உதிரும் முடிகளைக் கொண்டு சவுரி தயாரித்த ஜெகதீஸ் மீனா
நானும் உதிர்ந்த முடிகளைச் சேகரித்து, என் சொந்த முடியிலேயே சவுரி செய்தேன். கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் தொடர்ச்சியாய் உதிர்ந்த முடியினை சேகரித்து 3 சவுரிகளை பின்னியுள்ளேன்.;
தேனியைச் சேர்ந்த ஜெகதீஸ் மீனா, யூடியூப் தளத்தில் கடந்த 2 ஆண்டுகளாக முடி பராமரிப்பு, முடி வளர்ச்சி, முடி உதிர்வுக்கான எளிய தீர்வு என கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் வகையிலான வீடியோக்களை பதிவேற்றி வருகிறார். இவரது 250-க்கும் மேற்பட்ட வீடியோக்களால், 2 லட்சத்து 50 ஆயிரம் பேர் ஈர்க்கப்பட்டு சப்ஸ்கிரைப் செய்துள்ளனர். அவற்றில் பலரது கவனத்தை ஈர்த்தது, உதிரும் முடிகளைக் கொண்டு இவர் தயாரித்த சவுரி பற்றிய வீடியோ. 3 வருடங்களாக உதிர்ந்த முடியினை சேகரித்து அதில் சவுரி செய்துள்ள ஜெகதீஸ் மீனா, எவ்வாறு சவுரி பின்னுவதற்கு முடியினை சேகரித்து, உபயோகிக்க வேண்டும் என்பதை விளக்குகிறார்.
''எனக்கு சிறு வயதிலிருந்தே முடி வளர்ப்பதில் அளவுகடந்த ஆர்வம். எனது அம்மாவின் பூர்வீகம் கேரளா என்பதால், முடி வளர்ச்சியைத் தூண்டும் பல ஹேர் பேக்குகளையும், எண்ணெய்களையும் செய்து கொடுப்பார். என்னுடைய கூந்தலும், பார்ப்பவர்களது விழி அகலச் செய்யும் வகையில் வளர்ந்தது. கல்லூரிப் படிப்பிற்குப் பிறகு, என்னால் கூந்தலைப் பராமரிக்க முடியவில்லை. அதன் விளைவாக, கொத்து கொத்தாய் முடி உதிர்வினை சந்திக்க நேரிட்டது.
அந்த சமயத்தில் தான், தனது சிறு வயதில் உதிர்ந்த முடியினை சேகரித்து சவுரி பின்னியதைப் பற்றி அம்மா கூறியது நினைவுக்கு வந்தது. நானும் உதிர்ந்த முடிகளைச் சேகரித்து, என் சொந்தமுடியிலேயே சவுரி செய்தேன். கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் தொடர்ச்சியாய் உதிர்ந்த முடியினை சேகரித்து 3 சவுரிகளை பின்னியுள்ளேன்.
இன்றைக்கு இளம் வயதினர் சந்திக்கும் சவாலான விஷயங்களில் முடி உதிர்வும் ஒன்று. சொந்த முடியிலான சவுரி, செயற்கை சவுரி முடிகளுக்கு மாற்றாக அமைந்து, முடி பற்றிய கவலையையும் தீர்க்கும்.
சவுரிக்கான கூந்தல் சேகரிப்பு:
கூந்தலை எப்போதெல்லாம் பின்னுகிறோமோ, அப்போது உதிரும் முடியினை எடுத்து ஒரு துணிப்பையில் சேகரித்துக் கொண்டே வர வேண்டும். முடியைச் சுருட்டியும் வைக்கலாம். முடிச்சுகளோடு இருக்கும் முடி பயனற்றது. முடியினைச் சேகரிக்கும் பையில் பூச்சி தாக்கிவிடாமல் கவனித்துக் கொள்ள வேண்டும். மற்றபடி அதற்குப் பராமரிப்பு எதுவும் தேவையில்லை.
உங்களது முடி உதிர்விற்கு ஏற்றவாறு 1 முதல் 3 ஆண்டுகளில் சவுரி பின்னுவதற்குப் போதுமான முடியினை சேமிக்க முடியும். இவ்வாறு சேமித்த முடியை 'விக்' செய்பவர்களிடம் கொடுத்தால் முடியினை முறைப்படி பின்னி சவுரி செய்து கொடுப்பார்கள்.
சவுரியின் பராமரிப்பு:
நம் சொந்த முடியில் பின்னும் சவுரிக்கு, குறைந்த பராமரிப்பு மட்டுமே தேவைப்படும். மாதத்திற்கு ஒருமுறை ஒரு வாளியில் தண்ணீர் எடுத்துக்கொண்டு அதில் ஷாம்பூ கலந்து முடியினைத் துணி அலசுவது போல் சுத்தம் செய்து, வெயிலில் உலர்த்த வேண்டும். சவுரிமுடியினை முறுக்கவோ, பிழியவோ கூடாது. பயன்படுத்திய பிறகு நன்றாக எண்ணெய் பூசி வைத்துவிட வேண்டும்'' என்றார்.