பிரச்சினைகளுக்கு தீர்வு நம்மிடமே உள்ளது- விஜயலட்சுமி
எனக்கு உடல்நலத்தில் அக்கறை அதிகம். 35 வயதில் இருந்து யோகா வகுப்புகளுக்குச் சென்றேன். என் தோழிகளுக்கும் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வழிகள் சொல்வேன். ஓய்வு நேரங்களில் கவிதைகள் எழுதுவேன். ஆனால், அவை முழுவதும் சோக கீதங்களாக இருப்பதைப் பார்த்து, அதைத் தவிர்த்தேன்.;
"நம் வாழ்க்கையில் அவிழ்க்க முடியாத புதிர் என்று ஒன்றுமில்லை. எல்லா கேள்விகளுக்கான பதில்களும் நம்மிடமே உள்ளது. இந்த எண்ணமே என் வாழ்க்கையில் பல பிரச்சினைகளுக்கு தீர்வு அளித்தது" என்று நம்பிக்கையோடு பேச ஆரம்பித்தார் ஹங்கேரியில் வசித்து வரும் 63 வயது விஜயலட்சுமி. தமிழ்நாட்டைச் சேர்ந்த இவர் தற்போது தனது மகனின் குடும்பத்தோடு ஹங்கேரி நாட்டில் வாழ்கிறார்.
அங்கு இருப்பவர்களுக்கு யோகா, தியானம், முத்திரைகள் போன்றவற்றை இலவசமாகக் கற்றுக்கொடுக்கிறார். வாழ்வியல் ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார். அவரது பேட்டி.
உங்களைப் பற்றி?
கோவை மாவட்டத்தில் பிறந்த நான், சென்னையில் வளர்ந்தேன். திருமணம் முடித்து திண்டிவனத்தில் குடியேறினேன். கணவர், எனது 29 வயதில் பிரிந்து விட்டார். 8 வயது மகனையும், 5 வயது மகளையும் வளர்க்கும் பொறுப்பு என்னைச் சேர்ந்தது. வாழ்க்கையின் ஆரம்பமே போராட்டமாக இருந்தது. அந்த நேரத்தில் என் தாயார் எனக்கு பக்கபலமாக இருந்தார். பிரபல வழக்கறிஞரிடம் தட்டச்சு செய்பவராக பணியாற்றினேன். பிறகு தனியாக ஜாப் டைப்பிங் செய்து வந்தேன். அதற்கடுத்து கம்ப்யூட்டர் டி.டி.பி சென்டர் நடத்தி பிள்ளைகளை வளர்த்து, படிக்க வைத்தேன்.
யோகா மீதான ஈடுபாடு பற்றி?
எனக்கு உடல்நலத்தில் அக்கறை அதிகம். 35 வயதில் இருந்து யோகா வகுப்புகளுக்குச் சென்றேன். என் தோழிகளுக்கும் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வழிகள் சொல்வேன். ஓய்வு நேரங்களில் கவிதைகள் எழுதுவேன். ஆனால், அவை முழுவதும் சோக கீதங்களாக இருப்பதைப் பார்த்து, அதைத் தவிர்த்தேன்.
மனதை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வதற்கு வழி தேடியபோது தியானம் உதவியது. அதை மற்றவர் களுக்கும் சொல்லிக்கொடுக்க நினைத்தேன். பெரியவர் களுக்கும், சிறுவர்களுக்கும் தொடர்ந்து தியான வகுப்புகள் எடுத்து வந்தேன். அதற்கு கிடைத்த வரவேற்பால் யூடியூப் சேனல் ஆரம்பித்து அதில் தியானம் பற்றி எடுத்துச் சொல்ல ஆரம்பித்தேன்.
இதற்கிடையில் யோக முத்திரைகளை கற்றுக் கொண்டு, அதை இரண்டு வருடங்களாகப் பயிற்சி செய்து பலனடைந்தேன். அதைப் பற்றிய வீடியோக்களையும் யூடியூப் சேனலில் பதிவிட்டேன். எனது குடும்பத்தினர் அனைவரும் யோகா, தியானம் மற்றும் முத்திரைகள் செய்து பயன் அடைகிறார்கள்.
