கலையில் கலக்கும் இரட்டையர்கள்
நாட்டிய நாடகம் என்பதே நடிப்பை அடிப்படையாகக் கொண்டதுதான். நாங்கள் பல நாட்டிய நாடகங்களில் நடித்திருக்கிறோம். அதனால் நடிப்பது இயல்பாகவே எங்களுக்கு மிகவும் பிடித்தமானது. எங்களின் பெற்றோர் மட்டுமில்லாமல், குடும்பத்தினர் பலரும் மேடைகளில் அதிக நேரத்தைச் செலவிட்டவர்கள்.;
கலையை மையமாகக்கொண்டு இயங்கிவரும் மயூரா மற்றும் அம்சா இருவரும் இரட்டையர்கள். சென்னையைச் சேர்ந்த இவர்கள், பரதநாட்டியத்தில் முத்திரை பதித்தவர்கள். விளம்பர மாடல்களாகவும், சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை நட்சத்திரங்களாகவும் ஜொலித்து வருகின்றனர்.
மூத்தவரான மயூரா, பயோமெடிக்கலில் பொறியியல் படிப்பை முடித்து, தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். 'வாழ்' என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். 'அவள் பெயர் சக்தி' என்ற நாடகத்தில் நடித்ததற்காகச் சிறப்பு விருதைப் பெற்றிருக்கிறார்.
இளையவர் அம்சா, பொருளாதாரத்தில் இளங்கலையும், தொழில் நிர்வாகத்தில் முதுகலையும் படித்து, சந்தைப்படுத்துதல் மற்றும் தகவல் தொடர்பு துறையில் பணியாற்றுகிறார்.
அவர்களிடம் உரையாடியதிலிருந்து…
"எங்கள் பூர்வீகம் காரைக்கால் என்றாலும், நாங்கள் சென்னையில்தான் பிறந்து வளர்ந்து, வசித்து வருகிறோம். எனது பாட்டி, தாய், தந்தை மூவரும் பரதநாட்டிய ஆசிரியர்கள். சிறு வயது முதலே அவர்களிடம் பரதம் பயின்று, கடந்த 17 ஆண்டுகளாக நடனம் ஆடி வருகிறோம். சென்னையில் உள்ள அனைத்து சபாக்களிலும் கலை நிகழ்ச்சிகள் செய்திருக்கிறோம். மேடை நாடகங்களில் நடிக்கிறோம். விளம்பரப்படங்கள் மற்றும் சின்னத்திரை தொடர்களில் நடித்து வருகிறோம்.
இசையைக் கொண்டு உடல் மற்றும் மனநலப் பிரச்சினைகளை குணப்படுத்த உதவும் 'மியூசிக் தெரபி' என்ற முறையின் மூலம் அடையாறு புற்றுநோய் மருத்துவமனை மற்றும் அரசு பொது மருத்துவமனையில் புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களுக்கு பிடித்த பாடல்களைப் பாடியிருக்கிறோம்" என்கிறார் மயூரா.
எப்போது நாட்டியத்தில் ஈடுபாடு வந்தது? எப்படிக் கற்றுக் கொண்டீர்கள்?
எங்கள் பாட்டியும், பெற்றோரும் நடன வகுப்புகளை நடத்தும்போது குழந்தைப் பருவத்தில் இருந்தே, நாங்களும் உடன் சேர்ந்து தாளம் போட்டு, நடனம் ஆடி விளையாடுவோம். இவ்வாறு சிறு வயது முதலே இசை மற்றும் நடனத்தைப் பார்த்து வளர்ந்ததால், எங்களுக்கு இயல்பாகவே கலையின் மீது ஆர்வம் வந்தது. தந்தையிடம்தான் முழு கலையையும் கற்றுத் தேர்ந்தோம். எங்களை நடனக் கலைஞர்களாக உருவாக்கியதும், நாங்கள் பல கலைகளிலும் ஈடுபடுவதற்கு உறுதுணையாக இருப்பதும் அவர்தான்'' என்ற அம்சாவிடம்,
விளம்பரத்துறையில் மாடலாக ஆன அனுபவங்கள் பற்றிப் பேசும்போது, "ஒருமுறை ஆரோக்கியம் தொடர்பான ஒரு விளம்பரத்துக்கு மாடலாக என்னைத் தேர்ந்தெடுத்தார்கள். நான் தினமும் பள்ளிக்கு சைக்கிளில் சென்றதைப் பார்த்ததால் எனக்கு அந்த வாய்ப்பை வழங்கினார்கள். சைக்கிள் ஓட்டுவது போன்ற எனது புகைப்படத்தை 2017-ம் ஆண்டு ஒரு பத்திரிகையின் அட்டைப் படத்தில் வெளியிட்டார்கள். அப்போது மாடலிங் பற்றி எதுவும் தெரியாவிட்டாலும், சில ஆண்டுகள் கழித்து, 'நாம் ஏன் அதை முயற்சிக்கக் கூடாது?' என்ற எண்ணம் வந்தது. எனவே மாடலிங் துறையில் ஈடுபட ஆரம்பித்தோம்" என்கிறார்.
நடிக்க வந்தது பற்றி?
