கியூப் விளையாட்டில் சாதனை படைக்கும் சிறுமி மான்யா

ஒரு நிமிடத்திற்குள் 3x3 கியூப்பை இணைக்கும் சாதனைக்காக தினமும் காலை 6 மணிக்கு எழுந்து, சூரிய ஒளியில் அரை மணி நேரம் வரை கியூப் பயிற்சி செய்கிறார். கியூப் நிறங்களை ஒன்று சேர்க்கும் வரை அந்த இடத்தை விட்டு நகராமல் தீவிரமாகப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

Update: 2022-09-04 01:30 GMT

துரையைச் சேர்ந்த வசந்த் மற்றும் சந்திரிகா தம்பதியின் இரண்டாவது மகளான மான்யா தர்ஷினி தேசிய அளவிலான கியூப் போட்டிகளில் கவனம் ஈர்த்து வருகிறார். தனியார் பள்ளி ஒன்றில் முதல் வகுப்பு படித்து வருகிற 6 வயதான மான்யா, தேசிய அளவிலான மரத்தாலான கனசதுர-கியூப் போட்டியில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார். பள்ளி முடித்து வீட்டிற்கு வந்ததுமே டி.வி, வீடியோ கேம், செல்போன் விளையாட்டு போன்றவற்றில் கவனம் செலுத்தாமல், தீவிரமாக கியூப் பயிற்சியில் ஈடுபடுகிறார்.

வருகிற அக்டோபர் மாதம் 30-ந் தேதி நடக்க இருக்கும் கின்னஸ் ரெக்கார்டு சாதனைப் போட்டியில் பங்கேற்கும் குழந்தைகள் குழுவில் மான்யாவும் இடம்பெற்று இருக்கிறார்.

ஒரு நிமிடத்திற்குள் 3x3 கியூப்பை இணைக்கும் சாதனைக்காக தினமும் காலை 6 மணிக்கு எழுந்து, சூரிய ஒளியில் அரை மணி நேரம் வரை கியூப் பயிற்சி செய்கிறார். கியூப் நிறங்களை ஒன்று சேர்க்கும் வரை அந்த இடத்தை விட்டு நகராமல் தீவிரமாகப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

மான்யா பல்வேறு மாநில மற்றும் தேசிய அளவிலான கியூப் போட்டிகளிலும், உருவங்களை வடிவமைக்கும் மொசைக் கியூப், 3x3 வுட்டன் கியூப், இடுப்பில் வளையங்களை மாட்டி அவை கீழே விழாமல் ஆடிக்கொண்டே வண்ணங்களைச் சேர்ப்பது, கண்களைக் கட்டிக்கொண்டு கியூப் வண்ணங்களை ஒன்று சேர்ப்பது போன்ற பலவகையான கியூப் போட்டிகளில் அசத்தி வருகிறார்.

கடந்த மாதம் தமிழ்நாட்டில் நடைபெற்ற வுட்டன் கியூப் போட்டியில், இடுப்பில் வளையங்களைச் சுற்றியபடியே 5 நிமிடத்தில் கியூப் நிறங்களை ஒன்று சேர்த்து உலக அளவில் சாதனை படைத்திருக்கிறார்.

தேசிய அளவில் இரண்டு வுட்டன் கியூப் போட்டிகளில் முதலிடமும், மாவட்ட அளவில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் பங்கேற்றுப் பரிசுகள் மற்றும் பதக்கங்களும் பெற்றுள்ளார். தொலைக்காட்சி மற்றும் மேடை நிகழ்ச்சிகளிலும் தனது கியூப் விளையாட்டுத் திறமையைக் காண்பித்துப் பாராட்டுக்களைக் குவித்து வருகிறார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றிற்காக நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த 'டாக்டர்' திரைப்பட கதாபாத்திரத்தை மொசைக் ஆர்ட் வடிவமாக செய்து அவருக்கு பரிசளித்தார். இதனை மான்யா அவரது அண்ணன் தர்ஷன் உடன் இணைந்து செய்திருந்தார்.

இதேபோல் முக்கிய நாட்களில் நடைபெறும் விழாக்களில் கண்களைக் கட்டிக்கொண்டு கியூப்பை ஒன்று சேர்ப்பது, வளையங்களைச் சுற்றிக்கொண்டே கியூப்பில் உள்ள நிறங்களை ஒன்று சேர்ப்பது போன்ற பல சாகசங்களை செய்து வருகிறார். 

Tags:    

மேலும் செய்திகள்