சில வருடங்களுக்கு முன்பு மகனுடைய பணி நிமித்தம் காரணமாக ஹங்கேரிக்குச் செல்ல நேர்ந்தது. அங்கே மகன், மருமகள் மற்றும் பேரக்குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக இருக்கிறேன். அங்கேயும் ஹங்கேரி வாழ் இந்தியர்களுக்கு என்னால் இயன்றபோது தியானம், முத்திரைகள் பற்றிச் சொல்லி வருகிறேன். இதை சேவையாகக் கருதியே செய்கிறேன். வாட்ஸ்ஆப் மூலமாக தொடர்பு கொள்பவர்களுக்கும், எனது தியான பயிற்சி வகுப்பில் இருப்பவர்களுக்கும் தேவையான வாழ்வியல் ஆலோசனைகளையும் வழங்கி வருகிறேன்.
கிடைத்த பாராட்டுக்கள், அங்கீகாரங்கள் பற்றி?
கவிதைகள், பாடல்கள் எழுதும் திறன் மூலம் வானொலிகளில் பேசும் வாய்ப்பு கிடைத்தது. எனது யூடியூப் சேனலில் குழந்தைகளுக்கான கதைகள் பதிவிடுவதை அறிந்து, ஹங்கேரி தமிழ் சங்கத்தில் உரையாற்ற அழைப்பு விடுத்தார்கள். அங்கு நான் பேசியதற்கு பல தரப்பிலும் பாராட்டுக்கள் குவிந்தன.
இந்த வயதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவதன் ரகசியம் யோகா மட்டும்தானா?
எனக்கு இப்போது 63 வயதாகிறது. வயதை ஒரு எண்ணாக மட்டும் நினைப்பவள் நான். காலையில் தியானம், யோகா, நடைப்பயிற்சி செய்வதை தினமும் வழக்கமாகக் கொண்டுள்ளேன். எப்போதும், எந்த நிலையிலும் நேர்மறை எண்ணங்களை மட்டுமே கொண்டுள்ளேன். தைரியமாக எந்த விஷயத்தையும் அணுகுவேன்.
நம் வாழ்க்கையில் வரும் எல்லாப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளும், நம்மிடம்தான் இருக்கிறது என்று எண்ணுவேன். இந்த எண்ணமே என் வாழ்க்கையில் நடந்த பல சிரமங்களைக் கடந்து வருவதற்கு வழி காட்டியது. இறை நம்பிக்கையும் என்னை வழி நடத்திச் செல்கிறது. இதுவே எனது சுறுசுறுப்புக்கு காரணம்.
உங்களது மற்ற பொழுதுபோக்குகள் என்ன?
ஒயர் பைகள், பேன்சி நகைகள், உல்லன் பேக், பர்ஸ், மிதியடி உள்ளிட்டவை செய்து வருகிறேன். எனது குடும்பத்தினர் அனைவரும் எனக்கு உதவியாக இருக்கின்றனர்.
ஹங்கேரியில் வசிக்கிற அனுபவம் பற்றி?
ஹங்கேரியில் வசிப்பது ஒரு வித்தியாசமான அனுபவம். அங்கு பனிப் பொழியும் போது சிறு குழந்தையாக மாறி விடுவேன். வெளியில் சென்று பனியில் சிவலிங்கம் செய்வேன். ஒரு வாரம் வரை அப்படியே இருக்கும். அதைப் பார்க்கும்போது மனம் மகிழ்ச்சியாக இருக்கும். நான் எப்போதும் இயற்கையோடு இணைந்து இருக்கும் குணம் கொண்டவள். அதனால் இங்கு இருப்பது எனக்கு பிடித்து இருக்கிறது. இருந்தாலும் தாய் மண்ணில் இருக்கும் உணர்வு தனிதான்.
உங்கள் வாழ்க்கை அனுபவத்தின் மூலம் பெண்களுக்கு சொல்ல நினைப்பது என்ன?
பெண்கள் தைரியம், தயக்கமின்மையோடு நடந்து கொண்டால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம். குடும்பத்தைப் பார்த்துக் கொள்வதுடன், தங்களையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும். சிறு வயதில் இருந்து பெண் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையில் சமூக செயல்பாடுகள் குறித்துச் சொல்லி வளர்க்க வேண்டும்.