சேவைக்கு ஓய்வில்லை - ராஜேஸ்வரி

1970-களில் லண்டனில் இருந்த பிரிவினை வாதத்துக்கு எதிராகப் போராடினோம். இங்கிலாந்தில் மனித உரிமை இயக்கத்தைத் தொடங்கினேன்.;

Update:2022-09-18 07:00 IST

ங்கிலாந்து அரசின் மூன்று பகுதிகளுக்கு (பரோஸ்) குழந்தைகள் நல அதிகாரியாக செயலாற்றி ஓய்வு பெற்றவர் ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம். இங்கிலாந்தில் திரைப்படப் பட்டம், தமிழ்ப் மருத்துவ மானுடவியலில் முதுகலைப் பட்டம் பெற்ற முதல் தமிழ்ப் பெண், முதலாவது ஆங்கில நாட்டு தமிழ் இலக்கியத்தைத் தொடங்கியவர், போர்க் காலத்தில் இலங்கை மக்களின் நிலையைப் பற்றி முதல் ஆங்கில ஆவணப் படத்தை எடுத்தவர், இங்கிலாந்தில் இலங்கைத் தமிழருக்காக மனித உரிமை அமைப்பை உண்டாக்கியவர், ஐரோப்பாவின் பிரமாண்டமான தமிழ் அகதிகள் வீடமைப்புத் திட்டத்தை உருவாக்கியவர், நல்லிணக்கத் தூதுவர்களில் ஒருவராகப் பலமுறை இலங்கைக்குச் சென்றவர், இலங்கையில் ஒட்டுமொத்த மக்களுக்குமான அமைதியும், ஒற்றுமையும் பற்றி ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பேசிய முதல் பெண், 2012-ம் ஆண்டு ஜெனிவா ஐ.நா. சபையில் இலங்கை மக்களின் ஒற்றுமையும், சமாதானமும் பற்றிய கூட்டத்தில் ஒரு மாதம் பங்கேற்றவர், 'பனிபெய்யும் இரவுகள்' என்ற 'சாகித்ய அகாதமி விருது' பெற்ற நாவலை எழுதியவர் போன்ற பல சிறப்புகளைக் கொண்டவர் இவர்.

அரசுப்பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும் 'சேவைக்கு ஓய்வில்லை' என்று தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறார் ராஜேஸ்வரி.

அவருடன் ஒரு சந்திப்பு...

"இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தில் உள்ள 'கோளாவில்' என்ற சிறு கிராமம்தான் எனது பூர்வீகம். நான் கடந்த 52 ஆண்டுகளாக லண்டனில் வசித்து வருகிறேன். எனது தந்தை நாடகங்கள் மற்றும் கூத்துக்களை எழுதி நடித்தவர். எனது எழுத்துத் திறமைக்கு தூண்டுகோலாக இருந்தவர் அவர்தான். எனது கணவர் பாலசுப்ரமணியத்தை திருமணம் செய்த பின்பு லண்டனுக்கு குடிபெயர்ந்தேன். நான்கரை ஆண்டுகள் இலங்கையிலும், ஏழு ஆண்டுகள் லண்டனிலும் படித்து பல பட்டங்களைப் பெற்றேன். 19 புத்தகங்களை எழுதியிருக்கிறேன்.

நீங்கள் நடத்திய போராட்டங்கள் பற்றிச் சொல்லுங்கள்...

1970-களில் லண்டனில் இருந்த பிரிவினை வாதத்துக்கு எதிராகப் போராடினோம். இங்கிலாந்தில் மனித உரிமை இயக்கத்தைத் தொடங்கினேன்.

இலங்கையில் புத்த மதத்தைச் சேர்ந்தவர்கள் இலங்கை அரசால் சிறைபடுத்தப்பட்டபோது, நான் 1982-ம் ஆண்டு 'தமிழ்ப் பெண்கள் அமைப்பு' தொடங்கி பிரமாண்டமான போராட்டங்களை நடத்தினேன். நெல்சன் மண்டேலாவை விடுவிக்கக் கோரி தொடர் போராட்டம் நடத்தினேன்.

