சிலம்பம் தேடித் தரும் பெருமை
தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றான சிலம்பம் பழம்பெருமை வாய்ந்தது. ஒழுக்கம், வீரம் போன்ற பண்புகளை கற்றுத்தரக்கூடியது. எனவே சிலம்பம் மற்றும் களரி இரண்டையும் கற்று வருகின்றேன். 2020-ம் ஆண்டு ஜூலை மாதம் வீரத்தமிழர் சிலம்பம் அறக்கட்டளையில் சேர்ந்து பயிற்சி செய்து வருகிறேன்.;
'வாழ்க்கையில் சாதிப்பதற்கு வறுமை தடையல்ல' என்பதை நாம் அன்றாடம் கண் கூடாக பார்க்கின்றோம். பழங்கால கல்வி, தொழில், வர்த்தகம், வளர்ச்சி என எல்லா முறையும் நவீன காலத்துக்கு ஏற்றதுபோல மாறியிருக்கலாம் அல்லது மறந்து போயிருக்கலாம். ஆனால், தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகள் இப்போதும் உயிர்பெற்று நிற்கின்றன என்பதை அவ்வப்போது பலர் ஞாபகப்படுத்திக் கொண்டே இருக்கின்றனர். அந்த வரிசையில் இணைந்திருப்பவர் உடுமலைப்பேட்டை அரசு கலைக்கல்லூரியின் மாணவி ர.பா.திவ்யஸ்ரீ. களரி, சிலம்பம் இரண்டிலும் சாதித்து வரும் இவர் தன்னுடைய முன்னேற்றம் குறித்து நம்மிடம் கூறியது:
"நான் பொருளாதாரத்தில் பின் தங்கிய குடும்பத்தைச் சேர்ந்தவள். அம்மா பிறருக்கு தையல் பயிற்சியை கற்றுக்கொடுக்கிறார். அப்பா தனியார் மில்லில் வேலை செய்கிறார். என் தம்பி 5-ம் வகுப்பு படித்து வருகிறான். நான் பள்ளிப்படிப்பை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்தேன். தற்போது அரசு கலைக்கல்லூரியில் ஆங்கிலத்துறையில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறேன்.
களரி, சிலம்பம் இரண்டிலும் ஆர்வம் ஏற்பட்டது எப்படி?
தென்னிந்தியாவில் புகழ்பெற்று விளங்கிய வீரக்கலை களரி. இந்த விளையாட்டில் தெக்கன் களரி, வடக்கன் களரி மற்றும் மத்திய களரி ஆகிய மூன்று வகைகள் உள்ளன. இதில் தெக்கன் களரியை அகத்திய முனிவரும், வடக்கன் களரியை பரசுராமனும் அறிமுகப்படுத்தியதாக முன்னோர்கள் கூறுவதுண்டு. இந்த இரண்டு முறைகளில் இருந்து தோன்றியது மத்திய களரி என்றழைக்கப்படுகிறது.
களரி பயிற்சியின் போது கடவுள், குரு, ஆயுதம், களம் ஆகியவற்றை வணங்கிவிட்டு தான் தொடங்குவார்கள். களரி கற்றுத்தரும் ஆசான் இயற்கை மருத்துவம் தெரிந்தவராக இருப்பார். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மட்டுமில்லாமல், ஒழுக்கம், சுறுசுறுப்பு, நேரம் தவறாமை போன்ற பல நல்ல விஷயங்களையும் களரி கற்றுத் தருகிறது.
தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றான சிலம்பம் பழம்பெருமை வாய்ந்தது. ஒழுக்கம், வீரம் போன்ற பண்புகளை கற்றுத்தரக்கூடியது. எனவே சிலம்பம் மற்றும் களரி இரண்டையும் கற்று வருகின்றேன். 2020-ம் ஆண்டு ஜூலை மாதம் வீரத்தமிழர் சிலம்பம் அறக்கட்டளையில் சேர்ந்து பயிற்சி செய்து வருகிறேன்.
அங்குதான் சிலம்பம், வாள் வீச்சு, குத்துவரிசை, அடிமுறை, மான் கொம்பு, இரட்டை வாள் எனப் பல கலைகள் இருப்பதை அறிந்து கொண்டேன். எனது இரண்டு மணிநேரப் பயிற்சியில் முதலில் ஒரு மணிநேரம் சிலம்பமும், ஒரு மணி நேரம் களரியும் கற்றுக் கொள்கிறேன்.
பயிற்சி-படிப்பு இரண்டிற்கும் எப்படி நேரம் ஒதுக்குகிறீர்கள்?
