முயன்றால்தான் வெற்றி பெற முடியும் - கவிதா

திரையரங்கில் முழுவதுமாக ஆண் ஊழியர்களே இருந்தனர். ஆனால் நான் நிர்வகிக்க ஆரம்பித்த பின்பு, பெண்களும் இந்த துறைக்கு வர வேண்டும் என்று விரும்பினேன். எனவே பெண் ஊழியர்கள் பலரை பணியில் அமர்த்தினேன்.

Update: 2023-04-02 01:30 GMT

ற்போது பெண்கள் பல்வேறு துறைகளில் தடம் பதித்து வருகின்றனர். ஆனாலும் சில துறைகளில் அவர்களின் இருப்பும், பங்களிப்பும் அரிதானதாகவே பார்க்கப்படுகிறது. உதாரணத்துக்கு திரைத்துறையில் நடிப்பு, பாடல், இசை, இயக்கம், தயாரிப்பு என பல தளங்களில் பெண்கள் இயங்கி வருகின்றனர். ஆனால், திரைப்படங்களை திரையிடும் தியேட்டர் நிர்வாகத்தில், பெண்களின் செயல்பாட்டை பெரும்பாலும் கேள்விப்பட்டிருக்க மாட்டோம்.

அந்த வகையில், பல ஆண்டுகளாக மூடிய நிலையில் இருந்த ஒரு திரையரங்கை, புதுப்பொலிவுடன் மாற்றி சிறப்பாக நிர்வகித்து வருகிறார் மதுரையைச் சேர்ந்த கவிதா. இதுமட்டுமில்லாமல், பாரம்பரியமாக செய்துவரும் விவசாயத்தையும் கைவிடாமல், நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆர்கானிக் விவசாயம் மற்றும் தொலை தூர நிர்வாகத்தையும் செய்து வருகிறார். அவருடன் பேசியதில் இருந்து..

"ஏழு தலைமுறைக்கும் மேலாக இயற்கை விவசாயத்தை குடும்பத் தொழிலாக செய்து வருகிறோம். சிறுவயதில் இருந்தே எனக்கு விவசாயத்தில் ஈடுபாடு அதிகம். எனவே பாரம்பரியமாக பின்பற்றிவரும் இயற்கை விவசாய முறையுடன், தற்போதைய நவீன தொழில்நுட்பத்தையும் புகுத்தி, நடும் முறை, தண்ணீர் சேமிப்பு மற்றும் பாய்ச்சும் முறை, உர சேமிப்பு மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளை மேம்படுத்தி இருக்கிறேன்.

திருமணத்திற்குப் பிறகு மதுரைக்கு வந்துவிட்டேன். ஆரம்பத்தில் கணவருடன் இணைந்து திரையரங்கம் சார்ந்த வேலைகளை செய்தேன். பின்னர், அதில் ஏற்பட்ட ஆர்வத்தினால், முழுவதுமாக திரையரங்க நிர்வாகத்தில் ஈடுபட்டேன். பண்டிகை தினம், வார விடுமுறை தினங்களில் தான் வேலை அதிகமாக இருக்கும். அதுபோன்ற சமயங்களில், அதிகாலை 3 மணிக்கு ஆரம்பித்து, மறுநாள் நள்ளிரவு 2 மணி வரை தொடர்ந்து வேலை பார்ப்போம்.

திரையரங்கில் முழுவதுமாக ஆண் ஊழியர்களே இருந்தனர். ஆனால் நான் நிர்வகிக்க ஆரம்பித்த பின்பு, பெண்களும் இந்த துறைக்கு வர வேண்டும் என்று விரும்பினேன். எனவே பெண் ஊழியர்கள் பலரை பணியில் அமர்த்தினேன்.

எங்கள் திரையரங்கின் கேன்டீன் பொறுப்பையும், நான் தனிப்பட்ட முறையில் கவனித்து வருகிறேன். உடலுக்கு நன்மை பயக்கும் வகையிலான உணவுகளை அதில் விற்பனை செய்கிறேன். திரையரங்குக்கு தனியாக திரைப்படம் பார்க்க வரும் பெண்கள் மற்றும் என்னுடன் வேலை பார்க்கும் பெண் ஊழியர்களின் பாதுகாப்புக்கான ஏற்பாடுகளை செய்து இருக்கிறேன்.

நாள் முழுவதும் நிர்வாகப் பணியில் ஈடுபட்டாலும், வேளாண் பணிகளையும் தவறாமல் பார்த்து வருகிறேன். மாதம் ஒரு முறை மற்றும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் களத்துக்குச் சென்று வேலை பார்ப்பேன்.

'நமக்கு அடுத்து வரும் தலைமுறை இயற்கையான, சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும்' என்ற நோக்கத்தில் விவசாயத்தை கைவிடாமல் தொடர்ந்து செய்து வருகிறேன்.

என்னைப் போல பல பெண்களும் தாங்கள் விரும்பிய துறையில் ஈடுபடுவதற்கு ஆசையுடனும், ஆர்வத்துடனும் இருக்கிறார்கள். ஆனால், அவர்களுக்குள் இருக்கும் பயத்தால் முயற்சி செய்யாமலேயே விட்டுவிடுகிறார்கள். முயன்றால்தான் வெற்றி பெற முடியும்.

ஆண்களின் ஆதிக்கம் அதிகம் இருக்கக்கூடிய இந்த துறையில், நான் பணிபுரிந்து வருவது, என்னைப் போன்று சாதிக்க விரும்பும் பெண்களுக்கு ஊக்கத்தை அளிக்கும் என்று நம்புகிறேன்" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்