மாற்றி யோசி - செல்வாம்பிகா

கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கு காரணமாக அதிகம் பாதிக்கப்பட்ட தொழில்களில் இதுவும் ஒன்று. 50 பேர்தான் விசேஷத்தில் கலந்துகொள்ள முடியும் என்ற நிலை இருந்ததால் அதற்கேற்ப கட்டணத்தை மாற்றினோம். வழக்கமான பாணியில் நிகழ்ச்சிகளை நடத்த முடியாது என்பதால், பலவகையிலும் மாற்றி யோசித்து தீர்வுகளைக் கண்டோம். திருமண மண்டபத்துக்கு பதிலாக வீட்டின் மேல் தளம், தோட்டம் ஆகிய இடங்களில் திருமணம் நடத்தலாம் என்று நாங்கள் கூறிய யோசனைகள் நல்ல வரவேற்பைப் பெற்றது.;

Update:2022-10-23 07:00 IST

"நேரம் விலைமதிப்பு இல்லாதது. மற்றவர்களின் நேரத்தை மிச்சப்படுத்தும் வேலையை, எனது தொழிலாக செய்வதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன்" என்று புன்னகையோடு கூறுகிறார் செல்வாம்பிகா.

சிவகாசியைச் சேர்ந்த இவர் மின்னணுத் தகவல் தொடர்பியலில் பொறியியல் படிப்பை முடித்துவிட்டு, சென்னையில் இருக்கும் சில ஐ.டி நிறுவனங்களில் பணியாற்றினார். 'சொந்தமாக தொழில் செய்ய வேண்டும்' என்று சிறுவயது முதல் தனது மனதில் இருந்த கனவை நனவாக்குவதற்காக வேலையில் இருந்து விலகினார்.

நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து நடத்திக்கொடுக்கும் (ஈவண்ட் பிளானிங்) நிறுவனத்தைத் தொடங்கி, கடந்த ஐந்து ஆண்டுகளாக வெற்றிகரமாக நடத்தி வருகிறார். தனது நிறுவனத்தில் பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்து அதிக அளவில் பணியமர்த்தி உள்ளார்.

சினிமா மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் பலர், இவருடைய நிறுவனத்தின் வாடிக்கையாளர்களாக இருக்கின்றனர். இளம் தொழில் முனைவோருக்கு முன்னுதாரணமாக விளங்கும் செல்வாம்பிகாவுடன் ஒரு சந்திப்பு.

"2009-ம் ஆண்டு வேலைதேடி சென்னை வந்தேன். தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் 2016-ம் ஆண்டு வரை பணியாற்றினேன். அதன்பிறகு அழகுசாதனப் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தின் வணிகப்பிரிவில் ஓராண்டு வேலை செய்தேன். சொந்தமாக தொழில் தொடங்குவதற்கான அனுபவத்தை அங்கு பெற்றேன்.

எனது கணவர் அமெரிக்காவில் மென்பொறியாளராக பணியாற்றுகிறார். எனக்கும் அங்கு பணிபுரிய வாய்ப்பு வந்தது. அதை மறுத்துவிட்டு சொந்தமாகத் தொழில் தொடங்கினேன். எங்களுக்கு நான்காம் வகுப்பு படிக்கும் மகன் இருக்கிறான்.

'ஈவண்ட் பிளானிங்' நிறுவனம் ஆரம்பிக்க காரணம் என்ன?

'தொழில் தொடங்க வேண்டும்' என்ற ஆசை சிறுவயது முதல் இருந்தது. புதுப்புது விஷயங்களை செய்வதில் எனக்கு ஆர்வம் அதிகம். இந்த துறை அதற்கு சரியான வாய்ப்பாக இருக்கும் என்று நினைத்தேன். வருமானம் ஈட்டுவதற்காக மட்டும் இல்லாமல், பலருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தருவதோடு, நிறைய புதிய விஷயங்களையும் செய்யலாம் என்பதால் இந்த தொழிலைத் தேர்ந்தெடுத்தேன்.

வீட்டில் ஏதாவது விசேஷம் என்றால், அதை மட்டுமே முன்னிலைப்படுத்தி மற்ற எல்லா வேலைகளையும் 'இந்த விசேஷம் முடிந்த பிறகு பார்த்துக்கொள்ளலாம்' என்று தள்ளிப்போடுவார்கள். ஆனால் எங்களைப் போன்ற நிறுவனங்கள், நிகழ்ச்சியை நடத்தும் பொறுப்பு முழுவதையும் எடுத்துக் கொள்வதால், விசேஷ வீட்டினர் விருந்தினர்போல நிகழ்ச்சிக்கு வந்தால் போதும். அவர்களின் அன்றாட வேலைகள் எந்த பாதிப்பும் இல்லாமல் வழக்கம்போல நடைபெறும். இவ்வாறு வாடிக்கையாளர்களின் நேரத்தை நாங்கள் மிச்சப்படுத்திக் கொடுக்கிறோம்.


