கலைகளுக்கு எல்லை இல்லை- கிருஷ்ணப்ரியா

தனியார் பள்ளியில் பகுதிநேர நாட்டிய ஆசிரியையாகப் பணியாற்றுகிறேன். 13 ஆண்டுகளாக பரத நாட்டியப் பள்ளியும் நடத்தி வருகிறேன். என்னுடைய மாணவிகள் சிலர் எனது நடனப் பள்ளியிலேயே பயிற்சியாளர்களாகவும் பணியாற்றுகின்றனர்.

Update: 2022-12-04 01:30 GMT

ரத நாட்டியத்தில் கின்னஸ் உலக சாதனை நிகழ்த்தியது, குடியரசு தின விழாவில் ஆயிரம் மாணவர்கள் மத்தியில் பரதம் மூலம் சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தியது, பிரான்சு நாட்டில் உள்ள தமிழ்ச் சங்கத்தில் நாட்டிய நிகழ்ச்சிகளை நடத்தியது, சிதம்பரம் நாட்டியாஞ்சலியில் பங்கேற்றது, கேரளாவின் குருவாயூர் உள்ளிட்ட பல பிரபல கோவில்களில் நடனமாடியது என தன்னுடைய மாணவிகளோடு, ஆயிரத்துக்கும் மேற்பட்ட மேடைகளில் பரத நாட்டிய நிகழ்ச்சிகளை நடத்தி புகழ் பெற்றவர் கிருஷ்ணப்ரியா ராகவேந்தர்.

சென்னை, அம்பத்தூரில் வசிக்கும் இவர், நாட்டியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். தனது நாட்டியப்பள்ளி மூலம் பல மாணவிகளை பரதத்தில் சிறந்தவர்களாக உருவாக்கி வருகிறார்.

நாட்டிய ரத்னா, நாட்டியக் கலைமணி, நிருத்திய சிரோன்மணி, நாட்டியப் பேரொளி உள்ளிட்ட பல பட்டங்களை பெற்றிருக்கிறார்.

நாட்டியத்தின் மூலம் மாணவர்களிடையே சமூக விழிப்புணர்வு உண்டாக்குவதை கடமையாக செய்து வருகிறார். நாட்டியக் கலையில் ஆர்வமுள்ள ஏழை மாணவிகளுக்கு சலங்கை பூஜைகளையும், அரங்கேற்றங்களையும் இலவசமாகச் செய்கிறார். அவரது பேட்டி.

"என்னுடைய பெற்றோர் வெங்கட ரமணா-துர்கா பாய் தம்பதி. நான் அறிவியலிலும், நாட்டியத்திலும் முதுகலைப்பட்டங்களையும், ஆய்வியல் நிறைஞர் பட்டத்தையும் பெற்றிருக்கிறேன்.

சிறுவயதில் இருந்தே பரதத்தின் மீது எனக்கு ஆர்வம் இருந்தது. நான்கு வயதில் பரதம் கற்க ஆரம்பித்தேன். எனது குரு நாட்டிய விஷாரத் ரம்யா. பல ஆண்டுகளாக அவரிடம் நடனக் கலையைப் பயின்று தேர்ச்சி பெற்றேன்.

தனியார் பள்ளியில் பகுதிநேர நாட்டிய ஆசிரியையாகப் பணியாற்றுகிறேன். 13 ஆண்டுகளாக பரத நாட்டியப் பள்ளியும் நடத்தி வருகிறேன். என்னுடைய மாணவிகள் சிலர் எனது நடனப் பள்ளியிலேயே பயிற்சியாளர்களாகவும் பணியாற்றுகின்றனர். நேரடியாக மட்டுமில்லாமல், ஆன்லைன் மூலமாகவும் நடனம் கற்றுத் தருகிறேன். வெளிநாட்டில் வசிக்கும் பல மாணவிகள் இதன் மூலம் பயன்பெறுகின்றனர்.

நாட்டியம் தவிர ஓவியம் வரைவதிலும், கைவினைப் பொருட்கள் செய்வதிலும் எனக்கு ஆர்வம் உண்டு. எனது கணவர் ராகவேந்தர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். மகள் மதுமதி இரண்டாம் வகுப்பு படிக்கிறாள்.

பரத நாட்டியத்தின் பெருமைகளைப் பற்றி சொல்லுங்கள்?

தமிழகத்தின் புகழ்பெற்ற நாட்டியக் கலைகளில் ஒன்று பரதம். இது 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. பல்வேறு வரலாற்று சிறப்பு வாய்ந்த ஓவியங்கள் மற்றும் சிற்பங்கள் பரதக் கலைக்கு சிறந்த சான்றுகளாக இருக்கின்றன. தமிழின் பெருமைவாய்ந்த ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தில் பரத நாட்டியம் பற்றி பல பாடல்கள் உள்ளன.

