பெண்களின் வளர்ச்சிக்கு தொண்டாற்றும் மீனா

சோழிங்கநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியில், ‘பிழைகளற்ற உச்சரிப்பு, ழகரப் பயிற்சி’ வகுப்பு ஒரு வருட காலம் நடத்தப்பட்டு, பரிசு சான்றிதழ் வழங்கப் பட்டது. சென்னையில் பல அரசுப் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் சொற்பொழிவுகள், கருத்தரங்கம், நல்லாசிரியர் விருதுகள் வழங்கல் போன்ற செயல்பாடுகளை மேற்கொண்டு வருகிறேன்.;

Update: 2022-07-17 01:30 GMT

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள விடுதி என்ற கிராமத்தைச் சேர்ந்த மீனா திருப்பதி, பல ஆண்டுகளாகப் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுக்காகவும், அரசுப் பள்ளி மாணவர்களின் கற்றல் வளர்ச்சிக்காகவும் பல்வேறு சேவைகளைச் செய்து வருகிறார். அவரது பேட்டி.

"எனது தந்தை ராவணன், தாய் சின்னத்தாய். என் தந்தை ஆரம்ப காலத்தில் இருந்தே பெரியாருடன் இணைந்து பயணித்ததால், ஐந்து வயது முதலே அவருடன் பொதுக்கூட்டங்களில் பங்கேற்றிருக்கிறேன். கல்லூரி காலத்தில் மாணவியர் தலைவி, பள்ளி சாரணியர் இயக்கத் தலைவியாகவும் இருந்திருக்கிறேன். மின்னணு மற்றும் தொலைத் தொடர்பில் பொறியியல் படிப்பை முடித்த பின்பு இந்திய கடல்சார் தொலைத் தொடர்புத் துறையில் இளம் பொறியாளராக சில ஆண்டுகள் பணியாற்றினேன். தற்போது கணவர் திருப்பதியோடு இணைந்து சுய தொழில் மற்றும் பொதுச் சேவைப் பணிகளை செய்து வருகிறேன். எங்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

பெண்களின் மேம்பாட்டுக்காக எந்தெந்த வகைகளில் சேவை செய்து வருகிறீர்கள்?

கிராமப்புறப் பெண்களுக்கு அழகுக் கலை, மாலை கட்டுதல், நெகிழிப் பூக்கூடை, சடைப் பூ, மூலிகை கம்ப்யூட்டர் சாம்பிராணி செய்தல் மற்றும் நூலினாலான கைவினைப் பொருட்கள் போன்றவற்றுக்கான பயிற்சி வகுப்புகளை நடத்தி, சான்றிதழோடு வேலை வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுக்கிறேன்.

அரசுப் பள்ளி மாணவர்களின் மேம்பாட்டுக்காக நீங்கள் செய்யும் பணிகள் என்ன?

அரசுப் பள்ளி மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகைகளை வழங்கி வருகிறேன். அரசுப் பள்ளிகளில் கவிதை, கட்டுரை, பேச்சு, பாட்டு உள்ளிட்ட போட்டிகளை நடத்தி மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்குகிறேன். அழிந்துவரும் கலைகளான மயிலாட்டம், ஒயிலாட்டம், ஒற்றைக்கால் நடனம் ஆடும் பாரம்பரிய கலைஞர்கள் எல்லாம் நலிவுற்று வேறு தொழிலைத் தேடுகின்ற நிலையில், அவர்களுக்குத் தொழில் வாய்ப்பை ஏற்படுத்தும் விதமாகவும், மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்கும் விதமாகவும், விழாக்களில் அவர்களின் நிகழ்ச்சிகளை நடத்துகிறேன்.

கற்றல் மேம்பாடு சார்ந்து உங்களின் பணிகள் என்ன?

சோழிங்கநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியில், 'பிழைகளற்ற உச்சரிப்பு, ழகரப் பயிற்சி' வகுப்பு ஒரு வருட காலம் நடத்தப்பட்டு, பரிசு சான்றிதழ் வழங்கப் பட்டது. சென்னையில் பல அரசுப் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் சொற்பொழிவுகள், கருத்தரங்கம், நல்லாசிரியர் விருதுகள் வழங்கல் போன்ற செயல்பாடுகளை மேற்கொண்டு வருகிறேன்.

அரசுப் பள்ளி மாணவர்களில், குறிப்பாக பெண் பிள்ளைகளுக்கு உடல் பருமன், இளவயதுப் புற்று நோய், ஆண்-பெண் பாகுபாடில்லா வளர்ப்பு, பெண் உரிமை போன்ற பல விஷயங்கள் சார்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறேன்.

இளம் தலைமுறையை மூடநம்பிக்கைக்கு இடம் கொடுக்காமல், பாலின பேதமில்லாமல் வளரச் செய்ய வேண்டும். அவர்களை பொதுச் சேவைகளில் குழுக்களாக ஈடுபட வைப்பதோடு, தமிழ் மொழி சார்ந்து செயல்பட வைப்பதும் எனது லட்சியம்.

உங்களுக்கு கிடைத்துள்ள அங்கீகாரங்கள்?

சமூக சேவைக்காக, ஒளிரும் பெண் விருது, ஏழைப் பெண்களுக்கான கல்வி உதவித் தொகைக்காக, சுமார் ஒன்றரை கோடி ரூபாய் வைப்பு நிதிக்கான செயல்பாட்டு விருது உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றிருக்கிறேன். 

Tags:    

மேலும் செய்திகள்