வாழ்க்கையில் மீண்டெழ கைகொடுக்கும் லிசி

பெண்கள் வாழ்க்கையில் துணிச்சலோடு இருக்க வேண்டும். தோற்றாலும் தங்கள் முயற்சியால் எழுந்து நிற்க வேண்டும்;

Update:2023-03-19 07:00 IST

நெல்லை அருகில் உள்ள பூத்தக்காலம் கிராமத்தை பூர்வீகமாகக் கொண்டவர் எலிசபெத் லிசி. கணவரால் கைவிடப்பட்டவர்கள், விதவைகள், வாய்ப்பு தேடுபவர்கள், வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு தவிப்பவர்கள் என பலதரப்பட்ட பெண்களை ஒருங்கிணைத்து, அவர்களுக்கு சமையல், குழந்தை பராமரிப்பு, செவிலியர் பணி, முதியவர்கள் மற்றும் நோயாளிகள் பராமரிப்பு போன்ற வேலைவாய்ப்பை உருவாக்கிக் கொடுக்கிறார்.

"வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு இனி வாழவே முடியாது என்று தவிக்கும் பெண்களும் மனது வைத்தால், வெற்றிகரமாக வாழ முடியும்" என்று கூறுகிறார் எலிசபெத் லிசி. தான் சந்தித்த அத்தகைய பெண்கள், தங்கள் முயற்சியாலும், உழைப்பாலும் தற்போது வெற்றிகரமாக வாழ்வதை இங்கே பகிர்ந்துகொள்கிறார்.

''எனது குடும்பம் பொருளாதார ரீதியில் நல்ல நிலையில் இருந்தது. அதனால் வேலைக்குச் சென்று சம்பாதிக்க வேண்டிய அவசியம் எனக்கு ஏற்படவில்லை. ஆனால், ஒரு கட்டத்தில் எதிர்பாராத நிகழ்வுகளால் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டோம். நான் வேலைக்குச் சென்று சம்பாதித்தால் மட்டுமே, இந்த நிலையை மாற்ற முடியும் என்று எண்ணினேன். அவ்வாறு நான் வேலை தேடிய காலத்தில், என்னைவிட சிரமமான வாழ்க்கைச் சூழலில் இருந்த பல பெண்களைப் பார்த்தேன்.

அவர்கள் தங்கள் பிரச்சினைகளை துணிச்சலாகவும், தன்னம்பிக்கையோடும் எதிர்கொண்டதைக் கவனித்தேன். இவ்வாறு வாழ்க்கையில் போராடும் பெண்களுக்கு வேலை வாங்கிக் கொடுத்து, அவர்கள் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணம் உண்டானது. அப்போது முதல், இதையே முழுநேரப் பணியாகச் செய்து வருகிறேன்.

சிதம்பரம் பகுதியைச் சேர்ந்த, பள்ளிப் படிப்பைக்கூட முடித்திராத பெண் அவள். வெளிநாட்டில் இருந்து வந்த ஒருவருக்கு அவளை திருமணம் செய்து வைத்தனர். 'மகள் நன்றாக வாழ வேண்டும்' என்பதற்காக, அவளது பெற்றோர் தங்கள் சக்திக்கு மீறி நகை, பணம், கார் என சீர்வரிசை கொடுத்தனர். கணவரோடு சென்னையில் குடியேறி, மூன்று மாதங்களுக்குப் பின்பு அந்தப் பெண் கர்ப்பிணியானாள். அவளது கணவன், சொந்தமாகத் தொழில் தொடங்கப்போவதாகக் கூறி, அவளிடம் இருந்த நகைகள் அனைத்தையும் வாங்கிக்கொண்டு நிராதரவாக விட்டுச் சென்றான்.

அவளுக்கு சமையல் மட்டுமே தெரிந்ததால், ஒரு வீட்டில் சமையல் வேலைக்குச் சேர்த்து விட்டேன். அங்கு உண்மையாகவும், நேர்மையாகவும் உழைத்தாள். அந்த வீட்டில் இருந்தவர்களே அவளது பிரசவ செலவை ஏற்றுக் கொண்டனர். தற்போது தன்னையும், குழந்தையையும் காப்பாற்றிக் கொண்டு, கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வருகிறாள். விவாகரத்து பெற்று சுயமாக வாழ்வதற்காக, நீதிமன்றத்தில் கணவன் மீது ஆட்கொணர்வு மனு போட்டுக் காத்திருக்கிறாள்.

நான் சந்தித்த மற்றொரு விதவை பெண்ணுக்கு 55 வயது இருக்கும். நன்றாக வாழ்ந்த குடும்பம். ஒரு விபத்தில் மகனை இழந்தார். மருமகள் குழந்தையுடன் உணவுக்குக்கூட வழியில்லாத நிலையில் இருந்தாள். இந்த நிலையைப் பார்த்து துவண்டு போகாமல், வாழ்க்கையை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டார் அந்தப் பெண். அவருக்கு நன்றாக சமைக்கத் தெரிந்ததால், ஒரு வீட்டில் சமையல் வேலை வாங்கிக் கொடுத்தேன். இப்போது சமையல் வேலை செய்து, அதன் மூலம் வரும் சம்பாத்தியத்தில் தனது மருமகளையும், பேரக் குழந்தையையும் காப்பாற்றி வருகிறார்.

திருவண்ணாமலை மாவட்டம் அருகே சிறிய கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவர் செவிலியர் படிப்பு முடித்திருந்தார். பிரபல மருத்துவமனையில் பணிபுரிந்தபோது, மருத்துவமனைக்கு வந்த வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டு காதல் மலர்ந்தது. பெற்றோரின் எதிர்ப்பால் இருவரும் சென்னைக்கு வந்தனர். அந்த வாலிபர் சில நாட்கள் அவளுடன் வாழ்ந்துவிட்டு, பின்னர் அவளை ஏமாற்றி விட்டு சென்று விட்டான். அந்தப் பெண் என்னுடைய உதவியால் தற்போது ஒரு மருத்துவமனையில் பணியாற்றிக்கொண்டு சுயமாக வாழ்ந்து வருகிறார்.

இதுபோல் ஏராளமான கதைகள் உள்ளன. பெண்கள் வாழ்க்கையில் துணிச்சலோடு இருக்க வேண்டும். தோற்றாலும் தங்கள் முயற்சியால் எழுந்து நிற்க வேண்டும்'' என்று கூறும் லிசி, சிங்கப்பெண், சாதனைப்பெண் போன்ற பல விருதுகளையும் பெற்றுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்