சாதிப்பதற்கு திருமணம் தடையல்ல - கார்த்திகா

குழந்தைகளிடம் இருந்து பலவற்றை கற்றுக்கொள்கிறேன். எதையும் திணிக்காமல் அவர்களை அவர்களாகவே இருக்கச் செய்து கற்பிக்கிறோம். வாழ்வியலை சொல்லித் தருகிறோம்.

Update: 2023-02-19 01:30 GMT

டிப்பு, வேலை, லட்சியம், கனவு என்று தங்களுக்கான பாதையில் பயணிக்கும் பல பெண்கள், திருமணத்துக்கு பின்னர் குடும்ப பொறுப்புகள் காரணமாக அவற்றை மறந்துவிடுகின்றனர். ஆனால் திருமணத்துக்கு பின்னரும் முயற்சி செய்து தனது கனவை நனவாக்கி இருக்கிறார் ராஜபாளையத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான கார்த்திகா கஜேந்திரன். அவருடன் நடந்த உரையாடல்.

உங்கள் படிப்பு, வேலை பற்றி கூறுங்கள்?

பொறியியல் படித்து முடித்த எனக்கு, மனிதவளம் தொடர்பான துறையில் அதிக ஆர்வம் இருந்தது. அதனால் எம்.பி.ஏ., மனிதவள மேம்பாடு படித்தேன். ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றினேன். திருமணம், குழந்தைப்பேறுக்கு பின்னரும் பணியைத் தொடர்ந்தேன். அர்ப்பணிப்புடன் பணியாற்றினாலும், என் கனவு அது இல்லை என்பதை உணர்ந்து வேலையில் இருந்து விலகினேன்.

உங்களுக்கான பணியை எப்படி தேர்ந்தெடுத்தீர்கள்?

வேலையில் இருந்து விலகியதும், ராஜபாளையத்தில் குடியேறினோம். என் கணவர் அவரது தொழில்சார்ந்த பணிகளைச் செய்து வந்தார். எனக்குப் பிடித்தது குழந்தைகள் உலகம். எனவே எங்கள் வீட்டிற்கு வந்து செல்லும் அக்கம் பக்கத்தில் இருந்த குழந்தைகளுக்கு, பொதுவான சில விஷயங்களைக் கற்றுக்கொடுக்கத் தொடங்கினேன்.

இந்த கற்பித்தல்தான் 'என் கனவு' என்பதை உணர்ந்தேன். ஒரு பள்ளியில் சில ஆண்டுகள் பணியாற்றி அனுபவம் பெற்றேன். பின்னர் மாண்டிச்சோரி முறையிலான சிறிய மழலையர் பள்ளியைத் தொடங்கினேன்.

இந்தப்பணி நிறைவாக உள்ளது. குழந்தைகளிடம் இருந்து பலவற்றை கற்றுக்கொள்கிறேன். எதையும் திணிக்காமல் அவர்களை அவர்களாகவே இருக்கச் செய்து கற்பிக்கிறோம். வாழ்வியலை சொல்லித் தருகிறோம்.

மழலைகளுக்கு வாழ்வியலை கற்றுத் தருவது சாத்தியமா?

அது கற்பிக்கும் முறையில் இருக்கிறது. உதாரணத்துக்கு குழந்தைகளிடம் பட்டாம்பூச்சி உருவாகும் விதத்தை கற்றுத் தருவதை சொல்லலாம். ஒரு புழு எவ்வாறு வெவ்வேறு நிலைகளைக் கடந்து, தனக்கான வேலைகளைத் தானே செய்து முழுமை பெறுகிறது என்பதை அவர்களுக்கு பிடித்த வகையிலும், புரியும்படியாகவும் சொல்ல வேண்டும். அவ்வாறு செய்யும்போது குழந்தைகள் ஆர்வம் கொள்வார்கள். சிறு சிறு விஷயங்கள் மூலமாக அவர்களுக்கு வாழ்வியலைக் கற்றுத் தர முடியும். அவற்றில் இருந்துதான் சுயஒழுக்கம் பிறக்கும்.

உங்களால் மறக்கமுடியாத நெகிழ்வூட்டும் நிகழ்வு ஏதாவது உண்டா?

எங்கள் பகுதியில் இருக்கும் அரசு உதவிபெறும் பள்ளியில், மாணவர் சேர்க்கை குறைவாக இருந்ததால் பள்ளியை தொடர்ந்து நடத்த முடியாமல் மூடும் சூழல் ஏற்பட்டது. அதை மாற்ற முற்பட்டு, வார இறுதி நாட்களில் பல்வேறு துறைசார்ந்த வல்லுநர்களை அழைத்து வந்து பேச வைத்தேன். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. படிக்கும் குழந்தைகள் மற்றும் பெற்றோர்களின் மனநிலை மாறியது. மாணவர் சேர்க்கை அதிகரித்ததால் அந்தப் பள்ளி தொடர்ந்து இயங்கி வருகிறது.

உங்களுக்கு கிடைத்த பாராட்டு, விருதுகள் பற்றி கூறுங்கள்?

அரசு உதவி பெறும் பள்ளியில் ஏற்படுத்திய மாற்றத்திற்காக 'நம்பிக்கைச்சுடர்' விருது பெற்றிருக்கிறேன். சிறந்த பெண் தொழில் முனைவோருக்கான விருதினை, ராஜபாளையம் விமன்ஸ் விங் எனக்கு வழங்கியது.

Tags:    

மேலும் செய்திகள்