சுகாதாரமான உணவே ஆரோக்கியத்தின் அடிப்படை - பவித்ரா
கிளவுட் கிச்சன்களைப் பொறுத்தவரை டெலிவரி செய்யும் போது சரியான வெப்பநிலையில் உணவை வைத்திருப்பதும், பேக் செய்யும் பொருளின் தர நிலையும் முக்கியமானதாகும்.;
"மனிதனின் அடிப்படை தேவைகளில் முதன்மையானது உணவு. உடலும், மனமும் சீராக செயல்படுவதும், ஆரோக்கியமாக இருப்பதும் நாம் சாப்பிடும் உணவைப் பொறுத்தது. அத்தகைய உணவு சுகாதாரமாக இருப்பது முக்கியம்" என்கிறார் பவித்ரா.
சென்னை, வேளச்சேரியில் வசிக்கும் பவித்ரா உணவு பாதுகாப்பு அதிகாரியாகவும், பயிற்சியாளராகவும் செயல்பட்டு வருகிறார். இவர் உணவு அறிவியல் மற்றும் மேலாண்மையில் இளங்கலையும், உணவு பதப்படுத்துதலில் முதுகலைப் பட்டமும் பெற்றிருக்கிறார். மேலும், உணவு ஒழுங்குமுறை விவகாரங்கள், வெளிப்புற முன்னணி தணிக்கை சான்றளிக்கப்பட்ட சுகாதார மதிப்பீடு தணிக்கையாளர், சான்றளிக்கப்பட்ட பயிற்சியாளர் ஆகியவற்றுக்கான படிப்புகளையும் முடித்திருக்கிறார்.
தற்போது உணவு சார்ந்த நிறுவனங்களுக்கு உணவு பாதுகாப்பு, சுகாதார தரநிலை மற்றும் ஒழுங்குமுறை தொடர்பான பயிற்சி அளிப்பது, உணவு பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றுவதற்கு வழிகாட்டுவது, சுகாதாரத் தரங்களைப் பராமரிப்பது போன்ற பணிகளை தனது நிறுவனத்தின் மூலம் செய்து வருகிறார். அவரது பேட்டி…
நீங்கள் உணவுத் துறையை தேர்ந்தெடுக்கக் காரணம் என்ன?
தொழில்நுட்ப வளர்ச்சியால் அன்றாட வாழ்வில் பல விஷயங்கள் மாறி இருக்கின்றன. தேவையைப் பொறுத்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகின்றன. ஆனால், 'உணவு' எல்லா காலங்களிலும் தேவையானது. உணவுத் துறையில் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. அதனால் நான் இந்த துறையைத் தேர்ந்தெடுத்தேன்.
தனியார் நிறுவனத்தில் உணவு பாதுகாப்பு அதிகாரியாகவும், தணிக்கையாளர் மற்றும் பயிற்சியாளராகவும் மூன்று வருடங்களுக்கு மேல் பணியாற்றியதில் எனக்கு நிறைய அனுபவம் கிடைத்தது. அதை அடிப்படையாகக் கொண்டு எனக்கென்று தனி இணையதளத்தை உருவாக்கினேன். உணவு சார்ந்த நிபுணத்துவம் பெற்ற நபர்களுடன் கலந்துரையாடி அந்த வலைப்பதிவுகளை அதில் பதிவேற்றம் செய்து வந்தேன். அதைத் தொடர்ந்து உணவுப் பாதுகாப்பு தொடர்பான எனது நிறுவனத்தைத் தொடங்கினேன்.
உணவு பாதுகாப்புத் துறையில் நீங்கள் செய்யும் பணிகள் என்ன?
