பாரம்பரிய கலைகளில் சாதிக்கும் கனிஷ்கா
மரத்தால் ஆன கம்பத்தின் மீது ஏறி, காற்றில் மிதந்தபடியே உடலை வளைத்து பல்வேறு சாகசங்களை செய்யும் வீர விளையாட்டு ‘மல்லர் கம்பம்’. தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான இது, தற்போது இந்தியா முழுவதும் வெவ்வேறு பெயர்களில் பிரபலமாக உள்ளது.;
மரத்தால் ஆன கம்பத்தின் மீது ஏறி, காற்றில் மிதந்தபடியே உடலை வளைத்து பல்வேறு சாகசங்களை செய்யும் வீர விளையாட்டு 'மல்லர் கம்பம்'. தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான இது, தற்போது இந்தியா முழுவதும் வெவ்வேறு பெயர்களில் பிரபலமாக உள்ளது. 'மல்லர் கம்பம்' விளையாட்டில் பல்வேறு சாதனைகளை செய்து வருகிறார் ராமநாதபுரம் கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவி கனிஷ்கா. இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார்.
மழலைப் பருவத்திலேயே கலைகள் மீது ஆர்வம் காட்டிய கனிஷ்காவை, அவரது தாய் பரதம் மற்றும் பாட்டு வகுப்புகளில் சேர்த்தார். ஆனால் கனிஷ்காவின் கவனமோ பக்கத்து வகுப்பில் நடைபெற்ற சிலம்பம், மல்லர் கம்பம் போன்ற வீர விளையாட்டுகளின் மீது பதிந்தது. எனவே அவரை மல்லர் கம்பம் பயிற்சி வகுப்பில் சேர்த்தனர்.
பயிற்சியாளர் மல்லன் ஆதித்யனிடம் ஆர்வத்தோடு பயின்ற கனிஷ்கா, 2022-ம் ஆண்டு விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற மாநில அளவிலான 'மல்லர் கம்பம்' போட்டியில் கலந்து கொண்டார். அதில் முதல்முறையாக நான்காம் பரிசு வென்று சாதனை படைத்தார். 'மல்லர் கம்ப விளையாட்டில் இதுவரை யாரும் செய்திடாத ஒரு சாதனையை படைக்க வேண்டும்' என்ற எண்ணத்தில் 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம், எட்டு அடி உயரமுள்ள மல்லர் கம்பத்தில் 'நமஸ்கார ஆசனம்' செய்தபடி இரண்டு மணி நேரம் சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்தார்.
இவருடைய சாதனையை கலாம் புக் ஆப் வேர்ல்டு ரெக்கார்டு அமைப்பு அங்கீகரித்து சான்றிதழ் வழங்கியது. இதை பாராட்டும் விதமாக உத்ரா அறக்கட்டளை சார்பில், திருச்சி மாநகரில் 'மண்ணின் மைந்தர்' என்ற விருதைப் பெற்றார் கனிஷ்கா.
பின்பு கடந்த மே மாதம் காரைக்குடி மாநகரில், யோகா அறக்கட்டளை நேரு யுவகேந்திரா இளைஞர் நலன் விளையாட்டு அமைச்சகம் சார்பில் 'சாதனையாளர்' விருது பெற்றார்.
"மல்லர் கம்பம் விளையாட்டில் தேசிய அளவில் வெற்றி பெற்று, இந்தியாவுக்கு பெருமை சேர்ப்பதே என் லட்சியம்" என்று உறுதியுடன் கூறுகிறார் கனிஷ்கா. மல்லர் கம்பம் மட்டுமில்லாமல் சிலம்பம், வாள்வீச்சு, வேல்கம்பு, மான் கொம்பு, குத்து வரிசை, அடிமுறை போன்ற விளையாட்டுகளிலும் பயிற்சி பெற்று வருகிறார் கனிஷ்கா.
கடந்த மே மாதம் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற, சர்வதேச அளவிலான சிலம்பம் சுற்றும் போட்டியில் கலந்து கொண்டு 'தங்கப் பதக்கம்' வென்றார். "பெண் குழந்தைகள், தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டுகளை கற்றுக் கொண்டால், எதையும் தைரியத்தோடு எதிர்கொள்ளலாம்" என்கிறார் மாணவி கனிஷ்கா.