டிரெண்டிங்கில் இருக்கும் பெயர்ப்பலகை தயாரிப்பு தொழில்

தனிப்பட்ட பெயர்ப்பலகைகள் வடிவமைப்பது பற்றி இணையத்தில் ஏராளமான பதிவுகள் உள்ளன. இதற்கென்றே சிறப்பு வகுப்புகளும் நடைபெறுகின்றன. அவற்றை பயன்படுத்திக்கொண்டு உங்கள் கற்பனைத் திறனுக்கேற்ற அழகிய பெயர்ப்பலகைகளை வடிவமைக்க முடியும்.

Update: 2023-07-16 01:30 GMT

னித்துவமாக வடிவமைக்கப்பட்ட பரிசுப் பொருட்கள் மற்றும் வீட்டு அலங்காரப் பொருட்களுக்கு எல்லா காலத்திலும் மவுசு உண்டு. அந்த வகையில் திருமணம், புதுமனைப் புகுவிழா போன்ற விசேஷங்களுக்குச் செல்லும்போது அலங்கரிக்கப்பட்ட பெயர்ப்பலகைகளை பரிசாக வழங்குவது தற்போது டிரெண்டிங்கில் இருக்கிறது. இத்தகைய பெயர்ப்பலகைகளை கைவினைப் பொருட்கள்போல வீட்டிலேயே தயாரிக்க முடியும். நீங்கள் கற்பனைத்திறன் நிறைந்தவர் என்றால், இதையே உங்களுக்கான தொழில் வாய்ப்பாகவும் பயன்படுத்திக்கொள்ளலாம். இதற்கு அதிக முதலீடு தேவையில்லை. கற்பனைத் திறனும், பொறுமையும் மட்டுமே முக்கியமானது.

தனிப்பட்ட பெயர்ப்பலகைகள் வடிவமைப்பது பற்றி இணையத்தில் ஏராளமான பதிவுகள் உள்ளன. இதற்கென்றே சிறப்பு வகுப்புகளும் நடைபெறுகின்றன. அவற்றை பயன்படுத்திக்கொண்டு உங்கள் கற்பனைத் திறனுக்கேற்ற அழகிய பெயர்ப்பலகைகளை வடிவமைக்க முடியும். தொடர்ந்து இதில் ஈடுபட்டால் பெயர்ப்பலகைகள் வடிவமைப்பது தொடர்பான நுணுக்கங்களை தெரிந்துகொள்ள முடியும். இதை வீட்டில் இருந்தபடியே பகுதி நேர தொழிலாகவோ, முழு நேர தொழிலாகவோ செய்து வருமானம் ஈட்டலாம்.

சந்தைப்படுத்தும் முறைகள்:

நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வீட்டு விசேஷங்களுக்கு இத்தகைய பெயர்ப்பலகைகளை தயார் செய்து பரிசாக அளிக்கலாம். அதை அவர்கள் பயன்படுத்தும்போது அது மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கும். அதன்மூலம் உங்களுக்கு புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். இதுதவிர கைவினைப் பொருட்களுக்கான கண்காட்சிகள் நடக்கும்போது உங்கள் தயாரிப்புகளை அங்கு விற்பனைக்கு வைக்கலாம். பரிசுப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளை அணுகி ஆர்டர் பெறலாம். இதுமட்டுமில்லாமல் உங்கள் தயாரிப்புகளை சமூக வலைத்தளங்களில் காட்சிப்படுத்தினால், அதன் மூலமாகவும் அதிக வாடிக்கையாளர்களை கவர முடியும்.

பெயர்ப்பலகை தயாரிக்க தேவையான பொருட்கள்:

ஆர்ட் கிளே

ஆர்ட் கிளே டூல்ஸ்

மரப்பலகை

பசை

சிலிக்கான் அச்சுகள்

அக்ரலிக் மற்றும் மெட்டாலிக் வண்ணங்கள்

பிரஷ்

வார்னிஷ்

செய்முறை:

உங்களுடைய விருப்பத்திற்கு ஏற்ற வடிவில் மரப்பலகையை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.

அதன்மேல் உங்களுக்குப் பிடித்த வண்ணத்தைப் பூசி நன்றாக உலர விடுங்கள்.

பின்னர் ஆர்ட் கிளே கொண்டு அலங்கரிப்பதற்கான வடிவங்களை உருவாக்குங்கள் (சிலிகான் அச்சு மூலமாகவும் உங்களுக்கு விருப்பமான வடிவங்களை செய்யலாம்). அவை நன்றாக காய்ந்த பிறகு பசைக்கொண்டு அவற்றை மரப்பலகையில் ஒட்டுங்கள்.

பின்பு பெயர்களுக்கான எழுத்துக்களை ஆர்ட் கிளே கொண்டு அழகாக உருவாக்குங்கள். அவற்றின் மீது விரும்பிய வண்ணத்தை பிரஷ் கொண்டு தீட்டுங்கள்.

தேவைப்படும் இடங்களில் கைவிரல்களால் மெட்டாலிக் வண்ணங்கள் கொண்டு ஹைலைட் செய்யுங்கள். இவை நன்றாக உலர வேண்டும்.

கடைசியாக, நீங்கள் உருவாக்கிய பெயர்ப்பலகை மீது வார்னிஷ் அடித்து நன்றாக உலர வையுங்கள். இப்போது கண்களைக் கவரும் பெயர்ப்பலகை தயார்.

Tags:    

மேலும் செய்திகள்