வாழ்வில் வெற்றி பெற உதவும் பேச்சுத் திறமை

எதிராளியை வசப்படுத்தும் திறன் நம் பேச்சுக்கு உள்ளது. எனவே, அதைச் சரியான இடத்தில், சரியான முறையில் பயன்படுத்த வேண்டும். நம் கருத்தை வெளிப்படுத்துவதில் குரல் தொனி, உடல் மொழி, முக பாவனை, நேரம் போன்றவை முக்கியமானவை. சரியான நடையால், சலிப்பூட்டும் கருத்தைக் கூட ஈர்க்கும்படி சொல்ல முடியும். பேசும் சபையை ஆராய்ந்து பேச வேண்டும்.;

Update:2022-05-30 17:32 IST

மது பேச்சு, நம் ஆளுமையை வெளிக்காட்டும். ஒருவருக்கு சிந்திக்கும் எண்ணம் தெளிவாக இருந்தாலும், அதை வெளிப்படுத்தும் திறன் குறைவாக இருந்தால், அவருக்கு வெற்றி கடினமானதாக இருக்கும்.

குடும்ப உறுப்பினர்களிடம் பேசுவதும், தொழில் ரீதியாகப் பிறரிடம் பேசுவதும் வெவ்வேறானவை. பேச்சுத்திறனை எங்கு, எப்படிப் பயன்படுத்த வேண்டும்? என்பது முக்கியமானது. அதைப்பற்றி இங்கு காண்போம்.

கருத்து மற்றும் உச்சரிப்பில் தெளிவு:

குடும்பத்தைப் பொறுத்தவரை, நம் கருத்தைத் தெரிவிக்க எந்த வரைமுறையும் இல்லை. ஆனால், தொழில் ரீதியாகப் பேசும் போது நாம் பேசும் கருத்தும், நமது உச்சரிப்பும் தெளிவாக இருக்க வேண்டும்.

உச்சரிப்பு, போதுமான சத்தத்துடன் பேசுதல், சரியான இலக்கணத்தைப் பயன்படுத்துதல் ஆகியவற்றை கவனத்தில் கொள்ள வேண்டும். பேசும்போது அதிகமாக இடைநிறுத்துவதோ, ஒரே கருத்தை மீண்டும் வெளிப்படுத்துவதோ கூடாது. வார்த்தைகளில் தடுமாற்றமோ வராமல் இருப்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். கருத்துகளை விரைவாகவோ, தாமதமாகவோ முடிக்காமல், சரியான நேரத்தில் முடிக்கும் திறன் கட்டாயம் தேவை.

ஈர்க்கும் திறன்:

எதிராளியை வசப்படுத்தும் திறன் நம் பேச்சுக்கு உள்ளது. எனவே, அதைச் சரியான இடத்தில், சரியான முறையில் பயன்படுத்த வேண்டும். நம் கருத்தை வெளிப்படுத்துவதில் குரல் தொனி, உடல் மொழி, முக பாவனை, நேரம் போன்றவை முக்கியமானவை. சரியான நடையால், சலிப்பூட்டும் கருத்தைக் கூட ஈர்க்கும்படி சொல்ல முடியும். பேசும் சபையை ஆராய்ந்து பேச வேண்டும்.

தன்னம்பிக்கையை வளர்த்தல்:

பதற்றமும், தேவையற்ற பயமும்தான் பேச்சுத் திறனுக்கு எதிரான தடைகள். எனவே, நம்மைப் புறந்தள்ளும் விஷயங்களை ஒதுக்க வேண்டும். தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும். அதற்கேற்ப, யாரிடம் எந்த வகையான பேச்சுத் திறனை வெளிப்படுத்த வேண்டும், என்பதை நாமே பயிற்சி செய்து கொள்ளலாம்.

கண்ணாடியின் முன் நின்று, தினமும் 1 மணி நேரம் பேசிப்பழகி பேச்சுத் திறனை வளர்க்கலாம். உச்சரிக்க கடினமான வார்த்தைகளை அடிக்கடி பேசிப் பார்க்கலாம். இதனால், தயக்கம் இல்லாமல் பேச முடியும்.

விமர்சனத்துக்குத் தயாராகுங்கள்:

நம் பேச்சு எப்படி இருந்தாலும், பார்வை யாளர்களிடமிருந்து பலதரப்பட்ட விமர்சனம் வரலாம். இதை யாரும் தவிர்க்க முடியாது. அந்த விமர்சனத்துக்குப் பயந்து, திறமையைச் சரியான இடத்தில் வெளிப்படுத்தத் தயங்கினால், இழப்பு நமக்குத்தான் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

நம் கருத்துக்கு எதிர் விமர்சனங்கள் எழுந்தாலும், அதையும் நேர்மறையாக எடுத்துக் கொண்டு, தவறுகளை திருத்தி, அடுத்த நிலைக்குச் செல்ல வேண்டும். பேச்சு என்பது கருத்தை வெளிப்படுத்தும் ஆயுதம் மட்டுமல்ல; நம்மை முழுமையாகப் பிறருக்கு வெளிகாட்டும் சாதனம். அதைச் சரியாக பயன்படுத்தினால், வாழ்க்கையில் மட்டுமல்ல, தொழிலிலும் எளிதாக வெற்றி பெறலாம். 

Tags:    

மேலும் செய்திகள்