வளர்ந்து வரும் வாழ்த்து அட்டை தயாரிப்பு தொழில்

தொழில்நுட்பம் வளர்ந்தாலும், நாமே நம் கையால் தயாரித்து அனுப்பும் வாழ்த்து அட்டைகள் மூலம் கிடைக்கும் மகிழ்ச்சி அலாதியானது.

Update: 2023-02-26 01:30 GMT

தீபாவளி, பொங்கல், பிறந்தநாள், திருமணநாள் போன்ற சிறப்பு நாட்களில், வாழ்த்து அட்டைகள் மூலம் அன்பை பரிமாறிக் கொண்டது முந்தைய தலைமுறை. காலமாற்றத்தால் டிஜிட்டல் வாழ்த்து அட்டைகள் வர ஆரம்பித்தவுடன், அச்சிடப்பட்ட வாழ்த்து அட்டைகளின் பயன்பாடு குறைந்தது. தற்போது அவை மீண்டும் புத்துயிர் பெற தொடங்கி உள்ளன.

கைகளால் தயாரிக்கப்படும் வாழ்த்து அட்டைகளுக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது. பல பெண்கள் இதை சுயதொழிலாக செய்து வருகின்றனர். அந்த வகையில், வாழ்த்து அட்டைகள் தயாரிப்பு மற்றும் அவற்றை சந்தைப்படுத்தும் யுக்திகள் குறித்து பகிர்ந்துகொள்கிறார், நாகர்கோவிலைச் சேர்ந்த கிறிஸ்டினா ரஞ்சன்.

"நான் தனியார் கல்லூரியில் பகுதி நேர விரிவுரையாளராக பணியாற்றிக் கொண்டே, சுயதொழிலிலும் ஈடுபட்டு வருகிறேன். எனது பள்ளிப் பருவத்தில், நான் படித்த பள்ளியில் கலை நிகழ்ச்சிகள் நடத்தும்போது அவற்றுக்கான அழைப்பிதழ்களை நானே தயாரித்துக் கொடுத்தேன். கல்லூரியில் ஊட்டச்சத்து பிரிவில் படித்தேன். அப்போது செய்முறை வகுப்புகளில் உணவு தயாரிக்கும்போது, அவற்றுக்கான மெனு கார்டுகளை தயாரித்தேன்.

இவ்வாறு ஏற்பட்ட ஆர்வத்தால், தற்போது இதையே தொழிலாக அமைத்துக் கொண்டேன். பல்வேறு விதமான வாழ்த்து அட்டைகளைத் தயாரித்து வருகிறேன்.

வாழ்த்து அட்டைகள் தயாரிப்பு என்பது, உலக அளவில் புகழ்பெற்ற துறையாகும். முழுவதும் கைகளால் தயாரிக்கப்பட்ட வாழ்த்து அட்டைகளுக்கான சந்தை மதிப்பு, உலக அளவில் 7 முதல் 8 பில்லியன்களாக உள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் அனைத்து நிகழ்வுகளுக்கும் வாழ்த்து அட்டைகள் அனுப்பி அன்பை பரிமாறிக்கொள்வது இன்றும் நடைமுறையில் உள்ளது.

பிறந்தநாள், பண்டிகைகள், இரங்கல் செய்திகள் போன்றவற்றுக்காக மட்டுமில்லாமல், குழந்தைகள் தங்கள் வகுப்பில் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருந்தால், அவர்களை வாழ்த்தி அட்டைகள் அனுப்பும் வழக்கமும் நடைமுறையில் உண்டு.

இந்தியாவில் மற்ற பண்டிகைகளை காட்டிலும், பிறந்தநாள் மற்றும் காதலர் தின வாழ்த்து அட்டைகள் அதிகமாக விற்பனையாகிறது. இங்கும் தற்போது முழுவதும் கைகளால் தயாரிக்கப்பட்ட வாழ்த்து அட்டைகளுக்கான சந்தை உருவாகி வருகிறது.

தொழில்நுட்பம் வளர்ந்தாலும், நாமே நம் கையால் தயாரித்து அனுப்பும் வாழ்த்து அட்டைகள் மூலம் கிடைக்கும் மகிழ்ச்சி அலாதியானது. வாழ்த்து அட்டைகளில் அச்சு மற்றும் கைவினை என இரண்டு பிரிவுகள் இருக்கின்றன. அதில் நான் கைவினையை தேர்ந்தெடுக்க காரணம், கையால் வடிவமைக்கப்படும் அட்டைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் தனித்துவமானவை என்பதால்தான்.

2015-ம் ஆண்டு முதல் வாழ்த்து அட்டைகளை தயாரிப்பதற்கு கற்றுக்கொடுத்து வருகிறேன். இல்லத்தரசிகள் மட்டுமில்லாமல் பல்வேறு துறையைச் சேர்ந்த பெண்களும் பயிற்சி பெறுகின்றனர். வாழ்த்து அட்டை தயாரிப்பு மூலம் வருமானம் ஈட்டுவதோடு மட்டுமில்லாமல், மன அமைதியும் கிடைப்பதாக தெரிவிக்கின்றனர்.

உலக அளவில் வாழ்த்து அட்டை தயாரிப்பதற்கான பல கல்வி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றின் மூலம் அங்கீகாரம் பெற்று உலகத்தர பயிற்றுவிப்பாளராக உருவாக வேண் டும் என்பதே எனது அடுத்த இலக்கு" என்றார் கிறிஸ்டினா ரஞ்சன். 

Tags:    

மேலும் செய்திகள்