ஆர்வம் இருந்தால் அனைத்தையும் பெறலாம் - ஸ்ருதி
நான் முதன் முதலில் விற்பனையை ஆரம்பித்தது சமூக வலைத்தளத்தில்தான். அதுதவிர, நண்பர்கள் மூலமாகவும் சில வாடிக்கையாளர்கள் கிடைத்தனர். என்னிடம் பரிசுப் பொருட்களை வாங்கிய வாடிக்கையாளர்கள், தங்களுக்கு பிடித்திருந்ததால் தங்களுடைய நட்பு வட்டாரங்களுக்கும் எனது தயாரிப்புகளை பரிந்துரை செய்தனர்.;
விளையாட்டாக ஆரம்பித்த விஷயத்தையே, தனது அடையாளமாக மாற்றி வெற்றி பெற்றிருக்கிறார் ஸ்ருதி ஜெயச்சந்திரன். பரிசுப் பொருட்கள் தயாரிப்பு மற்றும் ஆன்லைன் வழியே அவற்றை விற்பனை செய்யும் நிறுவனத்தின் மூலம், இன்று இளம் தொழில் முனைவோராக உயர்ந்திருக்கும் அவரது பேட்டி.
"சென்னையைச் சேர்ந்த நான், விஷூவல் கம்யூனிகேஷன் துறையில் பட்டம் பெற்றிருக்கிறேன். சிறு வயதில் இருந்தே குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களின் பிறந்த நாள், திருமண நாள் போன்றவற்றுக்கு நானே பரிசுகளை வடிவமைத்துக் கொடுத்து அவர்களை மகிழ்விப்பது வழக்கம். கல்லூரி முதலாம் ஆண்டு படித்தபோது, எனது நண்பருக்கு பிறந்தநாள் வந்தது. அதற்கு அடுத்தநாள் நான் தேர்வு எழுத வேண்டியிருந்தது. எனவே போதுமான நேரமின்மையால், நானே வடிவமைத்த பரிசை நண்பருக்கு அளித்தேன்.
அந்தப் பரிசைப் பார்த்த மற்ற நண்பர்கள் வியந்து பாராட்டினார்கள். எனவே அது போன்ற பரிசுகள் தயாரிப்பதையே தொழிலாகச் செய்யலாம் என்று தோன்றியது. அப்பொழுதே அதை செயல்படுத்தத் தொடங்கினேன்."
தொழில் தொடங்கிய ஆரம்ப காலத்தில் வாடிக்கையாளரை எப்படி கவர்ந்தீர்கள்?
நான் முதன் முதலில் விற்பனையை ஆரம்பித்தது சமூக வலைத்தளத்தில்தான். அதுதவிர, நண்பர்கள் மூலமாகவும் சில வாடிக்கையாளர்கள் கிடைத்தனர். என்னிடம் பரிசுப் பொருட்களை வாங்கிய வாடிக்கையாளர்கள், தங்களுக்கு பிடித்திருந்ததால் தங்களுடைய நட்பு வட்டாரங்களுக்கும் எனது தயாரிப்புகளை பரிந்துரை செய்தனர். சமூக வலைத்தளங்களில் என்னைப் பற்றியும், நான் தயாரிக்கும் பரிசுப் பொருட்களைப் பற்றியும் பதிவிட்டனர். இதன் மூலமாக அதிக வாடிக்கையாளர்களை பெற முடிந்தது. எனவே தன்னம்பிக்கை யுடன், முழு மூச்சாக தொழிலில் ஈடுபட்டேன்.
தொழிலில் நீங்கள் சந்தித்த சவால்களை எப்படி கடந்து வந்தீர்கள்?
தொழில் தொடங்கிய முதல் நாளில் இருந்தே பல சவால்களை சந்தித்து வருகிறேன். 18 வயதில் நான் தொழில் தொடங்கியபோது, அதைப் பற்றிய முழு புரிதல் எனக்கு இல்லாமல் இருந்தது. காலப்போக்கில் அனைத்துப் படிநிலைகளையும் சொந்த முயற்சியால் கற்றுக்கொண்டேன். தயாரிக்கும் பொருட்களின் விலையை நிர்ணயிப்பது முதல் வாடிக்கையாளருக்கு ஏற்ற பொருளை அறிமுகம் செய்வது வரை, தொழிலைப் பற்றிய அறிவை வளர்த்துக் கொண்டேன்.
ஆரம்ப காலத்தில் 'பொருள் வாடிக்கையாளரை சென்றடைந்தவுடன் பணம் கொடுத்தால் போதும்' என்ற வசதியுடன் விற்பனை செய்தேன். ஆனால், சில சமயங்களில் பொருளை பெற்றுக்கொள்பவர் வீட்டில் இல்லாமல் போகும்போது, அந்தப் பொருள் திரும்ப என்னையே வந்தடையும். நான் தயாரிக்கும் பரிசுப் பொருட்கள் அனைத்துமே, அதை வாங்கும் வாடிக்கையாளருக்காக, அவர்கள் பெயர் பதிக்கப்பட்டு தனிப்பட்ட முறையில் வடிவமைக்கப்பட்டு இருக்கும். அவ்வாறு இருக்கும்போது, என்னிடம் திரும்பி வரும் பரிசுப் பொருட்களை மற்றவர்களுக்கு கொடுக்க முடியாது.
