் அல்லது ஆப்பிள் சீடர் வினிகரில் நனைத்து அதைக்கொண்டு மரப்பொம்மைகளை சுத்தம் செய்யலாம்.

ஈரப்பதம் நிறைந்த இடத்தில் மரப்பொம்மைகளை வைத்திருந்தால், அவை எளிதில் பூஞ்சை பாதிப்புக்கு உள்ளாகும். அவ்வாறு பூஞ்சை படர்ந்து இருந்தால் ஒரு பங்கு வினிகருடன் 10 பங்கு தண்ணீர் கலந்து அவற்றின் மீது ஸ்பிரே செய்யவும். சிறிது நேரம் கழித்து, வெதுவெதுப்பான தண்ணீரில் சுத்தமான துணியை நனைத்து பொம்மைகளைத் துடைக்கவும்.

Tags:    

மேலும் செய்திகள்