இயற்கையோடு இணைந்து வாழலாம்- கீர்த்தனா

எனது செயல்பாடுகள் எல்லோருக்கும் பலனளிக்க வேண்டும் என்று நினைத்ததால், தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்றின் செயல் இயக்குநராக, என் னால் ஆன எல்லா வகைகளிலும் மக்களுக்கு சேவை செய்து வருகிறேன்.;

Update:2022-12-11 07:00 IST

"எல்லோருக்கும், எல்லாமும் சமமாகக் கிடைக்க வேண்டும். அவ்வாறு கிடைக்காவிட்டாலும், அவர்களது அடிப்படைத் தேவைகளாவது பூர்த்தி செய்யப்பட வேண்டும். அது நடக்கும் வரை எனது முயற்சிகள் தொடரும்" என்கிறார் கீர்த்தனா தர்ஷன். இந்தியாவில் நடைபெற்ற உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்க மாநாட்டில் 'சிறந்த பெண்மணி' விருது பெற்ற அவரது பேட்டி.

"இலங்கையில் நுவரெலியாவில் பிறந்த நான், ஒற்றைப் பெற்றோரான எனது தாய் சகுந்தலாவின் அன்பிலும், அர்ப்பணிப்பிலும் வளர்ந்தேன். அரசு பல்கலைக்கழகத்தில் கற்கை நெறியில் இளங்கலைப் பட்டத்தைப் பெற்றேன். படிப்பை முடித்தவுடன் தேயிலைப் பயிர் செய்யும் நிறுவனத்தில் மனிதவள நிர்வாகியாகப் பணியாற்றினேன்.

திருமணத்துக்குப் பிறகு அபுதாபி நாட்டுக்குச் சென்று நிதி நிறுவனத்தில் நான்கு ஆண்டுகள் பணியில் இருந்தேன். சிறு வயது முதலே சமூக சேவையில் நாட்டம் கொண்ட நான், மீண்டும் இலங்கை திரும்பி, சேவைப் பணியில் ஈடுபட்டு வருகிறேன்.

நீங்கள் செய்து வரும் பணிகள் பற்றி சொல்லுங்கள்?

இயற்கையோடும், சமூகத்தோடும் இணைந்து வாழ வேண்டும் என்ற எண்ணம் எனக்கு எப்போதும் உண்டு. அதனால்தான் இயற்கை விவசாயம், கால்நடை வளர்ப்பு, சமூக சேவை என்று பல துறைகளிலும் பயணித்து வருகிறேன்.

எனது செயல்பாடுகள் எல்லோருக்கும் பலனளிக்க வேண்டும் என்று நினைத்ததால், தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்றின் செயல் இயக்குநராக, என் னால் ஆன எல்லா வகைகளிலும் மக்களுக்கு சேவை செய்து வருகிறேன்.

கல்விதான் தலைமுறைகளை நிமிரச் செய்யும் என்பதால், கல்விக்கு முன்னுரிமை அளிக்கிறோம். பொருளாதாரம், ஊட்டச்சத்துடன் கூடிய சுகாதாரம் போன்ற துறைகளிலும் கவனம் செலுத்தி வருகிறோம்.

நாட்டின் நிலையற்ற பொருளாதாரத்தினால் உணவுத் தட்டுப்பாடு வரக் கூடாது என்பதற்காக கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக, 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு இரு வேளை உணவு வழங்கி வருகிறோம். வீட்டுத்தோட்டம் உருவாக்கி பயன்பெறுவதை ஊக்குவிக்க, பல உதவிகளைச் செய்து வருகிறோம்.

இயற்கை விவசாயம் செய்வது குறித்து சொல்லுங்கள்?

இயற்கையோடு சேர்ந்து வாழும்போது, அது எப்போதும் நம்மைக் கைவிடாது. இயற்கை விவசாயத்தில் மகசூல் அதிகமாகவே கிடைக்கிறது. விவசாயத்தில் ரசாயன பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தும்போது நிலம் மலட்டுத் தன்மை அடைகிறது. அந்த நிலையை மாற்றுவதற்கு ஒரு தொடக்கமாக இயற்கை விவசாயத்தில் காலடி எடுத்து வைத்துள்ளோம்.

