கேரட் எண்ணெய் தயாரிப்பு

கேரட் எண்ணெய்யில் வைட்டமின் ஏ, சி மற்றும் பீட்டா கரோட்டின் ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன. இந்த எண்ணெய்யை தொடர்ந்து தலைக்கு பயன்படுத்தி வந்தால், வறட்சி நீங்கி கூந்தல் பளபளப்பாகும். வேர்க்கால்கள் வலுப்பெற்று முடி வளர்ச்சி அதிகரிக்கும்.;

Update: 2023-06-18 01:30 GMT

ல்வேறு அழகு பராமரிப்பு பொருட்களின் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் 'கேரட் எண்ணெய்', சருமம் மற்றும் கூந்தலுக்கு ஏராளமான நன்மைகள் தரக்கூடியது. இந்த எண்ணெய்யை இயற்கையான முறையில் வீட்டிலேயே எளிதாக தயாரிக்கலாம். உங்கள் உபயோகத்துக்காக மட்டுமில்லாமல், சிறந்த முறையில் தயாரித்து சந்தைப்படுத்தவும் முடியும். இல்லத்தரசிகள் மற்றும் பணிபுரியும் பெண்கள், இதை பகுதி நேர தொழிலாக செய்து வருமானமும் ஈட்ட முடியும். கேரட் எண்ணெய்யின் செய்முறை, பயன்பாடு, நன்மைகள் மற்றும் சந்தைப்படுத்தும் முறைகள் பற்றி தெரிந்துகொள்வோம்.

ஒரு பொருளை வியாபார ரீதியில் தயாரிக்கப் போகிறீர்கள் என்றால், முதலில் அதனை சிறிய அளவில் தயாரித்து நீங்கள் உபயோகித்து பார்க்க வேண்டும். அதன் பலன்களை அனுபவித்து உணர்ந்தால்தான், மற்றவருக்கு அதைப்பற்றி உங்களால் தன்னம்பிக்கையுடன் எடுத்துக்கூற முடியும்.

கேரட் எண்ணெய் தயாரிக்க தேவையான பொருட்கள்:

துருவிய கேரட் - 2 கப்

தேங்காய் எண்ணெய் - 2 கப்

செய்முறை:

கேரட்டுகளின் இரண்டு முனைகளையும் நறுக்கிவிட்டு நன்றாக சுத்தப்படுத்தவும். பின்னர் அவற்றை பருத்தித் துணியைக்கொண்டு ஈரமில்லாமல் துடைக்கவும். பின்பு எல்லா கேரட்டுகளையும் துருவிக்கொள்ளவும்.

ஒரு அகன்ற வாணலியில் கேரட் துருவலைக்கொட்டி அதனுடன் சம அளவு தேங்காய் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைத்து கலக்கவும். குறைவான தீயில், அவ்வப்போது இந்தக் கலவையை கிளறி விடவும். 15 நிமிடங்களில் கலவையில் இருந்து எண்ணெய் பிரிந்து மேலே வரும். அப்போது அடுப்பை அணைத்துவிட்டு வாணலியை இறக்கி வைக்கவும்.

இந்தக் கலவை நன்றாக ஆறிய பிறகு வடிகட்டவும். இப்போது பொன்னிறமான 'கேரட் எண்ணெய்' தயார். இதனை சுத்தமான கண்ணாடி பாட்டிலில் ஊற்றி வைக்கவும்.

குறிப்பு: கேரட் எண்ணெய் தயாரிக்க நீங்கள் பயன்படுத்தும் துருவி, வாணலி, கரண்டி, வடிகட்டி, கண்ணாடி பாட்டில் என எல்லா உபகரணங்களும் ஈரப்பதம் இல்லாமல் உலர்வாக இருக்க வேண்டியது முக்கியம்.

எவ்வாறு பயன்படுத்த வேண்டும்?

♦ தலைக்கு குளிக்கும் முன்பு கேரட் எண்ணெய்யை தலைப்பகுதியிலும், கூந்தலிலும் தடவி நன்றாக மசாஜ் செய்யவும். ஒரு மணி நேரம் கழித்து தலைக்கு குளிக்கவும்.

இரண்டு துளி கேரட் எண்ணெய்யை முகம் முழுவதும் பூசி மென்மையாக மசாஜ் செய்யவும். பத்து நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தைக் கழுவவும்.

கழுத்து, அக்குள், தொடை இடுக்கு போன்ற பகுதிகளில் சிலருக்கு நாள்பட்ட கருமை படர்ந்து இருக்கும். அவர்கள் அந்த இடத்தில் கேரட் எண்ணெய் கொண்டு நன்றாக மசாஜ் செய்து, 30 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவலாம்.

கேரட் எண்ணெய்யை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து பாதுகாக்க வேண்டிய அவசியம் இல்லை. 6 முதல் 8 மாதங்கள் வரை வெளியில் வைத்தே பயன்படுத்தலாம்.

நன்மைகள்:

கேரட் எண்ணெய்யில் வைட்டமின் ஏ, சி மற்றும் பீட்டா கரோட்டின் ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன. இந்த எண்ணெய்யை தொடர்ந்து தலைக்கு பயன்படுத்தி வந்தால், வறட்சி நீங்கி கூந்தல் பளபளப்பாகும். வேர்க்கால்கள் வலுப்பெற்று முடி வளர்ச்சி அதிகரிக்கும். பொடுகு பிரச்சினை நீங்கும். சருமப் பொலிவு அதிகரிக்கும்.

Tags:    

மேலும் செய்திகள்