ஒளி இழந்த விழிகளுக்கு வழிகாட்டும் ரிஷி வதனா
தேவைப்படும் நேரங்களில் பாடங்கள் சொல்லித் தருவது, அரசு அல்லது தனியார் வேலைவாய்ப்புகளுக்கான தேர்வுகளில் அவர்கள் கலந்துகொள்ளும்பொழுது அவர்களுக்கு உதவிகரமாக இருப்பது என ‘ஸ்கிரைப்’பின் தேவை அதிகமாக இருந்து வருகிறது.;
சமூக சேவைகளில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணம் நம்மில் பலருக்கும் இருக்கும். ஆனால் குடும்பம் வேலை மற்றும் சூழ்நிலைகள் நமது ஆசையை நிறைவேற்ற அனுமதிப்பதில்லை. சுய விருப்பு வெறுப்புகளை மனதில் சுமந்தபடியே, வாழ்க்கையை கடந்து கொண்டிருப்போம். ஒரு சிலருக்கு மட்டுமே சேவையே வாழ்வாதாரத்திற்கான பணியாகவும் அமைந்துவிடும் வாய்ப்பு அமைகிறது. அவ்வாறு அமையப்பெற்ற அதிர்ஷ்டசாலிகளில் ஒருவர்தான், சென்னை மாங்காட்டைச் சேர்ந்த ரிஷி வதனா. அவருடன் ஒரு சந்திப்பு.
உங்களைப் பற்றி?
நான் திருச்சியில் பிறந்தவள். தந்தை சந்துரு மாணிக்கவாசகம் திரைப்பட இயக்குனர் மற்றும் சிறுகதை எழுத்தாளர். தாயார் ஸ்டெல்லா பிரேமா, ஆசிரியை. சகோதரி மீரா பாரதி, தனியார் நிறுவனமொன்றில் பணியாற்றி வருகிறார். சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்தேன். கணிதப் பாடத்தின் மீது கொண்டிருந்த அதீத ஆர்வத்தால், கல்லூரியில் இளங்கலை கணிதப் படிப்பை தேர்ந்தெடுத்தேன். முதுநிலை படிப்பையும், ஆய்வியல் நிறைஞர் (எம்.பில்.,) படிப்பையும் சென்னையில் உள்ள கல்லூரியில் முடித்தேன்.
பார்வையற்றோருக்கான சேவையை தொடங்கியது பற்றி..
இளங்கலை பட்டப்படிப்பில் சேர்ந்த சில நாட்களிலேயே, கல்லூரியில் பார்வையற்றோருக்கு பாடங்களை சொல்லித் தருவதற்கும், தேர்வு எழுதுவதற்கும் உதவும் 'ஸ்கிரைப்' தேவைப்பட, ஆர்வத்துடன் சென்று உதவினேன். அன்றுதான் கல்வி மீது அவர்கள் கொண்டிருக்கும் ஆர்வத்தை அறிந்தேன். இந்த சேவையை எக்காலத்திலும் நிறுத்திவிடக் கூடாது என முடிவெடுத்து அன்று முதல் தொடர்ந்து 'ஸ்கிரைப்' பணியைச் செய்து வருகிறேன்.
முதுநிலை கணிதவியல் படிப்பில் சேர்ந்த பிறகும் இந்தப் பணியை செய்தபடியே, இறுதியாண்டில் சமர்ப்பிக்க வேண்டிய திட்ட வேலையையும் (புராெஜக்ட்) பார்வையற்றோருக்கான கல்வி தொடர்பானதாகவே செய்தேன். கல்லூரிப் படிப்பின்போது எந்தச் சூழ்நிலையிலும் பார்வையற்றோர் கல்வி தொடர்பான உதவியை நான் நிறுத்தியதில்லை. எப்பொழுது யார் தொலைபேசி மூலம் அழைத்து சந்தேகம் கேட்டாலும், அனைவருக்கும் கல்வியை போதித்தபடியேதான் எனது கல்வியையும் தொடர்ந்தேன்.
'ஸ்கிரைப்' பணிக்கு எந்த அளவிற்கு தேவை உள்ளது?
