குன்னூரின் சுற்றுச்சூழலை மீட்டெடுக்கும் சமந்தா

சூழலியல் நன்றாக இருந்தால் மட்டுமே சுற்றுலாக்கள் சாத்தியம். இது பற்றி சுற்றுலாப் பயணிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். இது ஒரு தொடர் பணி. நாள்தோறும் எங்கள் குழு இதைச் செய்து வருகிறது.

Update: 2023-06-18 01:30 GMT

நாம் வசிக்கும் பகுதியில் இயற்கை மாசுபடும்போது, அதைத் தடுத்து சுற்றுச்சூழலை பாதுகாப்பது நம்முடைய கடமை. இதை தன்னுடைய செயல்பாடுகள் மூலம் உலகுக்கு உணர்த்தி வருகிறார் நீலகிரி மாவட்டம் குன்னூரைச் சேர்ந்த சமந்தா. சூழலியல் சிந்தனையுடன் குன்னூரைப் பொலிவு பெறச் செய்து வரும் முதுகலைப் பட்டதாரியான அவருடன் பேசியதில் இருந்து...

"நான் பிறந்து வளர்ந்த ஊரான குன்னூர் மாசடைந்து வருவதை, நானே பார்த்துக்கொண்டு செயலற்று இருந்தால் எப்படி? அதைத் தடுப்பதற்காக களம் இறங்கி, தன்னார்வலர்களை ஒருங்கிணைத்தேன். 'கிளீன் குன்னூர்' எனும் அமைப்பை உருவாக்கி தற்போது செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம். நான் அதன் நிர்வாக அறங்காவலராக இருக்கிறேன்.

சுற்றுலா தொடர்பான முதுகலைப் படிப்பை முடித்த நான், சுற்றுலாப் பகுதியான குன்னூர் தன் அழகை இழந்து வந்தபோது, அதை மீட்டெடுப்பதில் தனி கவனம் செலுத்தினேன். தற்பேது தெருக்கள், நீர்நிலைகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அதிகம் கூடும் இடங்களில் சுத்தப்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.

இதில் எங்களுக்கு மிகவும் சவாலாக இருந்தது குன்னூர் சிற்றாற்றை சுத்தம் செய்ததுதான். நீலகிரி மலைப் பகுதியில் இருந்து இந்த ஆற்றுக்கு தண்ணீர் வருகிறது. 1800-ம் ஆண்டுகளில் சுமார் 100 அடி அகலம் இருந்த சிற்றாறு, தற்போது 20 அடி அகலம் மட்டுமே உள்ளது. குப்பைகள், இறைச்சிக் கழிவுகள் ஆகியவை கலப்பதால் மாசு அடைந்திருந்த இந்த ஆற்றை எங்கள் குழுவினர் சுத்தம் செய்து அழகாக்கினர். இந்தப் பணி மக்கள் மத்தியில் எங்களுக்கு நற்பெயரை பெற்றுத்தந்தது.

எங்கள் வேலைகளை நகராட்சி, மாவட்ட நிர்வாகம் மற்றும் பல அமைப்புகளுடன் இணைந்தே செய்கிறோம். ஆற்றில் இருந்து எடுக்கப்பட்ட கழிவு மண் மற்றும் குப்பைகளைக் கிடங்குகளில் கொட்டி அதன் மேல் புற்களை வளர்த்தோம். அது குப்பை மேலாண்மை பூங்காவாக மாறியது.

குப்பைகளை எவ்வாறு தரம் பிரிக்கிறீர்கள்?

கண்ணாடி பாட்டில்கள், துணி, ரப்பர் மற்றும் எலக்ட்ரானிக் கழிவுகளை தனியாகப் பிரித்து மறுசுழற்சி செய்வதற்கு அனுப்பி வைக்கிறோம். குப்பைகள் பேலிங் இயந்திரம் மூலம் தரம் பிரிக்கப்பட்டு, பிளாஸ்டிக் பேக்கேஜ் செய்து 'பர்னஸ் ஆயில்' தயாரிப்புக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. இதுதவிர கோழி, மீன் கழிவுகளில் இருந்து உரம் தயாரிக்கும் பணியும் நடைபெறுகிறது.

உங்கள் பணிகளுக்கு கிடைத்த அங்கீகாரங்கள் பற்றி சொல்லுங்கள்?

தமிழ்நாடு அரசின் மாசுக்கட்டுப்பாட்டு துறையின் சார்பில் முதல் அமைச்சரிடம் இருந்து 'பசுமை தகைமையாளர் விருது' பெற்றோம். இதுதவிர ரோட்டரி கிளப் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் எங்கள் பணிகளைப் பாராட்டி கவுரவப்படுத்தியுள்ளன.

உங்கள் எதிர்காலத் திட்டம் என்ன?

சூழலியல் நன்றாக இருந்தால் மட்டுமே சுற்றுலாக்கள் சாத்தியம். இது பற்றி சுற்றுலாப் பயணிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். இது ஒரு தொடர் பணி. நாள்தோறும் எங்கள் குழு இதைச் செய்து வருகிறது. நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி குன்னூர் சூழலைக் காப்பதே எங்கள் எதிர்காலத் திட்டமாகும்.

Tags:    

மேலும் செய்திகள்