மினியேச்சர் உருவங்களால் மனதை மயக்கும் உமா காயத்ரி
நண்பர்களின் பிறந்த நாள் போன்ற நிகழ்வுகளுக்கு, என் கைகளால் வடிவமைத்த மினியேச்சர் உருவங்களைப் பரிசாக அளித்தேன். அது மிகவும் நேர்த்தியாகவும், அழகாகவும், கலைநயத்துடனும் இருப்பதாக பார்த்த அனைவரும் பாராட்டினர்.
'ஆர்ட் கிளே' எனும் ஒருவகை களிமண் கொண்டு அழகான மினியேச்சர் உருவங்களை செய்கிறார் சேலம், மேட்டூரைச் சேர்ந்த உமா காயத்ரி. இவற்றை வீட்டை அலங்கரிப்பதற்கும், பரிசாகக் கொடுப்பதற்கும் பயன்படுத்தலாம் என்கிறார். பொழுதுபோக்காக செய்ய ஆரம்பித்தவருக்கு, இன்று அதுவே தொழிலாக மாறி இருக்கிறது. இதன் மூலம் பிற பெண்களுக்கும் வேலை வாய்ப்பு அளித்து வருகிறார். அவருடன் நடந்த உரையாடல்.
மினியேச்சர் உருவங்கள் செய்வதில் ஆர்வம் ஏற்பட்டது எப்படி?
பி.டெக்., படித்து முடித்ததும் ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். திருமணத்திற்குப் பிறகு வேலையை ராஜினாமா செய்து விட்டு கணவருடன் லண்டன் சென்றேன்.
அங்கே வீட்டில் அதிக நேரம் தனிமையில் இருக்க நேர்ந்தது. அப்போது பொழுதுபோக்கிற்காக கிளே மாடலிங்கைத் தேர்வு செய்து, மினியேச்சர் வடிவங்களை செய்து பார்த்தேன். இணையம், யூடியூப், பத்திரிகைகள் போன்றவற்றில் அது பற்றிய தகவல்களை தெரிந்து கொண்டு, படிப்படியாக இக்கலையில் தேர்ச்சி பெற்றேன்.
நண்பர்களின் பிறந்த நாள் போன்ற நிகழ்வுகளுக்கு, என் கைகளால் வடிவமைத்த மினியேச்சர் உருவங்களைப் பரிசாக அளித்தேன். அது மிகவும் நேர்த்தியாகவும், அழகாகவும், கலைநயத்துடனும் இருப்பதாக பார்த்த அனைவரும் பாராட்டினர். அவர்கள் அளித்த ஊக்கத்தால் மேலும் ஈடுபாட்டுடன் செய்தேன். பொழுது போக்காக ஆரம்பித்த கலை நாளடைவில் தொழிலாக மாறியது.
மினியேச்சர் உணவு வகைகள், கடவுள் உருவங்கள், மினியேச்சர் ராக்கிகள் என பல்வேறு விதமாக, அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப கிளே மாடலிங் செய்து தருகிறோம்.
இதில் ஏதேனும் சவால்கள் இருந்ததா?
மினியேச்சர் உருவங்கள் செய்வதைத் தொழிலாக ஆரம்பிக்கும்போது நான் சந்தித்த தடைகள் ஏராளம். முதலில் குடும்பத்தாரிடம் ஆதரவு கிடைக்கவில்லை. பலவிதமான விமர்சனங்களும், தடைகளும் உருவானது.
ஆனால், எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல், மனத்திருப்தியுடன் ஒவ்வொரு பொருளையும் ரசித்து செய்தேன். பிறகு, குடும்பத்தினர் என்னைப் புரிந்து கொண்டு ஆதரவு அளித்தனர்.
இவ்வாறு பன்னிரெண்டு ஆண்டுகள் விடாமுயற்சியுடன் செய்த உழைப்பின் பலனாக, பல பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரும் நிலைக்கு உயர்ந்து இருக்கிறேன். அதற்காக சமீபத்தில் 'முன் உதாரண பெண்மணி' என்னும் விருதையும் பெற்றிருக்கிறேன்.
எனது தொழிற்சாலையில் 12 பெண்கள் வேலை செய்கின்றனர். விழாக் காலங்களில் மேலும் பலருக்கு வேலைவாய்ப்பு தருகிறேன். இதுமட்டுமில்லாமல் ஆதரவற்ற இல்லங்களில் வசிக்கும் பெண்களுக்கு ராக்கிகளுக்கு கயிறு கோர்ப்பது போன்ற சில அடிப்படை வேலைகளை கொடுத்து அவர்கள் வருமானம் பெறுவதற்கு வழிவகை செய்கிறேன். கொரோனா காலங்களில் இத்தகைய வாய்ப்பால் பல மகளிர் வருமானம் ஈட்ட முடிந்தது.
உங்கள் வெற்றியின் ரகசியம் என்ன?
எந்த செயலையும் காலம் தாழ்த்தாமல் உடனே செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பேன். விடா முயற்சி, கடின உழைப்பு, எதற்கும் வருத்தப்படாமல், காரியத்தில் கண்ணாக இருந்து எல்லா வேலைகளையும் சிறப்பாகச் செய்வதே எனது வெற்றியின் ரகசியம்.