புதியதோர் உலகம் படைக்க புறப்படுங்கள் - சுடர்க்கொடி கண்ணன்
தங்களுக்குப் பிடித்த துறையில் சாதிக்க அனைத்து பெண்களும் முயற்சி செய்ய வேண்டும். தயக்கத்தையும், தடைகளையும் உடைத்து புதியதோர் உலகம் படைக்க புறப்பட வேண்டும்.;
"பெண்களின் சக்தி மகத்தானதாக உருவெடுத்துள்ளது. பெண்கள் அனைவரும் சாதிக்கப் பிறந்தவர்கள்" என்கிறார் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையைச் சேர்ந்த முனைவர் சுடர்க்கொடி கண்ணன். சென்னை ஆர்.கே. நகர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வரான இவர், தமிழ் மொழியின் மீது மிகுந்த ஆர்வம் உடையவர். தனது இலக்கியப் பணிகளுக்காக தென்னிந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் சார்பாக 'பாரதி பணிச் செல்வர்' விருதையும், மனிதநேயப் பணிகளுக்காக 20-க்கும் மேற்பட்ட விருதுகளையும் பெற்றிருக்கிறார்.
எழுத்தாளர், தன்னம்பிக்கை பேச்சாளர், சமூக செயற்பாட்டாளர் என பன்முகத் தன்மையோடு விளங்குகிறார். ஐ.ஏ.எஸ். போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்வதற்காக மாணவர்களுக்கு இலவச பயிற்சி அளிக்கிறார். ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான உதவிகளை வழங்குகிறார். பெண்களுக்கு ஊட்டச்சத்தின் அவசியம், சுற்றுப்புற தூய்மை மற்றும் மார்பகப் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.
இவருடன் பேசியதில் இருந்து…
கல்வி, வேலைவாய்ப்பில் மாணவர்களை ஊக்கப்படுத்த நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் பற்றி சொல்லுங்கள்?
அரசுக் கல்லூரி மாணவர்களுக்கு தனி வகுப்புகள் மூலம் போட்டித் தேர்வுகளுக்கு இலவசமாக பயிற்சி அளிக்கிறேன். ஏழை மாணவர்களின் படிப்பிற்கு புத்தகங்கள், புத்தாடைகள் வாங்கிக் கொடுப்பது போன்ற என்னால் இயன்ற உதவிகளை செய்து வருகிறேன். சிறந்து விளங்கும் நிறுவனங்களை தேடிப் பிடித்து நாங்கள் நடத்தும் வேலை வாய்ப்பு முகாம்களுக்கு அழைத்து வருகிறோம். அது மாணவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறது
எழுத்து மீது ஆர்வம் கொண்ட நீங்கள் இதுவரை எழுதிய புத்தகங்கள் குறித்து சொல்லுங்கள்?
'மாமனிதர் - புக்கர் தி.வாஷிங்டன்', 'குழந்தை வளர்ப்பு பெற்றோர்களின் கனிவான கவனத்திற்கு', இணையத்தைப் பயன்படுத்துவதில் உள்ள ஆதாயங்கள் மற்றும் அபாயங்கள் குறித்த புத்தகம் என மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் பயன்படும் வகையில் புத்தகங்கள் எழுதி உள்ளேன். ஔவையார் இயற்றிய 'நல்வழி' எனும் தமிழ் நீதி நூலிற்கு விளக்கம் கூறி, நான் எழுதிய புத்தகத்தை மாணவர்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறேன்.
இன்றைய பெண்கள் குறித்து தங்களின் கருத்து?
இன்று எல்லாத் துறைகளிலும் பெண்கள் தடம் பதித்து வருகிறார்கள். வியக்கத்தக்க வகையில் சாதனைகள் செய்கிறார்கள் குடும்பம், குழந்தை வளர்ப்பு ஆகியவற்றை மட்டும் தங்கள் கடமையாக நினைக்காமல், தங்களுக்குப் பிடித்த துறையில் சாதிக்க அனைத்து பெண்களும் முயற்சி செய்ய வேண்டும். தயக்கத்தையும், தடைகளையும் உடைத்து புதியதோர் உலகம் படைக்க புறப்பட வேண்டும்.