தேவைப்படும் நேரங்களில் பாடங்கள் சொல்லித் தருவது, அரசு அல்லது தனியார் வேலைவாய்ப்புகளுக்கான தேர்வுகளில் அவர்கள் கலந்துகொள்ளும்பொழுது அவர்களுக்கு உதவிகரமாக இருப்பது என 'ஸ்கிரைப்'பின் தேவை அதிகமாக இருந்து வருகிறது. ஆனால், உதவ முன்வருவோரின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. கல்வி பயிலும் பார்வையற்ற மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப 'ஸ்கிரைப்' எண்ணிக்கை இல்லையென்பதை சொல்லியே ஆக வேண்டும். எப்பொழுதும் தேவை இருந்து கொண்டே இருக்கும் இந்த சேவைக்கு, அவ்வப்போது எனது நண்பர்களின் உதவியையும் நாடி, அவர்களையும் விழித்திறன் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும்படி செய்து இருக்கிறேன்.
உங்கள் சேவைக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளதா?
அங்கீகாரம் எதிர்பார்த்து இதனை நான் செய்யவில்லை. முழுமனதுடனும், அர்ப்பணிப்பு உணர்வுடனும் மட்டுமே செய்து வருகிறேன். இருப்பினும், எனது செயல்பாடுகள் பற்றி பார்வையற்ற மாணவர்கள் மூலமே அறிந்த 'லிட் த லைட் ட்ரஸ்ட்' என்ற அமைப்பு, 'ப்ரெய்ல் பெட்டாலியன்' என்ற விருது வழங்கி கவுரவித்தது.
உங்களது சேவையே பணியாக மாற்றம் பெற்றது எப்படி?
பார்வையற்றோருக்கான எனது சேவைகள் மற்றும் முதுநிலை கல்வியில் நான் சமர்ப்பித்த ஆய்வுகள் மூலம் என்னுடைய நோக்கம் பற்றி அறிந்துகொண்ட கணிதவியல் துறையும், கல்லூரி நிர்வாகமும், எனது பணியை மேலும் ஆக்கப்பூர்வமாக செயல்படுத்தும் விதத்தில் பொருத்தமான பணி ஒன்றை பரிந்துரைத்தது.
பெங்களூருவில் உள்ள 'தி இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் இன்பர்மேஷன் டெக்னாலஜி' உயர்கல்வி நிறுவனமும் மைக்ரோசாப்ட்' நிறுவனமும் இணைந்து நடத்தி வரும் 'விஷன் எம்பவர்' என்ற பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான அறக்கட்டளையில், கல்வி ஒருங்கிணைப்பாளராக பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது.
மகிழ்ச்சியுடன் அப்பணியை ஏற்றுக் கொண்டேன். தற்போது அந்த அறக்கட்டளையின் மூலமாக பார்வையற்ற குழந்தைகளுக்கான கல்விப் பணியைச் செவ்வனே செய்து வருகிறேன். கணிதக் கல்வியுடன் குழந்தைகளுக்கான வித்தியாசமான விளையாட்டுக்களையும் பயிற்றுவித்து வருகிறேன். இவற்றோடு எப்பொழுதும் நான் செய்து வரும் 'ஸ்கிரைப்' பணியையும் விடாமல், நேரம் கிடைக்கும் போதெல்லாம் செய்து வருகிறேன்.
பார்வையற்றோருக்கான கணிதக் கல்வி பற்றி..
குறிப்பிட்ட வகுப்புகளைக் கடந்த பின்னர் பார்வையற்ற மாணவர்களால் கணிதக் கல்வியை தொடர முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. பலருக்கு அடிப்படை எண்கள் சம்பந்தப்பட்ட கணிதம் மட்டுமே தெரிந்திருக்கிறது. இவர்களுக்கான சிறப்பு கணிதப் புத்தகங்கள் எதுவும் இல்லை என்பது மிகவும் வருத்தமளிக்கும் செய்தியாகும்.
பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் அனைவருமே சராசரி மனிதர்களை விட அதிக புத்திக்கூர்மை மற்றும் சிந்தனைத் திறன் கொண்டவர்கள். இவர்களுக்கான உயர்கல்வியில் கணிதமும் கட்டாயம் இடம்பெற வேண்டும். கல்லூரிக் கல்வியை நோக்கிச் செல்லும் பார்வையற்ற மாணவ, மாணவிகளில் பலரும் கணிதம் பயில மிகுந்த ஆர்வம் கொண்டவர்களாக இருந்தாலும், அதற்கான வாய்ப்பு கிடைப்பதில்லை.
மற்ற மாணவர்களைப் போன்றே இவர்களும் உயர்கல்வியில் விரும்பிய பாடங்களைப் பயிலும் வகையில், முறையான பாடத்திட்டங்களை வடிவமைக்க வேண்டும்.