ஆரோக்கியமே அழகு- சோனாலி

எனது இரண்டு குழந்தைகளும் அறுவை சிகிச்சை மூலம் பிறந்தார்கள். அதன் பிறகு எனது உடல் எடை 103 கிலோ ஆனது. மூட்டு வலி, தைராய்டு என பல பிரச்சினைகளை சந்தித்தேன். பலரது கேலிக்கு ஆளானதால், எடையைக் குறைக்க வேண்டும் என்ற உறுதி எடுத்தேன்.

Update: 2022-07-31 01:30 GMT

கோவையைச் சேர்ந்த சோனாலி பிரதீப், ஆதரவற்ற பெண்களின் முன்னேற்றத்துக்காக பல சேவைகளை செய்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் பிட்னஸ் ஆலோசகராகவும், கல்லூரியில் கவுரவ விரிவுரையாளராகவும் இயங்கி வருகிறார்.

கராத்தே, பரதம், ஜூம்பா போன்ற கலைகளில் தேர்ச்சி பெற்ற சோனாலி, ஏழு இந்திய மொழிகளில் சரளமாக பேசும் திறன் பெற்றவர். சிறந்த சமூக சேவைக்காக உலக மனித உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் டாக்டர் பட்டத்தை சமீபத்தில் பெற்றுள்ளார். சோனாலியை சந்தித்தபோது...

"எனது பூர்வீகம் குஜராத் மாநிலம் என்றாலும், மூன்று தலைமுறைகளுக்கு முன்பே கோவையில் குடியேறி விட்டோம். ஆகையால் நான், என்னை 'தமிழ்ப் பெண்' என்று பிரதானப்படுத்தவே விரும்பு

கிறேன். வணிக மேலாண்மையில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்கிறேன். கணவர் பிரதீப் ஜோஸ், நடிகர், திரைப்படத் தயாரிப்பாளர். எங்கள் மகளும், மகனும் பள்ளியில் படிக்கின்றனர்.

உங்கள் செயல்பாடுகள் பற்றி சொல்லுங்கள்?

எனது கணவரின் தொழிலில் அவருக்கு உதவியாகப் பணியாற்றுகிறேன். தனியார் கல்லூரியில் கவுரவ விரிவுரையாளராக ஆங்கிலப் புலமை, திறன் மேம்பாடு, தகவல் தொடர்பு உள்ளிட்ட பிரிவுகளில் வகுப்புகளை எடுக்கிறேன். விழாக்களில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று உடற்பயிற்சியின் முக்கியத்துவம், தன்னம்பிக்கை போன்றவை பற்றி உரையாற்றுகிறேன்.

நீங்கள் செய்யும் சமூகப் பணிகள் என்ன?

சிறு வயது முதலே சமூக சேவையில் எனக்கு ஈடுபாடு அதிகம். ஆதரவற்றோருக்கு பணமாகவும், பொருளாகவும் கொடுத்து உதவி செய்து வருகிறேன். கொரோனா காலத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்கும் வகையில், கைப்பேசி, டேப்லெட் ஆகியவற்றை வழங்கினேன்.

கணவரை இழந்த அல்லது கணவரால் கைவிடப்பட்ட பெண்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு அழகுக்கலை, கணினி இயக்குதல் ஆகிய தொழில் பயிற்சிகளை அளித்து சொந்தக் காலில் நிற்க வைக்கிறேன். முதியோர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறேன். கோவையைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி சங்கத்தின் பிரதிநிதியாக என்னை நியமித்திருக்கிறார்கள். கடந்த ஐந்து ஆண்டுகளாக அந்தப் பொறுப்பில் இருந்து கொண்டு மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டுக்காக செயல்பட்டு வருகிறேன்.

தனியார் மருத்துவமனையுடன் இணைந்து, பெண்களுக்கான மார்பக மற்றும் கருப்பைவாய் புற்றுநோய் கண்டறியும் இலவச பரிசோதனைகள், தாய்-சேய் நலனுக்கான உதவிகள் மற்றும் ஆதரவற்ற நோயாளிகளின் சிகிச்சைக்கு தேவைப்படும் நிதியைத் திரட்டுவதற்கும் உதவுகிறேன்.


அழகிப் போட்டியில் பங்கெடுத்தது மற்றும் பிட்னஸ் ஆலோசகரானது எவ்வாறு?

எனது இரண்டு குழந்தைகளும் அறுவை சிகிச்சை மூலம் பிறந்தார்கள். அதன் பிறகு எனது உடல் எடை 103 கிலோ ஆனது. மூட்டு வலி, தைராய்டு என பல பிரச்சினைகளை சந்தித்தேன். பலரது கேலிக்கு ஆளானதால், எடையைக் குறைக்க வேண்டும் என்ற உறுதி எடுத்தேன்.

எனது கணவர் உடற்பயிற்சி மற்றும் கராத்தே ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றவர். அவர் கொடுத்த ஆதரவும், நம்பிக்கையும் எனக்கு ஊக்கமூட்டியது. முதலில் எண்ணெய்ப் பலகாரங்களைத் தவிர்த்தேன். பிறகு நடைப்பயிற்சி, ஓட்டப் பயிற்சி ஆகியவற்றை செய்தும், உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொண்டும் எட்டே மாதங்களில், எனது உடல் எடையை 55 கிலோவுக்குக் கொண்டு வந்தேன்.