காஞ்சியில் உள்ள புகழ்பெற்ற சிவன் கோவில், சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோவில் போன்ற பல பிரபல கோவில்களில் உள்ள அலங்கரிக்கப்பட்ட சிற்பங்கள் பரதக் கலையின் சிறப்பைக் கூறுகின்றன.

பரதத்தின் பெருமையை உணர்ந்த வெளிநாட்டினர் பலர், தமிழ்நாட்டில் வந்து தங்கி பரதம் கற்றுச் செல்கின்றனர். பல வெளிநாடுகளில் மாணவிகள் ஆர்வத்துடன் பரதம் கற்று வருகின்றனர்.


நாட்டியம் ஆடுவதன் நன்மைகள் என்ன?

பரத நாட்டியம் இதயத்தை நன்றாகச் செயல்பட வைக்கும். இதனால் ரத்த ஓட்டம் மேம்படும். உடல் தசைகள் உறுதி அடையும். இது ஒரு தொடர் பயிற்சியாக இருப்பதால் எலும்புகள் வலுப்பெறும். உடலைப் புத்துணர்ச்சி பெறச் செய்து அமைதியான மற்றும் மகிழ்ச்சியான மனநிலையை ஏற்படுத்தும். பரதநாட்டியம் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஏராளமான பலன்களை அளிக்கக்கூடியது.

முழுமையாகக் கற்றுத் தேற பரதத்தை எத்தனை ஆண்டுகள் பயில வேண்டும்?

இது கற்கும் நபரின் திறனைப் பொறுத்தது. அரங்கேற்றத்திற்கு நீங்கள் எப்போது தயாராக உள்ளீர்கள் என்பதை உங்கள் குரு அறிவார். சிலருக்கு அடிப்படையான படிகள் மற்றும் கோட்பாட்டை சரளமாகப் பெற ஐந்து ஆண்டுகள் ஆகும். சிலருக்கு ஆறு ஆண்டுகளுக்கு மேல் தேவைப்படும்.

என்னைப் பொறுத்தவரை, எந்த ஒரு கலை வடிவத்தையும் கற்பதற்கு முடிவே இல்லை. கலை தொடுவானம் போல எல்லை இல்லாதது. வாழ்நாள் முழுவதும் கற்றுக்கொண்டே இருக்கலாம்.

பரதம் ஆடுவதால் உடல் எடை குறையுமா?

பரத நாட்டியத்தில் உள்ள நடன வடிவங்கள், தலை முதல் கால் வரை உள்ள தசைகளுக்கு தீவிர பயிற்சி அளிக்கின்றன. உடலைக் கட்டுக்கோப்பாக வைப்பதில் ஜிம் பயிற்சிகளுக்கு இணையாக செயல்

படுகின்றன. நடனம் ஆடுவதால் உடலுக்கு ஆக்சிஜன் அதிக அளவில் கிடைக்கும். இதனால் உடலில் உள்ள தேவையற்ற கழிவுகள் வெளியேறும்.

பரதநாட்டியம், மெதுவான மற்றும் மின்னல் வேக அசைவுகள், கழுத்து அசைவுகள் மற்றும் காலடி அசைவுகளை உள்ளடக்கியது. இவற்றை தொடர்ந்து பயிற்சி செய்வதால் கால், அடிவயிறு மற்றும் கழுத்து ஆகிய பகுதிகளில் உள்ள அதிகப்படியான கொழுப்பு குறையும்.

பரத நாட்டியம் ஆடுபவர்கள் ஏதேனும் சிறப்பு உணவுகள் எடுத்துக்கொள்வார்களா?

பரத நாட்டியத்தில் பலவிதமான அசைவுகள் இருக்கின்றன. அவற்றை முழுமையாக ஆடுவதற்கு ஏற்ற ஆற்றல் உடலில் இருக்க வேண்டும். உடலும், மனமும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அதற்கு சத்தான உணவுகள் அவசியம். பெரும்பாலும் சைவ உணவுகளே சாப்பிடுவார்கள். புரதம் நிறைந்த உணவுகள், காய்கறி, பழங்கள், விதைகள், பருப்புகள் அனைத்தும் கலந்த உணவுமுறை முக்கியமானது.

இளம் தலைமுறைக்கு நீங்கள் சொல்ல நினைப்பது என்ன?

நமது பாரம்பரிய கலைகள் அனைத்துமே வாழ்வியலோடு ஒன்றியவை. அவற்றின் மூலம் உடல், மன மற்றும் சமூக ரீதியாக ஆரோக்கியமாக இருக்க முடியும். கலைகள், கலாசாரம், பண்பாடு மட்டுமில்லாமல், தனி மனித ஒழுக்கத்தையும் கற்றுத் தருகின்றன. எனவே, இளம் தலைமுறையினர் கலைகளைப் போற்றி பாதுகாக்க வேண்டும். 

Tags:    

மேலும் செய்திகள்