கல்வியால் வாழ்வில் வென்ற வாணிப்பிரியா

பெண்களுக்கு கல்வி முக்கியமானது. நம்முடைய வறுமையை போக்குவதற்கு பல வழிகள் உள்ளன. ஆனால் சமூகத்தில் நமக்கான அங்கீகாரத்தை கல்வி மட்டுமே பெற்றுத்தரும்.

Update: 2023-05-28 01:30 GMT

ள்ளிப்பருவத்தில் தந்தையை இழந்து, சமூகத்தின் ஆதரவால் மருத்துவம் படித்து இந்திய ராணுவத்தில் மருத்துவராகப் பணியைத் தொடங்கி, தற்போது கேப்டனாகப் பணியாற்றி வருகிறார் மருத்துவர் வாணிப்பிரியா. தான் கடந்து வந்த பாதையைப் பற்றி அவரே கூறுகிறார்.

''தஞ்சாவூர் மாவட்டம், தாமரங்கோட்டை என்னுடைய சொந்த ஊர். என்னுடைய தந்தை விவசாயப் பணிகள் செய்து வந்தார். நான் பொருளாதார ரீதியில் பின்தங்கிய குடும்பத்தைச் சேர்ந்தவள்.

நான் பன்னிெரண்டாம் வகுப்பு படிக்கும்போதே தந்தை புற்றுநோய் பாதிப்பால் மறைந்தார். அவர் நோய்வாய்ப்பட்டிருந்த சமயத்தில், என்னுடைய படிப்பை நிறுத்தி எனக்கு திருமணம் செய்து வைக்குமாறு உறவினர்கள் எனது பெற்றோரை வற்புறுத்தினார்கள். ஆனால் 'பெண் குழந்தைகள் கல்வி கற்பது அவசியம்' என்பதில் என்னுடைய பெற்றோர்கள் உறுதியாக இருந்தனர்.

'மருத்துவராக வேண்டும்' என்பது என் கனவு. நன்றாகப் படித்து, பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 1173 மதிப்பெண்கள் பெற்றேன். எனக்கு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தது. என்னுடைய கனவை நிஜமாக்குவதற்கு, அகரம் அறக்கட்டளையும், எனது ஊர் மக்களும் உதவி செய்தனர். அரசின் உதவித்தொகையும் எனது படிப்பிற்கு பக்கபலமாக இருந்தது. இவ்வாறு முயற்சி செய்து மருத்துவப் படிப்பை முடித்தேன்.

அதன் பின்னர் ஒரு தனியார் மருத்துவமனையில் பணியாற்றத் தொடங்கினேன். அதன் மூலம் கிடைத்த வருமானத்தில் எனது குடும்பத்தை சிறிது சிறிதாக வறுமையில் இருந்து மீட்டேன். ஆனால் 'இது மட்டும் போதாது. இந்த சமூகத்திற்கும் நாம் ஏதேனும் செய்ய வேண்டும்' என்ற எண்ணம் எனக்குள் எழுந்தது. அப்போது 'ராணுவத்தில் மருத்துவப் பணி' குறித்து என்னுடைய பேராசிரியர் கூறியிருந்தது நினைவுக்கு வந்தது. உடனடியாக அதற்கு விண்ணப்பித்தேன்.

ராணுவத்தில் மருத்துவராகப் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. இரண்டு ஆண்டுகளாக மருத்துவராகப் பணியாற்றிய பின்பு தற்போது கேப்டனாக உயர்ந்திருக்கிறேன். நாட்டிற்காகச் சேவை செய்யும் ராணுவ வீரர்களுக்கு மருத்துவ சேவை செய்ய கிடைத்த வாய்ப்பை, பெருமையுடனும், மகிழ்ச்சியுடனும் செய்து வருகிறேன்.

என்னுடைய விடுமுறை நாட்களில், ஊரகப் பகுதி கிராமங்களுக்குச் சென்று அங்குள்ள மக்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்து வருகிறேன்.

குழந்தைகள் பாதுகாப்பு, தன்னம்பிக்கை, பெண் கல்வி என்று என்னால் முடிந்தவரை சமூகத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன். பெண்களுக்கு கல்வி முக்கியமானது. நம்முடைய வறுமையை போக்குவதற்கு பல வழிகள் உள்ளன. ஆனால் சமூகத்தில் நமக்கான அங்கீகாரத்தை கல்வி மட்டுமே பெற்றுத்தரும்.

புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை என்னுடைய அப்பா எனக்கு அறிமுகப்படுத்தினார். நல்ல புத்தகங்களைப் படிக்கும்போது நம்மை நாமே அறிந்து கொள்ள முடியும்.

கல்வியோடு சிலம்பப் பயிற்சியும், கிட்டார் இசைக்கருவி வாசிக்கவும் கற்றுக்கொண்டேன். பெண்களின் வாழ்க்கையை உயர்த்துவதற்கு கல்வியே சிறந்த வழி என்பதற்கு நானே சாட்சியாக இருக்கிறேன்'' என்று புன்னகையோடு கூறினார் மருத்துவர் வாணிப்பிரியா.

Tags:    

மேலும் செய்திகள்