கோலங்களில் புதுமை செய்யும் இயற்கை விவசாயி
நான் கோலமிடுவதை ஒரு விரதமாக, தவமாகவே கடைப்பிடித்து வருகிறேன். இதன் பயனாக மனதில் நல்ல சிந்தனைகள் மேலோங்குகிறது.;
ஒவ்வொரு வருடமும் மார்கழி மாதத்தில் வித்தியாசமான முறையில் ரங்கோலி கோலமிட்டு அசத்தி வருபவர் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் வசிக்கும் லட்சுமி தேவி. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருப்பாவையின் வரிகளுக்கு ஏற்றார் போல் விளக்கத்துடன் கோலமிட்டார். சென்ற ஆண்டு பெரியாழ்வார் திருமொழியில் இருந்து பாடல்களைத் தேர்ந்தெடுத்து அதற்கு ஏற்றவாறு ஏதாவது ஒரு மாநிலத்தின் ஓவியத்தை ஒருங்கிணைத்து கோலம் வரைந்தார்.
இந்த ஆண்டு12 ஆழ்வார்களின் பாசுரங்களில், திருமாலின் ஒவ்வொரு நாமத்தை குறிக்கும் பாடல்களை தேர்வு செய்து அதனை புள்ளிகளும், ரங்கோலியும் இணைத்து கோலமிட்டு வருகிறார். தமிழக அரசின் 2021-2022 ஆண்டிற்கான 'சிறந்த விவசாய பெண்மணி' விருதை தமிழக முதல்வரிடம் இருந்து உலக மகளிர் தினத்தில் பெற்ற லட்சுமி தேவியுடன் ஒரு சந்திப்பு.
கோலம் போடுவதால் ஏற்படும் மனநிறைவு குறித்து சொல்லுங்கள்?
மார்கழி மாதம் தேவர்களின் அதிகாலைப் பொழுது என்று கூறப்படுகிறது. இந்த மாதத்தில் வைணவ ஆலயங்களில் ஆண்டாள் நாச்சியாரின் திருப்பாவையும், சிவாலயங்களில் மாணிக்கவாசகரின் திருவெம்பாவை மற்றும் திருப்பள்ளியெழுச்சியும் பாடுவது மரபு. மார்கழி மாதத்தில் வரையப்படும் கோலங்கள் சிறப்பு வாய்ந்தவை. சிறுவயது முதலே எனக்கு மார்கழி கோலமிடுவது மனநிறைவைத் தருகிறது. மார்கழி மாதத்தின் அதிகாலையில் கோலமிடுவது ஆரோக்கியத்தை அதிகரிக்கும் என்று அறிவியல் ரீதியாக சொல்லப்படுகிறது.
நான் கோலமிடுவதை ஒரு விரதமாக, தவமாகவே கடைப்பிடித்து வருகிறேன். இதன் பயனாக மனதில் நல்ல சிந்தனைகள் மேலோங்குகிறது. தெளிவான, தீர்க்கமான முடிவுகள் எடுக்கும் ஆற்றல் பெருகுகிறது. தன்னம்பிக்கை அதிகரிக்கிறது.
கோலத்திற்கான கருப்பொருளை எப்படி தேர்வு செய்கிறீர்கள்?
ஒவ்வொரு மார்கழியிலும் கண்ணனின் கதைகள் சொல்லும் கோலங்கள் வரைந்து வருகிறேன். ஆழ்வார்களின் பாடல்களில் இருந்து அரங்கத்தம்மா, வேங்கடவா, ஸ்ரீராமா, காகுத்தா, தாமோதரா, நாராயணா, கோபாலா, நரசிம்மா என்று திருமாலின் நாமங்களைச் சொல்லும் 30 பாடல்களை தேர்ந்தெடுத்து, பாடலில் உள்ள பொருளுக்கு ஏற்றவாறு கோலமிடுகிறேன்.கோலத்தில் அந்தப் பாடலையும் எழுதி அவற்றின் பொருளோடு சமூக வலைத்தளங்களிலும் பதிவு செய்து வருகிறேன்.
இயற்கை விவசாய அனுபவம் மற்றும் அதனால் கிடைத்த பெருமை பற்றி சொல்லுங்கள்?
இயற்கையும் இறைவனின் உருவம்தானே. எனவே இயற்கையோடு இணைந்து வாழ்வதில் எனக்கு விருப்பம் அதிகம். அதனால் தான் ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள், களைக் கொல்லிகள் பயன்படுத்தாமல் இயற்கை விவசாயம் செய்து வருகிறேன். அதற்கான அங்கீகாரமும் கிடைக்கிறது. விவசாயம் சார்ந்து பல விருதுகள் பெற்றிருந்தாலும் 'பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர். பாரம்பரிய நெல் பாதுகாவலர் விருது', 'நம்மாழ்வார் விருது', 'சிறந்த பெண் விவசாயி விருது', 'தொழில்முனைவோர் விருது', 'இயற்கை விவசாயத்தில் தொழில் சார் சிறப்பு விருது', தனியார் தொலைக்காட்சி வழங்கிய 'விவசாயம் எழுமின் விருது' போன்றவை குறிப்பிடத்தக்கது.