நாட்டிய சகோதரிகள்

தமிழ்ப் பண்பாட்டைச் சொல்லித்தருகிறோம். உடல் ஆரோக்கியத்திற்கு யோகா கற்றுத் தருகிறோம். ஒழுக்கம், நேரம் தவறாமை, பெரியோர்களுக்கு மதிப்பளிப்பது, நேர்மை, தன்னம்பிக்கை, சுயக்கட்டுப்பாடு, சுத்தம், சுகாதாரம் என்று வாழ்வில் இன்றைய பெண்கள் அவசியம் அறிய வேண்டிய அனைத்தையும் பொறுமையாகவும், தெளிவாகவும் கற்றுத் தருகிறோம்.

Update: 2022-06-26 01:30 GMT

நான்கு வயது முதலே பரதநாட்டியம் முறைப்படி கற்று அரங்கேற்றம் செய்தனர் சகோதரிகள் சங்கீதா-ஜெயஸ்ரீ இருவரும். சென்னையைச் சேர்ந்த இவர்கள் சிறுவர்-சிறுமிகள் முதல் ஐம்பது வயது பெண்கள் வரை பலருக்கும் பரதநாட்டியம் கற்றுக்கொடுத்து வரு கின்றனர். இந்தியாவிலும், வெளிநாட்டிலும் நிகழ்ச்சிகள் நடத்தி பரதக்கலையின் புகழை பரவச்செய்து வரும் இந்த சகோதரிகளுடன் ஒரு சந்திப்பு.

இருவருக்கும் நாட்டியத்தின் மீது ஆர்வம் வந்தது எப்படி?

ஜெயஸ்ரீ: அப்பா சுரேஷ் பாபு-அம்மா ஆனந்தி இருவருக்கும் பரதநாட்டியம் என்றால் உயிர். அதனால் எங்கள் இரண்டு பேரையும் நான்கு வயது முதலே பரதநாட்டிய வகுப்பில் சேர்த்தனர். எனக்கும், அக்காவுக்கும் இரண்டு வயதுதான் வித்தியாசம். அதனால் நல்ல தோழிகள் போலப் பழகி, சுறுசுறுப்பாகப் போட்டிபோட்டு ஆர்வத்துடன் பரதநாட்டியம் கற்றுக்கொண்டோம். எல்.கே.ஜி வகுப்பு முதல் பரதம் ஆடத் தொடங்கிவிட்டோம்.

நான் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.சி.ஏ. முடித்தேன். சங்கீதா அதே கல்லூரியில் உணவு அறிவியல் மற்றும் மேலாண்மை முடித்தார். பட்டம் பெற்ற பிறகு, இனி பரதநாட்டியம் தான் எங்கள் வாழ்க்கை என்று இருவருமே முடிவெடுத்தோம். சென்னை பல்கலைக்கழகத்தில் பரதநாட்டியம் படித்து, எம்.ஏ. பட்டம் பெற்றோம். அதன் பிறகு தற்போது இருவரும் தமிழ் இசைக் கல்லூரியில் பரத நாட்டியத்தில் எம்.பில்., படித்து வருகிறோம்.

நீங்கள் இருவரும் செய்த குறிப்பிடத்தக்க பரதநாட்டிய சாதனைகளைக் கூறுங்களேன்?

ஜெயஸ்ரீ: எங்கள் எட்டு வயதில் பரதநாட்டிய அரங்கேற்றம் நடந்தது. எங்கள் நடன ஆசிரியர் டாக்டர். லட்சுமி ராமசுவாமியுடன் இணைந்து ஆளாவது எப்படியோ?, சப்தவிடங்கம், சிலம்புவிடு தூது, சுந்தர காண்டம், கணகணமுசி போன்ற நாட்டிய நாடகங்களில் ஆடி புகழ்பெற்றோம்.

சங்கீதா: நாங்கள் இருவரும் இணைந்து இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் பல நடன நிகழ்ச்சிகளை நடத்தி இருக்கிறோம். இருவருமே தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் பி.கிரேட் கலைஞர்களாக தமிழ்நாட்டில் தஞ்சாவூர், மதுரை, ஸ்ரீரங்கம், திருவாரூர், விருதுநகர் ஆகிய ஊர்களில் உள்ள கோவில்களிலும், அஸ்ஸாம், ஒடிஸா, மணிப்பூர், பர்மா, சிங்கப்பூர் ஆகிய இடங்களிலும் நடன நிகழ்ச்சிகள் நடத்தி இருக்கிறோம்.

ஜெயஸ்ரீ: நாங்கள் இரண்டு பேரும் இணைந்து ஆப்பிரிக்கா நாட்டில் உள்ள ஜாம்பியாவில் நடன நிகழ்ச்சியும், அங்குள்ள நாட்டிய மாணவிகளுக்கு நடனப் பயிற்சிப் பணிமனையும் நடத்தி இருக்கிறோம்.

சங்கீதா: இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி பிரதீபா பாட்டில் முன்னிலையில் டெல்லி ராஷ்ட்டிரபதி பவனில் பரதநாட்டியம் ஆடிப் பாராட்டு பெற்றோம்.