உணவகங்கள், உணவு சார்ந்தப் பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு உணவு பாதுகாப்பு உரிமம் வாங்குவது, உற்பத்தியாளர்கள் பேக்கிங் மற்றும் லேபிளில் பாதுகாப்பு தரநிலையைப் பராமரிப்பது, உணவு சுகாதாரப் பரிசோதனைகள் செய்வதற்கு வழிகாட்டுவது, உபயோகப்படுத்தும் தண்ணீரை எத்தனை முறை பரிசோதிப்பது, உணவகங்களில் பயன்படுத்திய எண்ணெய்யை எவ்வாறு மதிப்பிடுவது, உபயோகப்படுத்திய தண்ணீர் பாட்டில்களை எவ்வாறு அப்புறப்படுத்துவது போன்ற பல விதிகள் மற்றும் விதிமுறைகளை தவறாமல் கடைப்பிடிப்பதற்கு தேவையான வழிகாட்டுதல்களை செய்கிறேன்.
பாதுகாப்பு விதிமுறைகளை எளிதாக உணவு சார்ந்த நிறுவனங்களுக்கு எடுத்துரைத்து, உணவு பாதுகாப்பு நிர்வாகி, பயிற்சியாளர் மற்றும் தணிக்கையாளராக இருந்து பின்பற்ற வைக்கிறேன்.
உணவு சுகாதாரத்தை எந்த வகையில் கடைப்பிடிக்க வேண்டும்?
ஒவ்வொருவரும் தனிப்பட்ட சுகாதாரத்தை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். சாப்பிடுவதற்கு முன்பு கைகளை சுத்தமாகக் கழுவ வேண்டும். உணவகங்கள், காற்றோட்டமான மற்றும் சுகாதாரமான இடத்தில் இருக்க வேண்டும். உணவகங்களின் சமையல் அறையில் போதிய வெளிச்சம் இருக்க வேண்டும். கழிவறையின் பக்கத்தில் சமையல் அறை இருக்கக் கூடாது.
எந்த வெப்பநிலையில் உணவை சமைக்க மற்றும் சேமிக்க வேண்டும், சமையல் அறையில் உள்ள இடவசதி, உணவு சேமிப்பு அறையின் சுத்தம், சமைப்பதற்கான மூலப்பொருட்களின் தரம், கலப்படம் இல்லாத உணவுப் பொருட்கள், காலாவதி தேதி முடிவதற்குள் உணவுப் பொருட்களை பயன்படுத்துவது, சமைத்த உணவை கையாள பாதுகாப்பு உபகரணங்கள் வைத்திருப்பது, கால்வாய் வசதி சரியாக இருப்பது, தண்ணீரை அடிக்கடி பரிசோதிப்பது, பூச்சிகளை போக்குவதற்கான நடவடிக்கை எடுப்பது, ஊழியர்களுக்கு உணவுப் பாதுகாப்பு பயிற்சி அளிப்பது, சமையலறையில் சிம்னியை அடிக்கடி சுத்தம் செய்வது போன்றவற்றை உணவக நிர்வாகம் கவனிக்க வேண்டும்.
கிளவுட் கிச்சன்களைப் பொறுத்தவரை டெலிவரி செய்யும் போது சரியான வெப்பநிலையில் உணவை வைத்திருப்பதும், பேக் செய்யும் பொருளின் தர நிலையும் முக்கியமானதாகும்.
சில நேரங்களில் வெளியில் வாங்கி சாப்பிடும் உணவுகள், ஆரோக்கிய பிரச்சினைகளை உண்டாக்குவது எதனால்?
கைகளைச் சுத்தமாகக் கழுவாமல் உணவைச் சாப்பிடுவது, தரமில்லாத உணவைச் சாப்பிடுவது, உணவு சாப்பிடும் பாத்திரத்தை ஒழுங்காக சுத்தம் செய்யாமல் அதில் சோப் அல்லது ரசாயனப் பொருட்கள் படிந்திருப்பது, துருப்பிடித்த கடாய் அல்லது பாத்திரத்தில் உணவு சமைத்துச் சாப்பிடுவது போன்றவற்றால் சாப்பிடும் உணவு உடலில் பிரச்சினைகளை உண்டாக்கக்கூடும். சாப்பிட்ட பின்பு வயிறு உப்புவது, சில மணி நேரங்கள் கழித்துக்கூட பசிக்காமல் இருப்பது, வயிற்று வலி வருவது போன்ற அறிகுறிகள் இருந்தால் முன்பு சாப்பிட்ட உணவு சரியில்லை என்று அர்த்தம்.