ஐந்து ஆண்டுகளில் நீங்கள் சந்தித்த சவால்கள் என்ன?

கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கு காரணமாக அதிகம் பாதிக்கப்பட்ட தொழில்களில் இதுவும் ஒன்று. 50 பேர்தான் விசேஷத்தில் கலந்துகொள்ள முடியும் என்ற நிலை இருந்ததால் அதற்கேற்ப கட்டணத்தை மாற்றினோம். வழக்கமான பாணியில் நிகழ்ச்சிகளை நடத்த முடியாது என்பதால், பலவகையிலும் மாற்றி யோசித்து தீர்வுகளைக் கண்டோம். திருமண மண்டபத்துக்கு பதிலாக வீட்டின் மேல் தளம், தோட்டம் ஆகிய இடங்களில் திருமணம் நடத்தலாம் என்று நாங்கள் கூறிய யோசனைகள் நல்ல வரவேற்பைப் பெற்றது. வீட்டிலேயே நெருங்கிய உறவுகள் மட்டும் இணைந்து, குடும்ப நிகழ்ச்சிகளை நடத்தியதை வாடிக்கையாளர்கள் மகிழ்ந்து அனுபவித்தார்கள்.

இவ்வாறு, ஊரடங்கு காலத்தை எதிர்கொண்டது மட்டுமே மிகப்பெரிய சவாலாக இருந்தது. மற்ற பிரச்சினைகளுக்கு 'திட்டமிட்டு செயல்படுதல்' மூலம் எளிதாக தீர்வு கண்டோம்.

உங்கள் நிறுவனத்தில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் தருவதன் காரணம் என்ன?

தற்போது எல்லாத் துறைகளிலும் பெண்கள் இருக்கிறார்கள். சில துறைகளில், குறிப்பிட்ட வேலையை பெண்கள் செய்ய முடியாது என்ற நிலை இருக்கும். ஆனால் 'எனது தொழிலில் உள்ள எல்லா பணிகளையும் பெண்களே செய்ய முடியும்' என்பதை நிரூபிக்க விரும்பினேன். அதன் காரணமாகவே பெண்களை அதிகம் பணியமர்த்தினேன்.

பெண்கள் ஆக்கப்பூர்வமானவர்கள். வாடிக்கையாளரைப் புரிதலோடு சிறப்பாக அவர்களால் கையாள முடியும். நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் அனைத்தையும் ஒருங்கிணைக்கும் வேலையைக்கூட பெண்கள்தான் செய்கிறார்கள். திட்டமிடும் திறன் பெண்களுக்கு சிறப்பாக இருப்பதாக நான் உணர்வதால், அதை ஊக்குவிக்க மேலும் பல பெண்களை பணியமர்த்த எண்ணியிருக்கிறேன்.

உங்களுடைய வெற்றியின் ரகசியம் என்ன?

ஏதாவது ஒரு விஷயத்தைச் செய்து முடிக்க வேண்டும் என்று நினைத்தால், எவ்வளவு சவால்கள் வந்தாலும் அவற்றை சமாளித்து செய்வேன். நான் கடின உழைப்பை நம்புபவள். ஒரு செயலை முயற்சித்து தொடர்ந்து செய்தால், வெற்றிகரமாக முடிக்கலாம் என்று எண்ணுவேன். கடின உழைப்பையும், தொடர் செயல்பாட்டையும் நம்புகிறவர்கள் எந்த சூழலிலும் வெற்றி பெறுவார்கள். அவர்கள் எதிலும் சாதிக்க முடியும் என்று உறுதியாக நம்புகிறேன்.

சுய தொழில் தொடங்க விரும்பும் பெண்களுக்கு உங்களின் ஆலோசனை என்ன?

சுய தொழில் தொடங்க விரும்பும் பெண்கள், முதலீட்டுக்காக காத்திருக்கத் தேவையில்லை. உங்கள் யோசனை நன்றாக இருந்தால், அதற்கான வழி தானாகக் கிடைக்கும். அதனால் தயங்காமல் களத்தில் இறங்குங்கள். 

Tags:    

மேலும் செய்திகள்