கேரளாவில் மீண்டும் நிலச்சரிவு: வாகனங்கள் செல்லாததால் உயிர்ச்சேதம் தவிர்ப்பு
நிலச்சரிவால் பாறைகள் உருண்டு விழுந்த போது வாகனங்கள் எதுவும் செல்லாததால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.
திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த 30-ம் தேதி நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி உள்ளிட்ட கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லபட்டன. நிலச்சரிவால் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 400-ஐ தாண்டியது. மண்ணில் புதைந்தவர்கள், காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட உடல்களை மீட்பு குழுவினர் மீட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கேரளாவில் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. கேரளா மாநிலத்தின் மூணாறு-கொச்சி நெடுஞ்சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவால் ராட்சத பாறைகள் உருண்டு சாலைகளில் விழுந்தன. இதனால் போக்குவரத்து 5 மணிநேரமாக பாதிக்கப்பட்டுள்ளது. பாறைகள் உருண்டு விழுந்த போது வாகனங்கள் எதுவும் செல்லாததால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.