இனிமை தரும் இன்பச் சுற்றுலா

இந்தியா முழுவதிலும் இருக்கும் அற்புதமான இடங்களும், கோவில்களும் என்றும் மனநிறைவை கொடுக்கக்கூடியவை. கொஞ்சம் செலவு செய்து சுற்றுலா சென்று வந்தால், பல்வேறு விதமான சந்தோஷங்கள் நம் வாழ்வில் உண்டாகும் என்பது நிதர்சனமான உண்மை.;

Update:2023-05-07 07:00 IST

விடுமுறை நாட்களில் வீட்டுக்குள்ளேயே இருந்து, மொபைல் விளையாட்டுகள் மற்றும் சமூக வலைத்தளங்களில் மூழ்குபவர்கள் அதிகம். இதனை தவிர்த்து இன்பச்சுற்றுலா செல்வதால் பல இடங்களையும், அங்குள்ள மக்களையும் பற்றி தெரிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். உடலும், மனமும் புத்துணர்வு அடையும். சுற்றுலா செல்வது குறித்த தனது அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார் சென்னையில் ஆன்மிக மற்றும் இன்பச்சுற்றுலா ஏற்பாடு செய்யும் நிறுவனம் நடத்தி வரும் ஸ்ரீப்ரியா ரமேஷ்.

"என்னுடைய அப்பா தனது வேலையின் காரணமாக, நாடு முழுவதும் பயணம் செய்வார். அவ்வாறு அவர் சென்று வந்த இடங்களின் பெருமையையும், சிறப்பையும் எனக்கு விவரமாக எடுத்துரைப்பார். என்னுடைய கணவரும் ஆன்மிக சுற்றுலாவில் ஆர்வம் கொண்டவர். இதனால் எனக்கும் சுற்றுலா செல்வதில் விருப்பம் உண்டானது. அதன்படி, ஆரம்பத்தில் பல இடங்களுக்கு ஒரு நாள் சுற்றுலா சென்று வந்தோம். பின்னர் சில மாதங்கள் கழித்து மீண்டும் இயற்கை வளம், ஆன்மிகம், இன்பச்சுற்றுலா என மூன்று நாட்கள் பயணமாக சென்றோம். அது மன நிறைவைத் தந்து, மகிழ்ச்சியையும் அதிகரிப் பதாக இருந்தது. இத்தகைய அனுபவம்தான் சுற்றுலா துறையை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற ஆசையை எனக்குள் தூண்டியது.

இந்தியா முழுவதிலும் இருக்கும் அற்புதமான இடங்களும், கோவில்களும் என்றும் மனநிறைவை கொடுக்கக்கூடியவை. கொஞ்சம் செலவு செய்து சுற்றுலா சென்று வந்தால், பல்வேறு விதமான சந்தோஷங்கள் நம் வாழ்வில் உண்டாகும் என்பது நிதர்சனமான உண்மை. அந்த வகையில், 30 பேருடன் இணைந்து மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பண்டரிபுரம் சென்று இறைவன் பாண்டுரங்கனை தரிசனம் செய்தது என்னால் மறக்க முடியாதது" என்று கூறிய ஸ்ரீப்ரியா ரமேஷ் சுற்றுலா செல்பவர்களுக்காக கூறும் ஆலோசனைகள் இங்கே...

கோடை காலத்தில் வெப்பம் அதிகமாக இருக்கும் என்பதால், நீங்கள் செல்லப்போகும் இடங்களின் வெப்பநிலை குறித்து முன்பே தெரிந்துகொள்வது நல்லது. குளிர்ச்சியான இடங்களுக்கு பயணம் செய்வது மகிழ்ச்சியை அதிகரிக்கும்.

கோடைகால சுற்றுலாவில், மலைவாசஸ்தலங்கள் மற்றும் கடலோர சுற்றுலா பகுதிகளுக்கு செல்வதற்கு முக்கியத்துவம் கொடுக்கலாம்.

கோடை காலங்களில் ஏற்படும் பிரச்சினைகளில் உடலில் ஏற்படும் நீரிழப்பு முக்கியமானது. எனவே நீங்கள் எங்கு சென்றாலும் சுத்தமான தண்ணீரை உடன் எடுத்துச் செல்வது சிறந்தது.

சுற்றுலா செல்லும் இடங்களில் விற்பனை செய்யப்படும் உணவுகளை சாப்பிடுவதில் உங்களுக்கு ஆர்வம் ஏற்படலாம். அதேசமயம், கோடைகாலத்தில் வெளியே வாங்கி சாப்பிடும் உணவுகளில் கவனமாக இருப்பதும் அவசியம். இந்த விஷயத்தில் உங்களுடன் வரும் பயண ஏற்பாட்டாளர் கூறும் வழிமுறைகளை பின்பற்றுவது நல்லது.

நீங்கள் எடுத்துச்செல்லும் மொபைல், கேமரா போன்றவற்றில் தேவையான அளவு சார்ஜ் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். கூடுதலாக பவர் பேங்க் கொண்டு செல்வது உதவியாக இருக்கும்.

Tags:    

மேலும் செய்திகள்