ஜெயில் கைதிகளைப் பேச வைத்து ஜெயித்தேன்
ஜெயில் கைதிகளைப் பேச வைத்து, நான் ஜெயித்த அனுபவத்தை என்றுமே என்னால் மறக்க முடியாது! எனது அனுபவத்தைக் கொண்டு பல சிறந்த மேடைப் பேச்சாளர்களை உருவாக்க வேண்டும் என்பதே எனது ஆசை.;
மதுரை 'நான்காம் தமிழ்ச்சங்கம்' என்று கூறப்படும் செந்தமிழ்க் கல்லூரியில் துணை முதல்வராகப் பணியாற்றி வருபவர் பேராசிரியர் முனைவர் ரேவதி சுப்புலட்சுமி.
இவர் பட்டிமன்றப் பேச்சாளராகவும், நடுவராகவும் புகழ்பெற்றவர். தனது பல்சுவை அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.
பட்டிமன்ற மேடைப் பேச்சில் ஆர்வம் வந்தது எப்படி?
'முத்து நகர்' என்று அழைக்கப்படும் தூத்துக்குடியில் பிறந்தவள் நான். பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்பை அங்குதான் படித்தேன். கல்லூரியின் பேரவைத் தலைவியாக இருந்ததால், மேடையில் அடிக்கடி பேசி எனது பேச்சுத்திறனை வளர்த்துக்கொண்டேன்.
பட்டிமன்றங்களின் மீது சிறுவயது முதலே எனக்கு ஈடுபாடு இருந்தது. வானொலி நிலைய இயக்குநர், இளசை சுந்தரம் பட்டிமன்ற நடுவராகப் பங்கேற்ற நிகழ்ச்சியில்தான் முதன் முதலாகப் பேச்சாளராக அறிமுகம் ஆனேன்.
27 ஆண்டுகளாகத் தமிழகம் முழுவதும் மட்டுமில்லாமல், வெளிநாடுகளுக்குச் சென்று பட்டிமன்றங்களில் பேசி வருகிறேன். இதுவரை ஆயிரக்கணக்கான பட்டிமன்றங்களில் பேசிவிட்டேன். தொடர்ந்து இப்போதும் கல்லூரிப் பணியோடு பட்டிமன்றப் பேச்சுப் பணிையயும் மேற்கொண்டு வருகிறேன்.
உங்களால் என்றும் மறக்க முடியாத பட்டிமன்ற அனுபவம் பற்றிக் கூற முடியுமா?
சில ஆண்டுகளுக்கு முன்பு மதுரை மத்திய சிறைச்சாலையில் 'காந்தி ஜெயந்தி' அன்று கைதிகளுக்கு நல்ல வழிகூறும் சிறப்பு சொற்பொழிவாற்ற என்னை அழைத்தார்கள்.
நான் சிறைச்சாலை அதிகாரியிடம் சொற்பொழிவு இல்லாமல் எனது குழுவினருடன் பட்டிமன்றம் நடத்த வரலாமா? என்று கேட்டேன். அவரும் சம்மதித்தார்.
ஆனால், என்னுடன் கல்லூரியில் பணிபுரிபவர்கள் "நீங்கள் மட்டும் நடுவராக இருந்து, சிறைச்சாலைக் கைதிகளைப் பேச வைத்தால் புதுமையாக இருக்குமே" என்று யோசனை சொன்னார்கள்.
எனக்கு அது மிகவும் பிடித்துப் போகவே சிறைச்சாலை அதிகாரியிடம் கேட்டேன். அவரும் அதை ஆமோதித்தார். நான் தரும் தலைப்பில் பேசுவதற்குக் கைதிகளுக்குப் பயிற்சி அளிப்பதற்காக எனது கல்லூரி ஆசிரியர்களை அனுப்பி வைத்தேன்.
அவர்கள் பேசும் ஆர்வமுள்ள கைதிகள் சிலரைச் சந்தித்துவிட்டு என்னைப் பார்க்க வந்தபோது "கைதிகள், சிறைச்சாலை நூலகத்தில் படித்து சிந்தனையை மேம்படுத்திப் பயிற்சி தரத் தேவையே இல்லாத அளவு சிறப்பாகப் பேசுகிறார்கள்" என்று கூறியபோது உற்சாகம் அடைந்தேன்.
வாழ்வின் முன்னேற்றத்திற்கும், மகிழ்ச்சிக்கும் காரணம் உறவா? நட்பா? என்று தலைப்பு கொடுத்து, கைதிகள் சிலரைப் பேச வைத்தேன். நடுவராக இருந்து, ஆயிரக்கணக்கான கைதிகள் மற்றும் சிறை அதிகாரிகள் பலர் கைதட்டிக் குதூகலிக்கும்படி 'காந்தி ஜெயந்தி' அன்று கலகலப்பாகப் பயனுள்ள கருத்தைக் கூறிய பட்டிமன்றமாக அது நடந்து முடிந்தது.
ஜெயில் கைதிகளைப் பேச வைத்து, நான் ஜெயித்த அனுபவத்தை என்றுமே என்னால் மறக்க முடியாது!
எனது அனுபவத்தைக் கொண்டு பல சிறந்த மேடைப் பேச்சாளர்களை உருவாக்க வேண்டும் என்பதே எனது ஆசை. அதை நோக்கியே நடைபோடுகிறேன்.