இதனால் அந்தப் பரிசு வீணாகி விடும். இது எனக்கு பெரிய சவாலாக இருந்தது. இதைத் தவிர்ப்பதற்காக ஆன்லைனில் முன்கூட்டியே பணம் செலுத்திப் பொருளைப் பெற்றுக்கொள்ளும் முறையைக் கொண்டு வந்தேன்.
அடுத்ததாக சில நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளருக்கு அளிப்பதற்காக, தனிப்பட்ட பரிசுப் பொருட்கள் வேண்டும் என்று கேட்டு, அதற்கான எனது யோசனைகளையும், யுக்தியையும் வாங்கி, அதனை வேறு ஒரு நிறுவனத்திடம் கூறி, அவர்கள் மூலம் தயாரித்து வாங்கும் சம்பவங்களையும் சந்தித்தேன். உண்மையான ஆர்வமும், உழைப்பும் இருந்தால் மட்டுமே, சவால்களையும் பிரச்சினைகளையும் வெற்றிகரமாகத் தாண்டி தொழிலில் நிலைத்து நிற்க முடியும்.
படிக்கும்போதே தொழில் தொடங்கிய நீங்கள், இரண்டையும் நிர்வகிக்க எவ்வாறு நேரம் ஒதுக்கினீர்கள்?
கல்லூரியில் நான் தேர்ந்தெடுத்த துறையில், செய்முறைத் தேர்வுகள் அதிகமாக இருந்தது. எனவே படிப்பையும், தொழிலையும் ஒருசேர சமாளிக்க சிறிது திணறினாலும், தொடர்ந்து முயற்சி செய்தேன். தூக்கத்தைக் குறைத்தேன். உழைப்பில் கவனம் செலுத்தினேன்.
எனது அம்மாவுக்கும் பரிசுப் பொருட்கள் தயாரிக்கக் கற்றுக் கொடுத்தேன். சில சமயங்களில் அம்மா எனக்கு உதவினார். குடும்பத்தினரும், நண்பர்களும் தங்களாலான ஒத்துழைப்பை எனக்கு தந்தது, அதிக உத்வேகத்தை அளித்தது.
ஊரடங்கு காலத்தில் தொழில் வளர்ச்சி எப்படி இருந்தது?
நன்றாக இருந்தது. எனது வாடிக்கையாளர்கள் என் மேல் வைத்த நம்பிக்கையை காப்பாற்றினேன். நான் தயாரித்து வழங்கிய அனைத்து பரிசுப் பொருட்களும் முறையாக கிருமி நாசினி மூலம் தூய்மை செய்யப்பட்டு இருந்தன. பூக்களுக்கென பிரத்யேகமான ரசாயனப் பொருட்களை பயன்படுத்தி தூய்மைப்படுத்தினேன்.
உங்கள் இலக்கு என்ன?
எனது நிறுவனத்தை, பல்தொழில் நிறுவனமாக மாற்றுவதே என்னுடைய லட்சியம். வாடிக்கையாளர் மத்தியில் நம்பிக்கை மிகுந்த நிறுவனமாக வளர வேண்டும். பரிசுப் பொருட்களை தயாரித்து வழங்குவதில் ஆரம்பித்து, இப்பொழுது படிப்படியாக உயர்ந்து வீட்டு அலங்காரப் பொருட்கள், திருமண பரிசுப் பொருட்கள், ஈவென்ட் பிளானிங் போன்றவற்றையும் செய்து வருகிறேன்.
தொழில் தொடங்க விரும்புபவர்களுக்கு நீங்கள் கூற விரும்புவது?
பிடித்தத் துறையில் மட்டும் தொழிலைத் தொடங்குங்கள். ஆர்வம் இருப்பதில் கவனம் செலுத்துங்கள். உங்களுக்கென தனிப் பாதையை தன்னம்பிக்கையுடன் உருவாக்கிக்கொள்ளுங்கள். யாருக்கும் பயப்படாதீர்கள். காலம் தாழ்த்தாதீர்கள். உங்களுக்கு எப்பொழுது தொழில் தொடங்க ஆர்வம் உண்டாகிறதோ, அப்பொழுதே முறையான வழிகாட்டுதலோடு தொடங்குங்கள். மொழித்திறமையை வளர்த்துக்கொள்ளுங்கள்.
தொழிலில் ஏற்படும் நஷ்டத்தை நினைத்து வருத்தப்படாதிருங்கள். வாடிக்கையாளரை பொறுமையுடன் கையாளுங்கள். அனைத்து வாடிக்கையாளரையும் சமமாக நடத்துங்கள். வாடிக்கையாளரிடம் நம்பகத்தன்மை ஏற்படும் வண்ணம் நடந்துகொள்ளுங்கள். புதியவற்றை கற்றுக்கொள்ளும் ஆர்வத்தை வளர்த்துக்கொள்ளுங்கள். ஆர்வம் இருந்தால் அனைத்தையும் பெறலாம்.