குழந்தைகளை அருங்காட்சியகத்திற்கு அழைத்துச் செல்வதன் அவசியம்

அருங்காட்சியகங்கள் குழந்தைகளின் கேள்வி கேட்கும் திறனை அதிகரிக்கும். அவற்றுக்கான பதிலைத் தாங்களே கண்டுபிடிக்கும் நம்பிக்கையை வழங்கும்.

Update: 2023-05-14 01:30 GMT

ருங்காட்சியகங்கள், அறிவை விரிவுபடுத்துவதற்கான தகவல்கள் நிறைந்த மையங்களாகும். குறிப்பாக, குழந்தைகளுக்கு அருங்காட்சியகங்கள் அவர்கள் அறியாத உலகத்தை அறிமுகப்படுத்துகின்றன. அவர்களின் கற்பனையைத் தூண்டுகின்றன. மதிப்புமிக்க கற்றல் அனுபவங்களை அவர்களுக்கு வழங்குகின்றன. குழந்தைகளை அருங்காட்சியகங்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டியதன் அவசியம் குறித்து தெரிந்துகொள்வோம்.

  • இந்தக் கால குழந்தைகளுக்கு எதையும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் மேலோங்கி இருக்கிறது. நாள் முழுவதும் செல்போனில் நேரத்தைக் கழித்தாலும் மன நிறைவை அடையாத குழந்தைகளே தற்போது அதிகம். அவர்களுக்கு அருங்காட்சியகம் சிறந்த கல்வி அறிவை அளிக்கும். அருங்காட்சியகத்திற்கு ஒருமுறை சென்றால், குழந்தைகளுக்கு பல்வேறு விஷயங்களைப் பற்றிய ஆழமான புரிதல் கிடைக்கும்.
  • இன்றைய தலைமுறைக்கு 'டிஜிட்டல் கல்வி' என்பது சலிப்பை உண்டாக்கும் விஷயமாகவே உள்ளது. திரையைத் தவிர்த்து, நிஜத்தில் ஒரு விஷயத்தைப் பார்க்கும்போது, அது குறித்த ஆர்வம் அதிகமாகும். சிறு பொருட்கள் மற்றும் காட்சிகளின் அழகை உள்வாங்கவும், ரசிக்கவும் அருங்காட்சியகம் வழிவகுக்கும்.
  • நமக்கு முன்பு இருந்த, நிகழ்ந்த, வாழ்ந்த உலக அமைப்பு, சமுதாய வழக்கம், ஒவ்வொரு சிறு செயல்களுக்குப் பின்னணியில் உள்ள, அறிவியல் உண்மை ஆகியவற்றை நிஜத்தில் காண்பது புதிய அனுபவத்தை தரும். அவை, மேலும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணத்தையும் உண்டாக்கும்.
  • இணையத்தில் கூறுவதையும், பார்ப்பதையும் அதிகமாக நம்பும் இந்த தலைமுறை குழந்தைகளுக்கு, உண்மை அறியும் திறனை வளர்ப்பதற்கு அருங்காட்சியகம் உதவும்.
  • குடியுரிமை, இன உணர்வு, அடையாளம், உலக மாற்றம், பரிணாம வளர்ச்சி, வட்டாரத் தன்மையின் மாற்றம், ஆளுமைகள், வரலாற்று செயல்முறைகள் மற்றும் செயல்பாடுகள், மொழியின் உபயோகம் ஆகியவற்றை குழந்தைகள் அறிந்துகொள்வதற்கு அருங்காட்சியகம் உதவும். குழந்தைகளுக்கான உலகக் கண்ணோட்டத்தையும் விரிவுபடுத்தும்.
  • கலை மற்றும் கலாசார ஈடுபாட்டை அதிகரிக்கும். புதிய கனவுகளை உருவாக்கும். அவற்றை நனவாக்குவதற்கான நம்பிக்கையைத் தரும். கலை உணர்வை மேம்படுத்தி, காட்சிப்படுத்தும் திறனையும், படைப்பாற்றலையும், கேள்வி ஞானத்தையும் உண்டாக்கும்.
  • பள்ளிக் கல்வியில் உள்ளதை விட அதிகப்படியான விஷயங்களைக் கற்றுக்கொள்ள உதவும். ஏட்டுப் பாடத்தில் விரிவாக விவாதிக்கப்படாத வரலாற்று உண்மைகள், நிகழ்வுகளைப் பற்றிய கூடுதல் உண்மைகளை குழந்தைகள் தெரிந்துகொள்ள முடியும்.
  • அருங்காட்சியகங்கள் குழந்தைகளின் கேள்வி கேட்கும் திறனை அதிகரிக்கும். அவற்றுக்கான பதிலைத் தாங்களே கண்டுபிடிக்கும் நம்பிக்கையை வழங்கும்.
Tags:    

மேலும் செய்திகள்