அந்த நேரத்தில் என்னைப் பார்த்து எல்லோரும் அதிசயித்தார்கள். அப்போது எனது தோழி, கோவையில் நடைபெறும் அழகிப் போட்டியில் பங்கேற்க சொன்னார். எனது குடும்பத்தினரும் அதனை வலியுறுத்தினார்கள்.

மேடையேறுவது எனது தன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய்யும் என்பதால், அதில் பங்கேற்று நடனமாடி, உரையாற்றி அனைத்துச் சுற்றுகளிலும் தகுதி பெற்று 'திருமதி கோயம்புத்தூர்' பட்டத்தை வாங்கினேன். என்னைப் போல மற்றவர்களும் பயன்பெற வேண்டும் என்பதற்காக பிட்னஸ் ஆலோசகராக மாறினேன்.

உடல் எடை அதிகரிப்பதைத் தடுத்து ஆரோக்கியமாக இருப்பது எப்படி?

'பிட்னஸ்' என்பது ஒரு கணக்கு. ஒரு நாளில், நாம் எவ்வளவு கலோரியை உட்கொள்கிறோம் மற்றும் செலவழிக்கிறோம் என்பது முக்கியம். தினமும் நடைப்பயிற்சி, ஓட்டப்பயிற்சி, உடற்பயிற்சி ஆகியவற்றை செய்தாலும், நடனமாடினாலும், ஒரு நாளுக்கு ஆயிரம் கலோரிகள் செலவழிப்பதே கடினம். அதற்கு மாறாக பலரும், ஒரு நாளுக்கு ஆறாயிரம் கலோரிகள் வரை உட்கொள்கிறோம்.

இவ்வாறு நமது தேவைக்குப் போக, மீதமுள்ள ஐந்தாயிரம் கலோரிகள் கொழுப்பாக சேகரிக்கப்படுகிறது. இதனால்தான் எடை அதிகரிப்பு மற்றும் உடல் பருமன் போன்ற பிரச்சினைகள் உண்டாகின்றன. இந்த ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையால் பல்வேறு நோய்கள் வருகின்றன. எனவே, சத்தான மற்றும் குறைவான கலோரிகள் கொண்ட உணவுகளை, நன்றாக பசி எடுத்த பின்பு சாப்பிடுவதே நல்லது. இதனால் ஆரோக்கியம் அதிகரிக்கும். உடலும், மனமும் ஆரோக்கியமாக இருந்தால் அழகு அதிகரிக்கும்.

கல்லூரியில் கவுரவ விரிவுரையாளராக உங்கள் பங்களிப்பு பற்றி?

கலந்துரையாடுதல் மற்றும் தன்னம்பிக்கைப் பேச்சின் மூலமாகவும், ஆங்கிலத்தில் உரை யாடுவதற்கு தயார்படுத்துவதன் மூலமாகவும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் மேம்பாட்டுக்கு உதவி வருகிறேன்.

மாணவர்களுக்கு படிப்பை மட்டும் திணிப்பதால் பிடிவாதம், தாழ்வு மனப்பான்மை, தற்கொலை செய்து கொள்ளும் போக்கு போன்றவை அதிகரித்து வருகின்றது. மகிழ்ச்சியான மனநிலை, தன்னம்பிக்கை மற்றும் தைரியத்துடன் மற்றவர்களோடு கலந்துரை யாடுவது, திறன் மேம்பாடு ஆகியவற்றை வளர்த்தால் மாணவர்களின் வாழ்க்கை பிரகாசிக்கும். அதை நடைமுறைப்படுத்தும் விதமாக செயல்பட்டு வருகிறேன். புடவை மற்றும் நகைகள் அணிவது எனக்குப் பிடிக்கும் என்பதால், அவை சார்ந்த விளம்பரங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடிக்கிறேன்.

பல துறைகளில் இயங்கும் அளவுக்கு உங்களை மேம்படுத்திக் கொண்டது எப்படி?

பெண்கள், ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்யக்கூடியவர்கள். முயற்சியாலும், பயிற்சியாலும் நான் அந்தத் திறனை மேலும் மேம்படுத்திக் கொண்டேன்.

உங்களுக்கு கிடைத்துள்ள விருதுகள் மற்றும் அங்கீகாரங்கள் பற்றி?

கொங்குநாட்டின் சிங்கப் பெண்ணே, வொண்டர் வுமன் உள்ளிட்ட பல விருதுகள் பெற்றிருக்கிறேன். ஆசிய நாடுகளில் திருமணமான பெண்களுக்கு நடத்தப்படும் அழகிப் போட்டியில், திருமதி கோயம்புத்தூர்-2015, மிசஸ் இந்தியா தமிழ்நாடு-2017, மிசஸ் இந்தியா யுனிவர்ஸ்-2019, குயின் ஆப் ஏஷியா-2021 ஆகிய பட்டங்களைப் பெற்றிருக்கிறேன். 

Tags:    

மேலும் செய்திகள்