வெளி இடங்களில் சாப்பிடும்போது கவனிக்க வேண்டியவை என்ன?
உணவகங்களின் சுகாதாரத்தை சில விஷயங்களை வைத்து எளிதாகக் கண்டுபிடித்து விடலாம். உதாரணத்திற்கு, நீங்கள் அமரும் டைனிங் டேபிளை ஒழுங்காக சுத்தம் செய்திருக்கிறார்களா, ஆங்காங்கே அழுக்குகள் இருக்கிறதா, உணவு பரிமாறும் தட்டு சுத்தமாக இருக்கிறதா, டேபிளில் வைக்கும் தண்ணீர் சுத்தமாக இருக்கிறதா, திறந்த உணவகமாக இருந்தால் சமைப்பவர்கள் ஹெட் கேப் மற்றும் கிளவுஸ் அணிந்திருக்கிறார்களா, உணவு பரிமாறுபவர்கள் சுத்தமான உடை அணிந்திருக்கிறார்களா? ஆகியவற்றை கவனித்தால் அந்த உணவகத்தின் சுகாதாரத்தை எளிதாகக் கணித்துவிடலாம்.
வெளியே ஸ்நாக்ஸ், சமோசா, சிக்கன் போன்ற உணவுகளை வாங்கும்போது அவை சமைக்கப்படும் எண்ணெய்யின் நிறத்தைக் கவனிக்க வேண்டும். பல முறை பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய் கருப்பு நிறமாக இருக்கும். உடலுக்கு அதுவே விஷமாக மாறும்.
தந்தூரி சிக்கன் வாங்கும்போது அதைத் தயாரிக்கும் கிரில் அடுப்பு சுத்தமாக இருக்கிறதா என்பதைக் கவனிப்பது அவசியம். இவ்வாறு உணவு பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் குறித்த பல தகவல்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார் பவித்ரா.
அன்றாட வாழ்க்கையில் எத்தகைய உணவுகளைத் தவிர்க்க வேண்டும்?
சமைக்காத அல்லது பாதி சமைத்த உணவுகளை வெளியில் இருந்து வாங்கிச் சாப்பிடுவதைத் தவிர்க்கலாம். உதாரணத்திற்கு சாலட் போன்ற உணவுகளை வெளியே சாப்பிடுவதைத் தவிர்க்க வேண் டும். ஜூஸ் கடைகளில் பயன்படுத்தும் தண்ணீர் சுகாதாரமாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.
உப்பு அல்லது சர்க்கரை அதிகமாக இருக்கும் உணவுகளைக் குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். தந்தூரி சிக்கன், சைனீஸ் நூடுல்ஸ், கேக், சாக்லெட், எண்ணெய்யில் பொரித்த உணவுகளை குறைவாகச் சாப்பிடுவதே நல்லது.
செயற்கை நிறங்கள் சேர்த்த உணவுகள் ஆரோக்கியத்துக்கு நல்லதா?
உணவுகளில் நிறங்களை சேர்ப்பதற்காக, அனுமதிக்கப்பட்ட சில ரசாயனங் களைக் கலப்பார்கள். இவற்றை உணவில் ஒரு குறிப்பிட்ட அளவுதான் சேர்க்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. அதற்கு மீறி அதிகமாக நிறங்கள் சேர்த்த உணவை சாப்பிட்டால் அது உடல் நலனுக்கு ஆபத்தாகும். நிறம் குறைவாக உள்ள மற்றும் நிறமற்ற உணவுகளும் ஆரோக்கியமானவை தான்.