குடும்பத்தின் ஆதரவால் சமூகத்தில் ஜெயிக்கலாம் - ரோசி

வீட்டிலும், வெளியிலும் சுதந்திரமாக வலம் வந்த எனக்கு, இந்த நோய் பெரும் இடியாகவே அமைந்தது. எனது ஆடையை சரி செய்வதற்குக்கூட, நான் மற்றவரின் உதவியை நாட வேண்டி இருந்தது என்னை மேலும் கவலைக்குள்ளாக்கியது.

Update: 2022-08-21 01:30 GMT

ளமைப் பருவத்துக்கே உரிய கனவுகள் மற்றும் முன்னேறும் ஆசைகளுடன், கல்லூரிப் படிப்பை முடித்து, ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தார் ரோசி. திடீரென உடலில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக, தனது 20 வயதில் வாய் பேச முடியாமல், உடல் அசைவில்லாமல் படுக்கையில் வீழ்ந்தார். இருந்தாலும், தளராத நம்பிக்கை மற்றும் குடும்பத்தினரின் ஆதரவுடன் வெற்றிகரமாக நோயில் இருந்து மீண்டார்.

இன்று இளைஞர்களுக்கு சிறந்த வழிகாட்டியாகவும், திறன் வளர் பயிற்சியாளராகவும், தன்னம்பிக்கை பேச்சாளராகவும் செயல்பட்டு வருகிறார். கற்பதில் அளவில்லாத ஆர்வம் கொண்ட இவர், இரண்டு குழந்தைகளுக்கு தாயான பின்பும், தொடர்ந்து ஆர்வத்தோடு பலவற்றை கற்று வருகிறார்.

சாதாரண நிலையில் இருப்பவர்களை, ஆளுமையில் சிறந்தவர்களாக மாற்றும் ஆலோசனை வழங்கும் நிறுவனத்தை நடத்தி வரும் ரோசி, தனது வெற்றிக் கதையை இங்கே பகிர்ந்துகொள்கிறார்.

"எனது பூர்வீகம் சென்னை. எங்கள் பெற்றோருக்கு 6 ஆண்கள், 3 பெண்கள் என 9 பிள்ளைகள். எங்கள் அனைவருக்குமே தங்களால் முடிந்தவரை சிறந்த கல்வியை கொடுத்து வளர்த்தனர்.

என்னால் ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் முடிந்த காரணத்தால், கல்லூரிப் படிப்பை முடித்ததும் 2008-ம் ஆண்டு ஐ.டி. நிறுவனத்தில் வேலை கிடைத்தது. அந்த ஆண்டின் இறுதியில் எனக்கு கால்கள் வலிக்க ஆரம்பித்தன. முதலில் அதை சாதாரணமாக நினைத்தேன். ஆனால், எதிர்பாராதவிதமாக அந்த வலி உடலில் அதிகமாக பரவ ஆரம்பித்தது.

மருத்துவரிடம் சென்று பரிசோதித்ததில், அது மிக அரிதாக லட்சத்தில் நான்கு பேருக்கு மட்டுமே வரக்கூடிய 'குல்லியன் பார்ரே (GBS)' எனப்படும் கடுமையான நோய் என்பது தெரிய வந்தது. படுத்த படுக்கையாக இருந்த அந்த நேரத்தில், என் குடும்பம் மிகவும் ஆதரவாக இருந்தது. அரிதான நோய் என்பதால் சிகிச்சைக்கான செலவுகளும் அதிகமாகவே இருந்தது. அதனால், எனது குடும்பமும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியது.

வீட்டிலும், வெளியிலும் சுதந்திரமாக வலம் வந்த எனக்கு, இந்த நோய் பெரும் இடியாகவே அமைந்தது. எனது ஆடையை சரி செய்வதற்குக்கூட, நான் மற்றவரின் உதவியை நாட வேண்டி இருந்தது என்னை மேலும் கவலைக்குள்ளாக்கியது.

இருந்தாலும் இந்த நோயை வெற்றி கொண்டு மீண்டு எழ வேண்டும் என்று உறுதியோடு முயன்றேன். சோர்வடைந்து வருந்தும்போதெல்லாம், எனது மனதிடம் ''என் வாழ்க்கை இவ்வளவுதானா? நான் ஓடி ஆடி விளையாடியதெல்லாம் இந்த 20 வயது வரை மட்டும்தானா? மற்றவருக்கு பயனுள்ளவளாகவும், எடுத்துக்காட்டாகவும் இருக்கும் வகையில் வாழ மாட்டேனா?'' என்று கேட்டுக்கொள்வேன். மருந்து, மாத்திரைகளால் மட்டுமில்லாமல், எனது மன உறுதியாலும் இந்த நோயை முழுமையாகக் கடந்தேன்.


நோயில் இருந்து மீண்டு வந்ததும், எனது வாழ்க்கையை உதாரணமாகக் கொண்டு மற்றவர்களுக்கு மனரீதியாக 'எதையும் சமாளித்து எழலாம்' என்ற தன்னம்பிக்கையை கொடுக்க விரும்பினேன். 'வாழ்வில் நடக்கும் ஒவ்வொன்றிற்கும் ஒரு காரணம் உண்டு. எனவே சிறு சிறு பிரச்சினைகளை கண்டு துவண்டு போகாமல், அதனை எதிர்கொண்டு முன்னேற வேண்டும்' என்பதே எனது அப்போதைய எண்ணமாக இருந்தது.

