சைக்கிள் மிதித்தால் பழச்சாறு தயார் - பாரதி
இதில் சைக்கிளின் சுழற்சி மூலம் இயங்கும் பழச்சாறு இயந்திரத்தின் வழியாக ‘ஜீரோ வேஸ்ட்’ முறையின் முக்கியத்துவத்தை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார் பாரதி.;
திருச்சியைச் சேர்ந்த மருத்துவர் பாரதி, நோயாளிகளின் ஆரோக்கியத்தைக் காப்பதோடு சுற்றுச் சூழலையும் பாதுகாப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். சுற்றுச்சூழலுக்கு எவ்வித தீங்கும் ஏற்படுத்தாத மாற்றுப்பொருட்களின் பயன்பாட்டுடன், 'ஜீரோ வேஸ்ட்' வாழ்வியல் முறையைப் பின்பற்றிவரும் இவர், பருவநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு உண்டாக்கும் பேச்சுக்களை யூடியூப்பில் தொடர்ந்து பதிவேற்றம் செய்கிறார்.
இயற்கைக்கு தீங்கு விளைவிக்காத பொருட்கள் கொண்ட விற்பனையகத்தை நடத்தி வருகிறார். மேலும், தமிழ்நாட்டின் முதல் 'ஜீரோ வேஸ்ட் பழச்சாறு நிலையத்தை' தொடங்கி நடத்தி வருகிறார்.
இதில் சைக்கிளின் சுழற்சி மூலம் இயங்கும் பழச்சாறு இயந்திரத்தின் வழியாக 'ஜீரோ வேஸ்ட்' முறையின் முக்கியத்துவத்தை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார் பாரதி.
"கடந்த ஆண்டு காலநிலை மாற்றம் குறித்த அரசுகளுக்கிடையேயான குழு வெளியிட்ட அறிக்கையில், பூமியின் வெப்ப நிலை 2 டிகிரி செல்சியஸைத் தாண்டினால் மிகப் பெரிய பேரழிவு ஏற்பட்டு, மனிதர்களும், பிற உயிரினங்களும் வாழ முடியாத கடினமான சூழல் உருவாகிவிடும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இப்போதே பூமியின் வெப்ப நிலை 1.1 டிகிரி செல்சியஸாக அதிகரித்துள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் 2040-ம் ஆண்டுக்குள் பூமியின் வெப்ப நிலை 1.5 டிகிரி செல்சியஸாக அதிகரித்துவிடும்.
காலநிலை மாற்றம் தொடர்பாக வெளியாகும் ஆய்வுகளைத் தொடர்ந்து கவனித்து வருகிறேன். அதன் விளைவாக வீட்டில் பிளாஸ்டிக் பொருட்களைத் தவிர்த்து, சிறுசிறு மாற்றங்களைக் கொண்டு வந்தேன். ஆனால், நிலவி வரும் சூழலுக்கு இந்த மாற்றங்கள் போதாது. எனவே சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத பொருட்களை மக்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டுமென்று, இயற்கைக்கு தீங்கு விளைவிக்காத பொருட்கள் கொண்ட விற்பனையகத்தை தொடங்கினேன்.
அதில் ஆர்கானிக் உணவுப் பொருட்களையும், பிளாஸ்டிக்கைத் தவிர்க்கும் மாற்றுப் பொருட்களையும் விற்பனை செய்கிறோம். விற்பனையகத்தில் உள்ள மாற்றுப் பொருட்களை அனைவரும் அறிந்து, விழிப்புணர்வு பெற கடை முழுவதும் வாசகங்களை ஒட்டினோம். அதன் ஒரு பகுதியாக, கடையின் முன்புறத்தில் சைக்கிளின் சுழற்சி மூலம் இயங்கும் ஜீரோ வேஸ்ட் பழச்சாறு கடையைத் திறந்தோம்.
பிளாஸ்டிக் இல்லா பயன்பாடு என்ற நோக்கில், பழச்சாற்றினை அந்தப் பழத்தின் கூட்டிலே ஊற்றி, மூங்கில் ஸ்டிராக்களை வழங்கி வருகிறோம். வெளிநாடுகளில் இது போன்ற பழச்சாறு கடைகள் செயல்
படுவதைப் பார்த்துள்ளேன். அதனை நம்மூரிலும் செயல்படுத்தலாம் என முடிவு செய்து என் மகளின் பழைய சைக்கிள், பழுதான மிக்சியைக் கொண்டு பழச்சாறு தயாரிக்கும் இயந்திரத்தை வடிவமைத்தேன்.
இதற்கு மின்சாரமும், எரி பொருளும் தேவையில்லை. சைக்கிளின் சுழற்சி மூலமே பழச்சாறு தயாராகும். வாடிக்கையாளர்கள் அவர்களே சைக்கிளை மிதித்து, அவர்களுக்கான பழச்சாற்றைத் தயாரித்துக் கொள்ளலாம்.
இது பார்ப்பதற்கு வேடிக்கையாக இருப்பதால் பள்ளிக் குழந்தைகள் ஆர்வமாக சைக்கிளை மிதித்து, பழச்சாறு தயார் செய்து மகிழ்கின்றனர். இதன்மூலம் உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வும் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது" என்று கூறி முடித்தார் மருத்துவர் பாரதி.