ஆரோக்கியமே அழகை வெளிப்படுத்தும் - சந்திரா
அழகுக்கலை தொடர்பாக பல பயிற்சி படிப்புகளை முடித்து, பல்வேறு நிறுவனங்களில் பல ஆண்டுகள் பணியாற்றி இருக்கிறேன். அவ்வாறு எனக்கு கிடைத்த அனுபவத்தின் மூலம், கிராமத்து பெண்களுக்கு பயிற்சி அளிக்கிறேன். பல கிராமங்களைச் சேர்ந்த பெண்கள் இதனால் பயன்பெறுகின்றனர்.;
"மேக்கப் செய்து கொள்வது பெண்களின் தோற்றத்தை மேம்படுத்திக் காட்டும். இதனால் அவர்களின் தன்னம்பிக்கையும், சுயமரியாதையும் அதிகரிக்கும். எதையும் தைரியமாக அணுகுவார்கள்" என்கிறார் மதுரையைச் சேர்ந்த அழகுக் கலை நிபுணரான சந்திரா.
நகரங்களில் மட்டுமே இருந்து வந்த அழகு நிலையங்கள், இப்போது கிராமங்களிலும் காணப்படுகிறது. மதுரை அருகே உள்ள சிறிய கிராமமான ஒத்தக்கடையில் இவர் அழகு நிலையத்தை நடத்தி வருகிறார்.
இவர் 12 ஆண்டுகளாக பல முன்னணி அழகுக்கலை நிறுவனங்களில் தலைமை நிபுணராக பணியாற்றிய அனுபவத்தின் மூலம், கிராமப்புற பெண்களுக்கு அழகுக்கலை பயிற்சி அளிக்கிறார். அவர்கள் சுயமாக தொழில் செய்து வருமானம் ஈட்டுவதற்கு வழிசெய்கிறார். அவருடன் நடந்த சுவாரசியமான உரையாடல் இங்கே…
கிராமங்களில் அழகுநிலையங்கள் திறக்கும் எண்ணம் தோன்றியது எப்படி?
அழகு அனைவருக்கும் பொதுவானது. கிராமத்து பெண்கள் பலரும் மேக்கப் செய்துகொள்ளாமல் இயல்பான அழகோடு இருப்பதையே விரும்புவார்கள். தற்போது கிராமத்து பெண்களும் கல்வி, தொழில், வேலை போன்றவற்றில் சிறந்து விளங்குகிறார்கள். எனவே அவர்களின் தோற்றத்தை மேம்படுத்திக்கொள்வது முக்கியமானது. இதை மனதில்கொண்டே ஒத்தக்கடை கிராமத்தில் அழகு நிலையம் தொடங்கினேன்.
முதலில் இந்த கிராமத்து இளம்பெண்கள் அழகு நிலையம் வருவதற்கு மிகவும் தயங்கினார்கள். சில மாதங்கள் கழித்து, ஒவ்வொருவராக வரத் தொடங்கினார்கள். இப்போது இளம்பெண்கள் மட்டுமன்றி, நடுத்தர வயதுள்ள பெண்களும் வருகிறார்கள்.
கிராமத்தில் அழகுநிலையம் திறந்த பின்பு சுவாரசியமான சம்பவங்கள் ஏதேனும் எதிர்கொண்டீர்களா?
அழகுநிலையத்துக்கு முதன்முதலாக ஒரு இளம்பெண் வந்தார். இயல்பான அழகோடு எளிமையாக இருந்த அவர் சற்றே அடர்ந்த நிறம் கொண்டவர். அவரது முகம் மிகவும் கவலையோடு காணப்பட்டது.
நான் அதற்கான காரணத்தை கேட்டபோது தனது நிறத்தை காரணம் காட்டி, அதுவரை பெண் பார்க்க வந்த 13 வரன்களும் நிராகரித்து சென்றதாகவும், தற்போது 14-வதாக ஒருவர் பெண் பார்க்க வரப்போவதாகவும் தெரிவித்தார். அதைச் சொல்லி முடித்தபோது அவரது கண்கள் கலங்கி இருந்தன.
நான் அவரைத் தேற்றி ஆசுவாசப்படுத்தினேன். பின்பு அவரது இயற்கையான அழகை மேம்படுத்திக் காட்டும் வகையில் புருவங்களை சீரமைத்தேன். முகப்பொலிவை அதிகரிப்பதற்காக பேசியல் செய்தேன். முகவடிவுக்கு ஏற்றவாறு தலை அலங்காரம் செய்து, பொருத்தமான ஆடை மற்றும் அணிகலன்கள் அணிவித்து அனுப்பினேன்.
அன்று பெண் பார்க்க வந்த மாப்பிள்ளை, அவளைப் பார்த்த உடனே சம்மதம் சொல்லி விட்டார். அந்த இளம்பெண்ணும், அவள் குடும்பமும் என்னை அவர்களின் வீட்டிற்கு அழைத்து பாராட்டி விருந்து அளித்தார்கள்.
அந்த பெண்ணின் திருமணத்திலும் நான்தான் 'மணப்பெண் அலங்காரம்' செய்தேன். அதைப் பார்த்த கிராமத்து பெண்கள் பலரும், எனது அழகுநிலையத்தின் வாடிக்கையாளர்களாகி விட்டனர்.
கிராமத்து பெண்களுக்கு அழகுக்கலை பயிற்சி அளிப்பது பற்றி சொல்லுங்கள்?