நீங்கள் பெற்ற விருதுகள் என்ன?

ஜெயஸ்ரீ: சவுத் இந்தியன் சோஷியல் கல்சுரல் அகாடமி வழங்கிய 'பேரறிஞர் அண்ணா' விருது, சுருதிலய வித்யாலயா வழங்கிய 'யுவநிருத்ய ஜோதி' விருது, சிங்கப்பூரின் உமறுப்புலவர் தமிழ் மொழி அமைப்பு வழங்கிய 'நாட்டிய கலா ரத்னா' விருது என பல சிறப்பு விருதுகளை நம் நாட்டிலும், வெளிநாட்டிலும் பெற்றுள்ளோம்.

உங்கள் வேறு திறமைகள் பற்றி?

சங்கீதா: நாங்கள் கர்நாடக இசையும் முறைப்படி கற்று கச்சேரி செய்து இருக்கிறோம். ஆனால், முழு ஈடுபாடு பரதநாட்டியத்தில் மட்டும்தான்.

ஜெயஸ்ரீ: அதனால்தான் பரதநாட்டிய பயிற்சி வகுப்புகள் மூலம் பயிற்சியும், அனுபவமும் உள்ள பல பரதநாட்டிய மாணவிகளை உருவாக்கி வருகிறோம்.

சங்கீதா: நான் கேரளாவின் புகழ்பெற்ற 'களரி' சண்டையை முறைப்படி முழுமையாகக் கற்றுத் தேர்ந்துள்ளேன். யோகாவையும் இருவரும் கற்று இருக்கிறோம்.

ஜெயஸ்ரீ: என் தங்கை களரி சண்டையை எங்களிடம் பரதநாட்டியம் கற்றுக்கொள்ளும் மாணவிகளுக்கு இலவசமாகக் கற்றுக் கொடுக்கிறாள்.

சங்கீதா: ஆமாம். எல்லாரும் பாராட்டி ரசிக்க பரதநாட்டியமும், தற்காப்புக்காக களரி சண்டையும் சொல்லித் தருகிறோம். சமுதாயத்தில் நிலவும் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் இருந்து பாதுகாத்துக்கொள்வதற்கு தற்காப்பு பயிற்சியும் அவசியம்.

உங்கள் மாணவர்களுக்கு வேறு என்ன கற்றுத்தருகிறீர்கள்?

ஜெயஸ்ரீ: தமிழ்ப் பண்பாட்டைச் சொல்லித்தருகிறோம். உடல் ஆரோக்கியத்திற்கு யோகா கற்றுத் தருகிறோம். ஒழுக்கம், நேரம் தவறாமை, பெரியோர்களுக்கு மதிப்பளிப்பது, நேர்மை, தன்னம்பிக்கை, சுயக்கட்டுப்பாடு, சுத்தம், சுகாதாரம் என்று வாழ்வில் இன்றைய பெண்கள் அவசியம் அறிய வேண்டிய அனைத்தையும் பொறுமையாகவும், தெளிவாகவும் கற்றுத் தருகிறோம்.

சங்கீதா: மாலையில் பரதநாட்டிய பயிற்சி வகுப்பு முடிந்தபிறகு 'ஆன்லைன்' மூலமாக வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் வாழும் பெண்களுக்குப் பரதநாட்டியம் கற்றுத்தருகிறோம்.

ஜெயஸ்ரீ: எங்கள் மாணவிகளுக்கு மேடையில் பேசவும், நிகழ்ச்சிகளைத் தொகுத்து அளிக்கவும் பயிற்சி அளித்து வருகிறோம். தெய்வீக சிந்தனைகளை அளிக்கிறோம். ஸ்லோகங்கள் கற்றுத் தருகிறோம்.

சங்கீதா: பரதநாட்டியம் ஆட உடல் கட்டுக்கோப்பாக இருக்க வேண்டும். எனவே, எந்த மாதிரியான உணவுகளை, எவ்வளவு சாப்பிட வேண்டும் என்று கற்றுத் தருகிறோம். ஆடலுடன், ஆன்மிகமும் சொல்லித்தருகிறோம்.

ஜெயஸ்ரீ: நூற்றுக்கணக்கான மாணவிகளுக்குப் பரதம் கற்றுத்தந்து, அரங்கேற்றம் நடத்தி வருகிறோம். எங்களின் இந்த இளமைக்கால பரத நாட்டிய சாதனை வெற்றிக்கு பின்னால் எங்கள் சகோதரர் மற்றும் பெற்றோர் இருக்கிறார்கள்.

சங்கீதா: அமெரிக்கா, ஆப்பிரிக்கா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் வசிக்கும் மாணவர்கள் ஆன்லைன் மூலமாக, எங்களிடம் ஆர்வமுடன் பரதநாட்டியம் கற்று வருவது பெருமையாக இருக்கிறது. பரதநாட்டிய பயிற்சியுடன் எங்கள் மாணவிகளுக்கு கர்நாடக இசையும் கற்றுத் தருகிறோம்.

இவ்வாறு கூறிய சகோதரிகள் இருவரும் ஒற்றுமையாக பரதக்கலைக்கு தொண்டாற்றி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்