பழத்தோலில் ஹேண்ட் பேக் தயாரிக்கும் அஞ்சனா
பழத்தோல் ஹேண்ட் பேக்குகள் முழுவதும் இயற்கையோடு இணைந்தவை. இதனால் சுற்றுச்சூழலுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது. பராமரிப்பதற்கும் எளிதாக இருக்கும். இந்த பைகள் குறைந்தது பத்து ஆண்டுகள் வரை ஆயுள் கொண்டது.
பெண்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும்போது முதலில் எடுப்பது அவர்களுடைய ஹேண்ட் பேக் எனப்படும் கைப்பையை தான். பெண்களின் அன்றாட வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கும் ஹேண்ட் பேக், பலவிதமான மூலப்பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. மிருகங்களின் தோல், துணிகள் என பல்வேறு பொருட்களைக்கொண்டு தயாரிக்கப்பட்ட பெரும்பாலான ஹேண்ட் பேக்குகள் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடியவை என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இவற்றை தவிர்த்து, இயற்கையாக கிடைக்கும் பழங்களின் மேல் தோலைக்கொண்டு ஹேண்ட் பேக் தயாரித்து வருகிறார் சென்னையை சேர்ந்த அஞ்சனா அர்ஜுன்.
சென்னை அமெரிக்கன் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்து, சிங்கப்பூரில் பேஷன் துறையில் பட்டம் பெற்று, தற்போது இளம் தொழில் முனைவோராக ஜொலித்துக் கொண்டிருக்கிறார். அவரது பேட்டி.
பழத்தோலில் இருந்து ஹேண்ட் பேக் தயாரிக்கும் எண்ணம் தோன்றியது எப்படி?
பள்ளிப் பருவத்தில் கைவினைப் பொருட்கள் தயாரிப்பதில் ஆர்வம் இருந்தது. கல்லூரியில் படித்தபோது இந்த எண்ணம் அதிகமானது. பேஷன் துறையில் பட்டம் பெற்ற பிறகு, எதிர்காலத்தில் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் தொழில் செய்ய வேண்டும் என தோன்றியது. 'வேண்டாம்' என்று தூக்கி எறியும் பொருட்களை பலரும் மறுசுழற்சி செய்து பயன்படுத்தி வருகின்றனர். நாமும் அவ்வாறு செய்யலாமே என்று எண்ணினேன். அப்போதுதான் பழங்களின் தோல்களைக்கொண்டு மறுசுழற்சி பொருளாக ஹேண்ட் பேக் தயாரிக்கும் எண்ணம் தோன்றியது.
பழத்தோல்களைத் தேர்வு செய்ய காரணம் என்ன?
எல்லோரும் பழங்களை அதிகமாக பயன்படுத்துகிறோம். அவற்றின் தோல்களை தேவையில்லை என்று தூக்கி எறிந்து விடுகிறோம். 'இதை வைத்து ஏதாவது செய்யலாமே?' என்று தோன்றியது. சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத, மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களில் பழத்தோல்களும் ஒன்று. நான் செய்யக்கூடிய தொழில் புதிதாகவும், மக்களுக்கு பயன்படும்படியாகவும் இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருந்தேன். அதனால் பழத்தோல்களைத் தேர்ந்தெடுத்தேன்.
பழத்தோல்களை எவ்வாறு சேகரிக்கிறீர்கள்?
தமிழகத்தில் பழத்தோல்கள் குறைவாகவே கிடைக்கிறது. வெளிமாநிலம் மற்றும் வெளிநாட்டில் இருந்து அதிகப்படியான பழத்தோல்களை சேகரிக்கிறோம். பழச்சாறு தயாரிக்கும் நிறுவனங்களிடம் இருந்தும் பழத்தோல் பெறுகிறோம். அதை சுத்தம் செய்து பொடியாக தயாரிக்கிறோம். அதன் பிறகு தேவையான மூலப் பொருட்களைச் சேர்த்து பைகள் தயாராகிறது.
என்னென்ன பழங்கள் இதற்கு பயன்படுகின்றன?
அன்னாசி, ஆப்பிள், ஆரஞ்சு மற்றும் பல வகையான பழங்களின் தோல்களை உலர்த்தி பக்குவப்படுத்தி பொடியாக தயாரிக்கிறோம். இது சற்று சிரமமான வேலைதான். அதற்கான மூலப் பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் இருக்கிறது. சவாலாக இருந்தாலும், சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத ஒரு தொழில் செய்கிறேன் என்பதில் மனநிறைவு கிடைக்கிறது.
பழத்தோல் ஹேண்ட் பேக்குகளின் சிறப்புகள் என்ன?
பழத்தோல் ஹேண்ட் பேக்குகள் முழுவதும் இயற்கையோடு இணைந்தவை. இதனால் சுற்றுச்சூழலுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது. பராமரிப்பதற்கும் எளிதாக இருக்கும். இந்த பைகள் குறைந்தது பத்து ஆண்டுகள் வரை ஆயுள் கொண்டது.