அழகுக்கலை தொடர்பாக பல பயிற்சி படிப்புகளை முடித்து, பல்வேறு நிறுவனங்களில் பல ஆண்டுகள் பணியாற்றி இருக்கிறேன். அவ்வாறு எனக்கு கிடைத்த அனுபவத்தின் மூலம், கிராமத்து பெண்களுக்கு பயிற்சி அளிக்கிறேன். பல கிராமங்களைச் சேர்ந்த பெண்கள் இதனால் பயன்பெறுகின்றனர். பயிற்சி முடித்தவர்கள் சொந்தமாக தொழில் செய்து வருமானம் பெற்று வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.
'ஆரோக்கியம் இருந்தால்தான் இயற்கையான அழகு வெளிப்படும்' என்பதை உறுதியாக நம்புகிறேன். எனவே அழகுக்கலை பயிற்சி மட்டுமின்றி யோகா மற்றும் உடற்பயிற்சிகளையும் கற்றுத்தருகிறோம்.
அழகுக்கலை தொடர்பாக நீங்கள் செய்யும் மற்ற விஷயங்கள் என்ன?
உள்ளூர் மட்டுமின்றி வெளியூருக்கும் சென்று, மணப்பெண் மற்றும் மணமகன் அலங்காரம் செய்கிறேன். தொலைக்காட்சி படப்பிடிப்புகள், விழாக்கள் மதுரையில் நடைபெறும்போது எனக்கு அழைப்பு வரும். பிரபல சீரியல் நடிகைகளுக்கு மேக்கப், ஹேர்ஸ்டைல் செய்து பாராட்டு பெற்று இருக்கிறேன்.
அழகு பராமரிப்புக்காக சந்திரா தரும் ஆலோசனைகள்
இயல்பான அழகை மேம்படுத்திக்காட்டுவதே மேக்கப். உங்கள் சரும நிறம், முகவடிவம் போன்றவற்றுக்கு தகுந்தவாறு மேக்கப் செய்துகொள்வது, உங்களுடைய தோற்றத்தை சிறப்பாகக் காட்டும்.
தூசு மற்றும் மாசு மூலம் சருமப் பொலிவு குறையும். எனவே அவற்றை முடிந்தவரை தவிர்க்கவும். வாரத்துக்கு ஒரு முறை வீட்டிலேயே கடலை மாவு, சில துளிகள் எலுமிச்சை சாறு மற்றும் ரோஜா பன்னீர் கலந்து முகத்தில் பூசி மென்மையாக தேய்த்துக் கழுவவும். இதன்மூலம் சருமத்தில் படிந்திருக்கும் இறந்த செல்கள் நீங்கும். குறிப்பிட்ட இடைவெளியில் சிறந்த அழகுக்கலை நிபுணர் மூலம் பேசியல் செய்துகொண்டால் முகப்பொலிவை பாதுகாக்கலாம்.
தொடர்ந்து ஏ.சி அறையில் இருப்பவர்கள் சரும பராமரிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அந்த சூழலில் சருமத்தில் இருக்கும் இயற்கையான எண்ணெய் தன்மை குறைந்து வறட்சி அடையும். எனவே சருமத்தில் அவ்வப்போது மாய்ஸ்சுரைசர் பூசிக்கொள்வது நல்லது. போதுமான தண்ணீர் குடிப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
முகப்பருக்களை கிள்ளாதீர்கள். இதனால் அவை நிரந்தரமான வடுக்களாக மாறிவிடும். வாரம் ஒரு முறை நீராவி பிடிப்பதன் மூலம் சருமத்தில் படிந்திருக்கும் அழுக்குகளை வெளியேற்றலாம்.
அடிக்கடி கோபப்படுவது மற்றும் கவலைகொள்வதால் முகத்தில் சுருக்கங்கள் அதிகரிக்கும். எனவே மனதை அமைதியாக வைத்துக்கொள்ளுங்கள்.
காய்கறி மற்றும் பழங்களை அதிகமாக சாப்பிடுங்கள். சருமப்பொலிவுக்கு வைட்டமின் 'சி' மற்றும் 'ஈ' அதிகம் உள்ள உணவுகள் முக்கியமானவை.
மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள். அது சருமத்தின் ஆரோக்கியத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
எவ்வளவு களைப்பாக இருந்தாலும், தூங்கச் செல்வதற்கு முன்பு மேக்கப்பை நீக்கி, இரவு நேர சரும பராமரிப்பை தவறாமல் செய்யுங்கள்.
முடிந்தவரை இயற்கையான பொருட்களையே சரும பராமரிப்புக்கு பயன்படுத்துங்கள்.
சிறிதளவு ரோஜா இதழ்கள், புதினா மற்றும் வேப்பிலையை தண்ணீரில் போட்டு நன்றாகக் கொதிக்க வையுங்கள். ஆறியபின்பு அந்த நீரை வடிகட்டி ஐஸ் டிரேயில் ஊற்றி குளிர்சாதனப்
பெட்டியில் வைத்துவிடுங்கள். அவ்வப்போது இந்த ஐஸ் கட்டியை முகத்தில் தடவி, மென்மையாக மசாஜ் செய்தால் முகப்பொலிவு அதிகரிக்கும்.
ஒளி நிறைந்த கண்கள் அழகை அதிகரிக்கும். இரவு தூக்கம் நிறைவாக இருந்தால் கண்கள் ஒளியோடு இருக்கும். எனவே இரவில் நன்றாகத் தூங்குங்கள்.