''நாட்டிய நாடகம் என்பதே நடிப்பை அடிப்படையாகக் கொண்டதுதான். நாங்கள் பல நாட்டிய நாடகங்களில் நடித்திருக்கிறோம். அதனால் நடிப்பது இயல்பாகவே எங்களுக்கு மிகவும் பிடித்தமானது. எங்களின் பெற்றோர் மட்டுமில்லாமல், குடும்பத்தினர் பலரும் மேடைகளில் அதிக நேரத்தைச் செலவிட்டவர்கள். எனவே 'நாம் புதிய பரிமாணத்தில் முயற்சி செய்தால் என்ன?' என்ற யோசனையின் அடிப்படையில்தான், பரிசோதனை முயற்சியாக சின்னத்திரை தொடர்களில் நடித்தோம்.
முதல் முதலில் சின்னத்திரை தொடரில் நடிப்பதற்காக நான்தான் தேர்வானேன். எனக்கு தங்கையாக நடிப்பதற்காக, நடிகை தேர்வு நடந்து கொண்டிருந்தது. அப்போது, என்னை படப்பிடிப்பு நடத்தும் இடத்தில் விட்டுச்செல்வதற்காக வந்திருந்த எனது அக்கா மயூராவைப் பார்த்த அவர்கள், 'இவங்க பொருத்தமாக இருக்காங்களே, இவங்களே உங்க தங்கையா நடிக்கட்டுமே' என்று வாய்ப்பு அளித்தார்கள். இவ்வாறுதான் சின்னத்திரையில் எங்களின் நடிப்புப் பயணத்தைத் தொடங்கினோம்'' என்றார் தங்கை அம்சா.
அக்கா மயூரா தொடர்ந்து பேசும்போது, "அருவி திரைப்பட இயக்குநரின் இரண்டாவது படைப்பான 'வாழ்' திரைப்படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடிப்பதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு சில படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறோம்" என்றார்.
உங்கள் மற்ற திறமைகள் பற்றி சொல்லுங்கள்?
''பாட்டு, பரதம், மாடலிங் தவிர இருவரும் 'களரிப்பயிற்று' எனப்படும் தற்காப்புக் கலையை கற்றிருக்கிறோம். வாள் வீச்சு, சிலம்பம் உள்ளிட்ட கலைகள் களரிப்பயிற்றின் கீழ்தான் வரும். இதுபோன்ற தற்காப்புக் கலையைப் பெண்கள் கற்றுக்கொள்வது அவசியம். இதன்மூலம் ஆரோக்கியமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கலாம்.
எங்களின் குரு வசந்த், முறையாக எங்களுக்கு களரிப்பயிற்றைக் கற்றுக் கொடுக்கிறார். நாங்கள் இருவருமே நன்றாக நீச்சல் அடிப்போம். அது எங்களுக்குப் பிடித்தமான விஷயமும்கூட. சிறு வயதில் நாங்களாகவே முயற்சி செய்து நீச்சல் கற்றுக் கொண்டோம்.
எங்கள் நாட்டியப் பள்ளியின் நிகழ்ச்சிகளுக்கு ஒப்பனை, உடையலங்காரம், மேடை அலங்காரம் உள்ளிட்ட எல்லா பணிகளையும் செய்து பழகியதில், ஒரு நிகழ்ச்சிக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் எங்களால் சிறப்பாகச் செய்ய முடியும். சிங்கப்பூரில் நடைபெற்ற நாட்டிய நாடகத்துக்கு நான் மேடை அலங்காரம் செய்தேன்'' என்றார் அம்சா.
''அந்த மூன்று மணி நேர நாட்டிய நாடகத்துக்கான உடையலங்காரத்தை நான் செய்தேன். அதைப் பார்த்து பலரும் பாராட்டினார்கள்'' என்கிறார் மயூரா.
உங்களுக்குக் கிடைத்துள்ள விருதுகள், அங்கீகாரங்கள் பற்றி?
'யுவஸ்ரீ கலா பாரதி' விருது, வளரும் கலைஞர்களுக்கான 'தருணி கலா விபஞ்சி' விருது போன்ற பல விருதுகள் பெற்றிருக்கிறோம். சென்னை கிருஷ்ண கான சபா நடத்திய 'இளமையில் திறமை' என்ற போட்டியில் வென்றபோது 'மீனாக்ஷி சுந்தரம் எண்டோவ்மெண்ட்' பரிசு வாங்கினோம்.
உங்களின் லட்சியம் என்ன?
நாட்டியத்திலும், இசையிலும் பல சாதனைகள் படைக்க வேண்டும். எங்கள் நாட்டியப் பள்ளியில் ஆர்வமுள்ள ஏழைக் குழந்தைகளுக்கு கட்டணமின்றி பயிற்சி அளிக்கிறோம். அதையும், 'மியூசிக் தெரபி' மூலமாக மனநலத்தையும், உடல் நலத்தையும் மேம்படுத்த நாங்கள் செய்யும் சேவையையும் மேலும் விரிவாக்க வேண்டும். இவையே எங்களின் லட்சியம்'' என்று சகோதரிகள் இருவரும் ஒருமித்த குரலில் கூறினார்கள்.