பிடித்த பணியை ரசித்து செய்கிறேன் - கல்பனா
பொதிகை தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘அய்யா’ என்ற தந்தை பெரியார் வாழ்க்கை தொடரிலும் நடித்திருக்கிறேன். நான் இயக்கிய ‘ஓவியா’ என்ற குறும்படம் திரைப்பட விழாவில் விருது பெற்றது. தற்போது ‘முடிவு’ என்ற குறும்படத்தை இயக்கும் முயற்சியில் இருக்கிறேன்.;
'18 வருட மேடை நாடக அனுபவம் மற்றும் 15 வருட ஆசிரியர் பணி, இதில் எது உங்கள் மனதுக்கு நெருக்கமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது' என்று கேட்டால், "சீரான பார்வைக்கு இரண்டு கண்கள் எவ்வகையில் அவசியமோ, அவ்வாறுதான் எனக்கு நாடகமும், ஆசிரியர் பணியும்" என்கிறார் கல்பனா பண்டரிநாதன்.
நடிகை, தமிழாசிரியை, யோகா பயிற்றுனர், குறும்பட இயக்குநர், சிறுகதை வாசிப்பாளர் என பன்முகத்திறமையோடு வலம் வரும் கல்பனா, வாய்ப்பு கிடைக்கும் தளங்களில் எல்லாம் தன்னை ஈடுபடுத்திக்கொள்கிறார். சமீபத்தில் இவர் தனது பள்ளி குழந்தைகளை வைத்து இயக்கிய ஆல்பம் பாடல் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. குழந்தைகளுடனான அவரது பயணத்தைப் பற்றி கேட்டோம்.
"எனது பூர்வீகம் சென்னை அயன்புரம். கல்லூரியில் இளங்கலை முடித்துவிட்டு, முதுகலை படித்துக்கொண்டு இருந்தபோது, பேராசிரியர் அரங்க மல்லிகா என்னை ஊக்கப்படுத்தினார். 'வெண்மணி வெளிச்சம்' என்ற புத்தகத்தை கொடுத்து நாடகம் தயாரிக்கும்படி கூறினார். அந்த புத்தகத்தை நாடக வடிவமாக மாற்றி, மேடையில் நிகழ்த்தினேன். அதுதான் என்னை மேடை நாடகங்களில் ஈடுபடுத்திக்கொள்ள முதல் படியாக அமைந்தது.
பிறகு மறைந்த பத்திரிகையாளர் ஞாநி நடத்திய நாடகக் குழுவில் இணைந்தேன். அதையடுத்து நிறைய நாடகங்களில் நடிக்கத் தொடங்கினேன். வட்டம், தேடுங்கள் உள்ளிட்ட 80-க்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்து இருக்கிறேன். நான் நடித்த 'நாங்கள்' என்ற தனி நபர் நாடகம் பெரிதாக பேசப்பட்டது.
பொதிகை தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'அய்யா' என்ற தந்தை பெரியார் வாழ்க்கை தொடரிலும் நடித்திருக்கிறேன். நான் இயக்கிய 'ஓவியா' என்ற குறும்படம் திரைப்பட விழாவில் விருது பெற்றது. தற்போது 'முடிவு' என்ற குறும்படத்தை இயக்கும் முயற்சியில் இருக்கிறேன்.
சமீபத்தில் நான் பணியாற்றும் பள்ளியின் உதவியோடு, எனது மாணவர்களை வைத்து 'சிறகை விரித்தால் சிகரமே' என்ற ஆல்பம் பாடல் ஒன்றை இயக்கி வெளியிட்டேன். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.''
கலை பயண அனுபவங்களை பேசியவர், ஆசிரியர் பணி குறித்து பகிர்ந்து கொண்டார். "தமிழாசிரியராக இருப்பதால் குழந்தைகளிடம் நிறைய பேசுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. ஒவ்வொரு குழந்தைக்கும் வேறுபட்ட குடும்பச்சூழல் இருக்கும். வகுப்பறையில் இருக்கும் நேரம்தான் அவர்களுக்கான உலகம்.
அதனால் அவர்களுக்கு படிப்பில் சலிப்பு ஏற்படாத வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும். கதைகள், பாடல்கள், நடிப்பின் வழியாக பாடம் சொல்லிக் கொடுக்கும் போது, ஆர்வத்தோடு கவனிப்பார்கள்.
மேடை நாடக அனுபவம் காரணமாக வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் குழந்தைகளை நடிப்பில் ஈடுபடுத்துவேன். அந்த வகையில் பல நாடகங்களை அரங்கேற்றி இருக்கிறேன். குழந்தைகளின் தனித்திறமைகளை கண்டறிந்து அவர்களை ஊக்கப்படுத்துவது அவசியம். ஆசிரியரும், பெற்றோரும் அதை கண்டுபிடிக்கத் தவறும்போது அவர்களிடம் உள்ள திறமைகள் காணாமல் போய்விடும்.
தன் குழந்தையை போல், மற்ற குழந்தைகளையும் அரவணைக்கும்போது, எந்த குழந்தையும் தவறான பாதைக்கு செல்லாது. பிடித்த விஷயங்களையே வேலையாக செய்யும் வாய்ப்பு கிடைக்கும்போது, அதை ரசித்து செய்வதுதானே இயல்பாக இருக்கும். நான் அதைத் தான் செய்கிறேன்" என்றார்.