பசுமைக்குடில் திட்டத்தின்படி, இரண்டு ஏக்கர் நிலப்பரப்பில் ஆறு கூடாரங்களை அமைத்து 'வெனிலா' உற்பத்தி செய்து வருகிறேன். நாளின் பெரும் பகுதி நேரத்தை எனது வெனிலா தோட்டத்திலேயே செலவிடுகிறேன். எங்கள் காலநிலைக்கு ஏற்ற உற்பத்தி வெனிலாதான். இதில் ஊடுபயிராகக் கீரைகள், காய்கறிகள் போன்றவற்றையும் பயிர் செய்கிறேன்.

அரசு அதிகாரிகள்கூட நான் பின்பற்றும் தொழில்நுட்பத்தில் இருந்து புதிய உத்திகளைக் கற்றுச் செல்கின்றனர். வெனிலா உற்பத்தி தொடர்பான ஆராய்ச்சிகளுக்குப் பல்கலைக்கழக மாணவர்களும் என்னுடன் இணைந்து செயல்படுவதை, என்னுடைய சாதனைக்கு சான்றாகக் கருதுகிறேன்.

கால்நடை வளர்ப்பை வெற்றிகரமாகச் செய்வது எப்படி?

கால்நடை வளர்ப்பில், விலங்குகளின் சவுகரியத்தைக் கருத்தில் கொண்டே செயல்படுகிறேன். மனிதனின் சுகாதாரத்தைப் போலவே, பண்ணை விலங்குகளின் சுகாதாரமும் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும். ஒருங்கிணைந்த பண்ணை வளர்ப்பு முறையில்தான் கால்நடை வளர்ப்பை மேற்கொண்டு வருகிறேன். எந்தப் பொருளையும் நேரடியாக விற்பனை செய்வதைவிட, மதிப்புக்கூட்டி விற்பனை செய்யும்போது பலன் அதிகமாகக் கிடைக்கிறது.

ஒரு தொழில் முனைவோராக உங்களின் சாதனை பற்றி?

'முயற்சி ஒன்றுதான் ஒருவரை முன்னிலைப்படுத்தும்' என மனப்பூர்வமாக நம்புகிறேன். எந்த தொழிலையும் நம்பிக்கையுடன் தொடங்கி நடத்த வேண்டும். லாபமோ, நஷ்டமோ எதுவாக இருந்தாலும், முயற்சி அனுபவமாய் அமைந்திடும் அல்லது முயற்சியின் பலனை அனுபவித்துவிட முடியும்.

நான் படிக்கும்போதே சுய சம்பாத்தியம் வேண்டும் என்று, கைகளில் அலங்கார மெகந்தி போடும் தொழிலைக் கற்றுக்கொண்டு செய்தேன். பின்னர் அபுதாபியில் இருந்த காலத்தில், கேக் தயாரிப்பில் ஈடுபட்டு அதில் வரும் வருமானத்தில் எனது தேவைகளை நிறைவேற்றிக் கொண்டேன்.

கொரோனா ஊரடங்கால் நஷ்டத்தைச் சந்தித்த எனது உணவகத்தை தனியாளாக மீண்டும் கட்டியெழுப்பி, இன்று 12 ஊழியர்களுடன் லாபகரமாக இயக்கி வருகிறேன்.

தரிசாக கிடந்த நிலத்தை இரண்டு ஆண்டுகள் இரவு-பகல் பாராது உழைத்து, இன்று வருமானம் ஈட்டும் நிலமாக மாற்றியுள்ளேன். எந்தத் தொழிலை ஆரம்பித்தாலும் தினமும் அதில் இருந்து ஏதாவது ஒன்றைக் கற்க வேண்டும் என்பதே எனது வெற்றியின் மந்திரம்.

சமூகத்துக்கு நீங்கள் செய்து வரும் பணிகள் குறித்து சொல்லுங்கள்?

பொருளாதார பாதிப்பால் யாரும் பசியால் வாடக்கூடாது என்ற எண்ணத்தில் உணவு வழங்கும் திட்டங்களைத் தொடங்கினோம். சமைத்த உணவு மட்டுமின்றி,உலர் உணவுப் பொட்டலங்களையும் வழங்கினோம். 40 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு 15 லட்ச ரூபாய் செலவில் கற்றல் உபகரணங்கள் வழங்கியிருக்கிறோம். வீட்டுத் தோட்டத்துக்கான விதைகள், ஏழை மாணவர்களுக்குக் கல்விக் கட்டணம், வாகன வசதி ஏற்படுத்தித் தருவதுடன் பெண்கள் சுயதொழில் செய்யவும் உறுதுணையாக இருக்கிறோம்.

Tags:    

மேலும் செய்திகள்