சிலம்பாட்டத்தில் சிகரம் தொட்ட சிறுமி

சிறுமிகள், இளம்பெண்கள், முதியவர்கள் உள்பட அனைவரும் அறிந்திருக்க வேண்டிய தற்காப்புக்கலை ‘சிலம்பம்’. தற்போது சமூகத்தில் பெண்கள் பல்வேறு ஆபத்துகளை சந்தித்து வருகிறார்கள். அவற்றில் இருந்து அவர்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கு சிலம்பம் உதவும்.;

Update:2023-05-14 07:00 IST

மீபத்தில் நடந்த தேசிய அளவிலான சிலம்பாட்டப் போட்டியில், ஐந்து வயது சிறுமிகள் பிரிவில் வெற்றி பெற்று பாராட்டு சான்றிதழ் மற்றும் வெற்றிக்கோப்பைையப் பெற்ற மதுரை மாவட்டம், திருநகர் பகுதியைச் சேர்ந்த ஐந்து வயது சிறுமி நட்சத்திராவுடன் ஒரு சந்திப்பு...

"என்னுடைய தாத்தா பிரபு, எங்கள் வீட்டு அருகில் உள்ள மைதானத்தில் அவரது நண்பர்களுடன் சிலம்பம் பயிற்சி செய்வதை தினமும் பார்ப்பேன். அதனால் என்னுடைய மூன்றாவது வயதிலேயே எனக்கு சிலம்பத்தின் மீது தீராத ஆசை ஏற்பட்டது. அதை என்னுடைய அம்மா மற்றும் தாத்தா-பாட்டியிடம் தெரிவித்தேன்.

அவர்கள் என்னை சிலம்பு பயிற்சிப் பள்ளியில் சேர்த்தனர். அங்கு பாண்டியராஜன் என்பவரிடம் ஆர்வத்தோடு தினமும் சிலம்பம் கற்றுக் கொண்டேன். ஒரே வருடத்தில் பள்ளிகள் மற்றும் தனியார் அமைப்புகள் நடத்திய சிறுவர்களுக்கான சிலம்பாட்ட போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்று விருதுகளையும், பாராட்டு சான்றிதழ்களையும் பெற்றேன். இதனால் மகிழ்ச்சியடைந்த என்னுடைய குடும்பத்தினர் எனக்கு ஆக்கமும், ஊக்கமும் அளித்து வருகின்றனர்."

சிலம்பாட்டத்தில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன?

முதலில் சிலம்பம் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற தீவிர ஆர்வம் வேண்டும். 'கம்பு உயரம் கூட நாம் இல்லையே' என்று நினைக்கக்கூடாது. சிலம்பு பயிற்சியில் படிப்படியான பாடங்கள் உண்டு. ஒரு பாடத்தை பயிற்சி செய்து கொண்டிருக்கும்போது, இடையில் ஒரு வாரம் பயிற்சிக்கு செல்லாமல் நிறுத்தினாலும் முழுவதுமாக அந்த பாடம் மறந்துவிடும். மறுபடியும் அதை கற்கும்போது மீண்டும் அதற்கான வேகம், பலம், இயல்பு ஆகியவற்றை பெறுவதற்கு சற்று சிரமப்பட வேண்டும். எனவே, இடைவெளி இல்லாமல் ஒரே சிந்தனையுடன் சிலம்பாட்டம் பயிற்சி பெற வேண்டும். இவ்வாறு தொடர்ந்து அடுத்தடுத்த பாடநிலை பயிற்சிகள் பெற்றால்தான் சிலம்பாட்டத்தை முழுமையாக கற்று தேர்ச்சி பெற முடியும். சிலம்பாட்டம் பயிற்சி பெற்ற பிறகு வரும் சோர்வு மற்றும் உடல் வலியை பெரிதுபடுத்தக்கூடாது.

சிலம்பாட்டம் சிறுமிகளுக்கு எந்த வகையில் உதவும்?

சிறுமிகள், இளம்பெண்கள், முதியவர்கள் உள்பட அனைவரும் அறிந்திருக்க வேண்டிய தற்காப்புக்கலை 'சிலம்பம்'. தற்போது சமூகத்தில் பெண்கள் பல்வேறு ஆபத்துகளை சந்தித்து வருகிறார்கள். அவற்றில் இருந்து அவர்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கு சிலம்பம் உதவும்.

சமீபத்தில் நடந்த தேசிய அளவிலான சிலம்பாட்டப் போட்டியில் கலந்துகொண்டதைப் பற்றி சொல்லுங்கள்?

இப்போது நான், கண்ணன் என்பவரிடம் சிலம்பாட்டம் கற்று வருகிறேன். அவருடைய வழிகாட்டுதலால் முதல் தேசிய அளவிலான சிலம்பாட்டப் போட்டியில், ஐந்து வயது சிறுமிகளுக்கான பிரிவில் கலந்து கொண்டு வெற்றி பெற்று கோப்பை மற்றும் பாராட்டு சான்றிதழ் பெற்றேன். தொடர்ந்து இதுபோன்ற போட்டிகளில் கலந்து கொள்ள வேண்டும் என்ற நிலைப்பாட்டை இந்த வெற்றி எனக்கு தந்திருக்கிறது.

சிலம்பம் தவிர வேறு பயிற்சிகளில் ஈடுபடுகிறீர்களா?

பேட்மிண்டன், நடனம், நீச்சல் ஆகியவற்றையும் பயின்று வருகிறேன்.

எதிர்காலத்தில் எத்தகைய சாதனை நிகழ்த்த ஆசைப்படுகிறீர்கள்?

சிறந்த பெண் விமான ஓட்டியாக ஆக வேண்டும் என்பதே எனது லட்சியம். இதுதவிர சிலம்பாட்டத்தில் 'பரிவட்டம்' எனும் ஆசான் பட்டம் பெற்று, சிலம்பாட்ட பள்ளி ஒன்று தொடங்கி சிறுமிகள் முதல் அனைத்து வயது பெண்களுக்கும் தற்காப்பு கலையான சிலம்பாட்டத்தை கற்றுத்தருவேன்.

Tags:    

மேலும் செய்திகள்