படிப்பிற்கு அதிகாலையிலும், இரவிலும் நேரத்தை ஒதுக்குவேன். சிலம்பம், களரி பயிற்சிகள் மாலையில் இருக்கும். பயிற்சியில் ஈடுபட்ட பின்பு புத்துணர்ச்சி கிடைப்பதால் படிப்பதற்கு இன்னும் எளிமையாக உள்ளது. சிலம்பப் பயிற்சியில் மிகுந்த கவனத்தோடு வீச்சுகளை வீசுகின்றோம். அதன்மூலம் கவனச்சிதறலை கட்டுப்படுத்தி மனதை ஒருமுகப்படுத்தும் திறன் அதிகரிக்கிறது. இது பாடங்களை கவனத்தோடு படிப்பதற்கு உதவுகிறது. படிப்பு, பயிற்சி இரண்டும் என் வாழ்க்கையில் உயர்வை கொண்டு செல்லும் பாதைகள். எங்களுடைய வாழ்வாதாரத்தை பெருக்கவும், மதிப்பை அதிகரிக்க செய்யவும் சிலம்பம் உதவும் என உறுதியாக நம்புகிறேன்.
இதுவரையில் நீங்கள் பெற்ற விருதுகள்?
வீரத்தமிழர் சிலம்பம் பயிற்சிக் கூடம் சார்பில் நடைபெற்ற போட்டியிலும், களரிப் போட்டியிலும் வெண்கலப் பதக்கம் பெற்றேன். மடத்துக்குளத்தில் நடைபெற்ற 14-வது மாநில அளவிலான சிலம்பப் போட்டியில் கலந்துகொண்டு தங்கப்பதக்கமும், களரிப் போட்டியில் வெள்ளிப்பதக்கமும் பெற்றேன்.
2021-2022-ம் ஆண்டு திருப்பூர் மாவட்ட அளவில் நடைபெற்ற சிலம்பம் போட்டியில் தங்கப்பதக்கம், தமிழ்நாடு அமெச்சூர் சிலம்பம் அசோசியேஷன் சார்பில் கன்னியாகுமரியில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டியில் வெள்ளிப்பதக்கம், ஆல் இந்திய பெடரேஷன் நடத்திய தேசிய சிலம்பம் போட்டியில் வெண்கலப் பதக்கம் பெற்றேன்.
மேலும் கன்னியாகுமரியில் கடந்த மார்ச் மாதம் 2-ந் தேதி நடைபெற்ற தேசிய அளவிலான சிலம்பப் போட்டியின் போது 22 மாநிலங்களில் இருந்து வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் நான் அலங்கார வீச்சு போட்டியில் வெண்கலப் பதக்கம் பெற்றேன்.
பயிற்சி ஆரம்பித்த இரண்டு ஆண்டுகளில் இத்தகைய சாதனைகளை படைத்தது எப்படி?
பள்ளிப் படிப்பின் போது விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைக்கவில்லை. கொரோனா ஊரடங்கு விடுமுறையில் தான் நானும் என் தம்பியும் இத்தகைய பெருமை வாய்ந்த கலைகளை கற்றோம். போட்டிகளில் வெற்றி பெற்றதற்கு எனது தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் காரணம். வெற்றி அடையும் வாய்ப்பு கடவுளின் அருளால் கிடைத்தது. அதை நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன் என்று நம்புகிறேன்.
எனது அம்மா எப்போதும் கூறும் வார்த்தை 'உன்னால் முடியும்' என்பது, இதுவே எனது தாரக மந்திரம். என் வாழ்க்கை தரம் உயரவும், மகிழ்ச்சியான நிலைக்கு மாறவும் கடினமாக உழைத்து வருகிறேன். எனக்கு தொடர்ந்து ஊக்கம் கொடுத்து வரும் கல்லூரி முதல்வர் சோ.சி.கல்யாணி, உடற்கல்வி ஆசிரியர் ஜே.மனோகர் ஆகிய இருவருக்கும் இந்த நேரத்தில் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.
ஆசான்கள் மாணவர்களின் தனித்தன்மையை அறிந்து பயிற்சிகளை கொடுக்கின்றனர். மாணவரது கவனிக்கும் திறன் மற்றும் அவர்களின் வலிமையை உணர்ந்து, அதற்கு ஏற்ற பயிற்சிகளை கொடுத்து அவர்களை வெற்றிப் பாதையில் கொண்டு செல்கின்றனர். ஒவ்வொரு மாணவரின் வெற்றிக்கு பின்னால் அவர்களின் விடாமுயற்சியும், ஊக்கம் கொடுத்த பெற்றோர்கள் மற்றும் ஆசான்களே உள்ளனர்.