1983-ம் ஆண்டு இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக கலவரம் நடந்து மக்கள் வெளியேற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டபோது அவர்களுக்காகப் போராடினேன். மக்களின் நிலையை உலகத்துக்குத் தெரிவிக்க வேண்டும் என்பதற்காக, 1986-ம் ஆண்டு ஒரு ஆவணப்படத்தை எடுத்தேன். அதுதான் இலங்கை மக்களுக்கான முதலாவது ஆங்கில ஆவணப்படம்.

இலங்கையில் இருந்து இங்கிலாந்து வந்த தமிழர்களுக்காக, கடும் குளிரில் எனது சிறு குழந்தையைத் தூக்கிக்கொண்டு அரசு அலுவலகங்களில் ஏறி இறங்கி 'தமிழ் அகதிகள் வீடமைப்புத் திட்டத்தை' உருவாக்கினேன். அதுவே ஐரோப்பாவின் பிரமாண்டமான திட்டம். என்னை இத்தகைய போராட்டங்களில் ஈடுபடச் செய்தவர் எனது கணவர்தான்.

பெண்களை மேம்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எதனால் வந்தது? அதற்காக எந்த வகையில் செயலாற்றுகிறீர்கள்?

நான் மருத்துவ தாதி. பெண்களின் அடிப்படை சிரமங்கள் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும். கிராமப்புற பெண்கள், வீட்டு வேலை, குழந்தை வளர்ப்பு, கணவருடன் விவசாய வேலை, சமையல் என்று பல வேலைகளைச் செய்ய வேண்டியிருக்கிறது என்பதை, நான் வேலைக்குச் சென்ற பிறகுதான் தெரிந்து கொண்டேன்.

குடும்பத்தில் பெண்களுக்குச் சமத்துவம் இல்லையென்றால், அந்தக் குடும்பத்தில் முன்னேற்றம் ஏற்படாது. தந்தை, தாயை அடக்குவதைப் பார்த்து வளர்ந்த மகன் மனைவியை அடக்குவான். அதனால் பெண்கள் நிலையை உணர்த்தவும், அவர்களின் மேம்பாட்டுக்காகவும் நிறைய எழுதினேன்.

லண்டனில் நான் தொடங்கிய 'தமிழ்ப் பெண்கள் அமைப்பின்' மூலம் நிறைய கூட்டங்களை நடத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தினேன். என்னுடைய இணையதளத்தில் பெண்களுக்கான ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதி வருகிறேன். இப்போதும் கூட்டங்களுக்குச் செல்கிறேன்.


இளைய தலைமுறையைச் சிறந்தவர்களாக உருவாக்க உங்களின் ஆலோசனை என்ன?

நல்ல தாய் இல்லையென்றால், நல்ல குழந்தைகள் உருவாகமாட்டார்கள். நல்ல குழந்தைகள் உருவாகவில்லையெனில், நல்ல சமூகம் வளராது. ஆண்-பெண் சமத்துவம் என்பது மிகவும் முக்கியம். அதை ஏற்படுத்துவது தாயின் பொறுப்பு.

குழந்தையைப் பெற்றுத் தருவதோடு மட்டும் பெண்களின் கடமை முடிந்துபோகாது. அவர்களை அன்பிலும், பண்பிலும், அறிவிலும் சிறந்தவர்களாக, சமத்துவத்தோடு வளர்க்க வேண்டிய பொறுப்பும் அவர்களுக்கு இருக்கிறது.

போட்டி பொறாமையோடு தனது குழந்தையை மற்ற குழந்தையுடன் ஒப்பிட்டுப் பேசக்கூடாது.

'உன்னால் சிறப்பாகச் செய்ய முடியும்', 'உனக்கு விருப்பமானதை, உன்னால் முடிந்ததைச் செய்' என்று தோழமையோடு வளர்க்க வேண்டும். நல்லதை சிந்திக்கவும், நல்லதைச் செய்யவும் சொல்லிக் கொடுத்தால், சமூகமே நல்லதாக மாறிவிடும்.

உங்களுக்குக் கிடைத்துள்ள விருதுகள் பற்றிச் சொல்லுங்கள்?

சாகித்ய அகாதமி விருது முதல், அண்மையில் தமிழால் இணைவோம் அமைப்பு தந்த 'வாழும் வரலாறு' விருது வரை பல விருதுகளைப் பெற்றிருக்கிறேன்.

Tags:    

மேலும் செய்திகள்