மன வலிமையால் குணமடைந்த எனக்கு திருமணமும் நடந்தது. முதல் குழந்தையைப் பெற்றெடுக்கும்போது, முன்பிருந்த நோயால் பிரசவத்திற்கு பின்பு நான் கோமா நிலைக்கு செல்லும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆனால் நல்ல முறையில் குழந்தையைப் பெற்றெடுத்தேன்.

இரண்டாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் நேரம், கொரோனா ஊரடங்கின் தொடக்க காலம் என்பதால், என்னால் வேலையின் காரணமாகவும், பரிசோதனைக்காகவும் வெளியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. ஆனாலும் குழந்தையை நல்ல முறையில் பெற்றெடுத்தேன். அதன்பின்பு உடல் ரீதியாக பல பிரச்சினைகளை சந்தித்தேன். எல்லாவற்றிலிருந்தும் தன்னம்பிக்கையால் மீண்டு வந்தேன்.

பிறகு, 'இமேஜ் கன்சல்டிங்' எனப்படும் ஆளுமையை மேம்படுத்தும் பயிற்சியின் மீது ஆர்வம் ஏற்பட்டது. 6 மாத கால மகப்பேறு விடுமுறையில் அதனை கற்றேன். அதற்கு எனது கணவரும், குடும்பத்தினரும் உறுதுணையாக இருந்தார்கள். குழந்தைகளை அவர்கள் கவனித்துக்கொண்டதால், படிப்பில் என்னால் முழு கவனத்தையும் செலுத்த முடிந்தது.

படித்து முடித்ததும் 2020-ம் ஆண்டு நண்பரின் வழிகாட்டுதலோடு, எனது நிறுவனத்தைத் தொடங்கினேன். பல கல்லூரிகளுக்குச் சென்று நான் மீண்டு வந்த கதையைக் கூறினேன். அது பல பேரின் வாழ்க்கை மாற்றத்திற்கு உதவியது. திருமணமானதால் வேலையில் இருந்தும், தங்களின் லட்சியங்களில் இருந்தும் விலகி இருந்த பெண்கள் என்னிடம் வந்தபோது, அவர்களிடம் இருந்த திறனை கண்டறிந்து அது சார்ந்த தொழிலை தொடங்க வழிகாட்டினேன்."

தொழில் தொடங்க நினைப்பவர்களிடம் இருக்க வேண்டிய தகுதிகளாக எதைக் கருதுகிறீர்கள்...

நிறுவனத்தை தொடங்க நினைக்கும் பெண்கள், முதலில் உங்களுக்கான இலக்கை நிர்ணயித்துக்கொள்ளுங்கள். ஒரு நிறுவனம் வெற்றிகரமாக வேரூன்ற அதிகபட்சம் 5 ஆண்டுகள் ஆகும். ஆனால், ஆரம்பித்த 6 மாதங்களில் அல்லது ஒரு வருடத்தில் உங்களது வருமானம் என்ன, நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள், என்ன சாதித்தீர்கள்? என்பதை ஆராய வேண்டும். சுய ஒழுக்கத்தைக் கடைப்பிடியுங்கள். அதிகாலையில் எழுந்து திட்டமிட்டு பணிகளை செய்வது முக்கியம். உங்களுக்கென குறைந்தது அரை மணி நேரம் ஒதுக்கி, உங்களுக்குப் பிடித்த செயலை செய்வது அவசியம்.

'வயது என்பது வெறும் எண் மட்டுமே'. எனவே எந்த வயதிலும் படிப்பதை மட்டும் நிறுத்தவே கூடாது. அடுத்து, தன்னம்பிக்கை மிக முக்கியம். எப்போதும் நேர்மறை எண்ணங்களை வளர்த்துக்கொள்ளுங்கள்.

நீங்கள் செய்த சாதனை என்ன?

என்னால் எனது குடும்பத்திற்கும், தொழிலுக்கும் சமமான நேரத்தை ஒதுக்க முடிவதை சாதனையாகக் கருதுகிறேன். இதற்கு எனது குடும்பத்தினரும் முழு ஒத்துழைப்பு தருவது மகிழ்ச்சியளிக்கிறது. குடும்பம்தான் நாம் முதலில் கவனிக்க வேண்டியது. குடும்பத்தினரிடம் நீங்கள் நினைப்பதை சரியாக பேசி புரிய வைத்தால், சமூகத்திலும் ஜெயிக்கலாம்.

உங்கள் லட்சியம் என்ன?

என் நண்பர்கள், என்னை ரோல் மாடலாக கொண்டுள்ளனர். அது எனக்கு மகிழ்ச்சி. அதே போன்று உலகம் முழுவதும், என்னை நான் அடையாளப்படுத்த விரும்புகிறேன். மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாகவும், பயனுள்ள வகையிலும் வாழ விரும்புகிறேன். இதுவே எனது லட்சியம். 

Tags:    

மேலும் செய்திகள்