கிராமப் பெண்களுக்கு வேலை வாய்ப்பு பயிற்சி...

வேலையில்லாமல் தவிக்கும் கிராமத்து பெண்களுக்கு இலவசமாக உணவு, உறைவிடம் கொடுத்து, செய்முறை பயிற்சி அளிக்கிறோம். அவர்களுக்கு தகுந்த மரியாதையும், உழைப்புக்கேற்ற ஊதியமும் கிடைக்க உதவுகிறோம்.;

Update:2023-04-23 07:00 IST

"படித்த பெண்கள்தான் சுயமாக சம்பாதிக்க முடியும் என்பதில்லை. சூழ்நிலையால் கல்வி கற்க முடியாமல்போன பாமரப் பெண்களும் சொந்தக்காலில் நிற்க முடியும்" என்கிறார் சென்னையைச் சேர்ந்த மோட்சா. கல்வி பயிலாத பெண்கள், கணவரை இழந்தவர்கள், பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெண்கள் என பலருக்கும் இலவச வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறார். இவரால் பணியில் சேர்ந்த பல பெண்கள், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் பணியாற்றி வருகிறார்கள். மோட்சாவுடன் ஒரு சந்திப்பு.

"காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள உத்திரமேரூர் எனது பூர்வீகம். பெற்றோர் லூர்துசாமி-பாலம்மாள். கணினி செயல்பாட்டில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்கிறேன். எனது கணவர் சுயதொழில் செய்து வருகிறார்.

பத்தாம் வகுப்பு முடித்தவுடன் தொடர்ந்து படிக்க முடியாத சூழலில், எனக்கு ஏற்பட்ட ஒரு கசப்பான அனுபவத்தின் விளைவாக தொடங்கப்பட்டதுதான் என்னுடைய நிறுவனம். அதன் பின்னர் தொழிலை கவனித்துக் கொண்டே மேற்படிப்பை முடித்தேன்.

எனது நிறுவனத்தின் மூலம் படிப்பறிவற்ற, ஆதரவற்ற பெண்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறேன். படிக்காத பெண்களாலும் சொந்தமாக சம்பாதிக்க முடியும் என்ற நிலையை ஏற்படுத்தியிருக்கிறேன்.15 ஆண்டுகளில் இதுவரை ஆயிரக்கணக்கான பெண்களுக்கு வேலைவாய்ப்பினை அளித்திருக்கிறேன். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கும் பணியும் செய்து வருகிறேன்.

வேலையில்லாமல் தவிக்கும் கிராமத்து பெண்களுக்கு இலவசமாக உணவு, உறைவிடம் கொடுத்து, செய்முறை பயிற்சி அளிக்கிறோம். அவர்களுக்கு தகுந்த மரியாதையும், உழைப்புக்கேற்ற ஊதியமும் கிடைக்க உதவுகிறோம். சுய சுகாதாரம், சமையல், குழந்தைகள் மற்றும் நோயாளிகள் பராமரிப்பு, தோட்ட வேலை உள்ளிட்ட பல்வேறு பணிகள் செய்வதற்கான பயிற்சியை அளிக்கிறோம்.

இந்தப் பணிகளுக்காக, 2019-ம் ஆண்டு எனக்கு கவுரவ முனைவர் பட்டம் கிடைத்தது. மேலும், சிறந்த தொழில்முனைவோருக்கான விருது, அப்துல்கலாம் விருது உள்ளிட்ட 15 விருதுகளை இதுவரை பெற்றிருக்கிறேன். மார்பகப் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் அமைப்பில் நல்லெண்ணத் தூதுவராகவும் செயல்பட்டு வருகிறேன்" என்று புன்னகையுடன் தெரிவித்தார் மோட்சா.

பணிப்பெண்களை மரியாதையுடன் நடத்துங்கள்

குடும்ப சூழ்நிலையின் காரணமாக வீட்டு வேலைக்கு வரும் பெண்களை மரியாதையாகவும், கண்ணியமாகவும் நடத்துவது முக்கியம். அவர்கள் சிறப்பாக செயல்படும்போது மனதார பாராட்டுங்கள். பணிப்பெண்களை மரியாதையோடு அழைக்கவும், நடத்தவும் உங்கள் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுங்கள்.

கண்டிப்பது அல்லது குறை கூறுவதற்குப் பதிலாக சில தெளிவான விதிகளை முன்னரே அமைத்துக்கொள்ளுங்கள். அதற்கேற்ப நடந்துகொள்ள அவர்களை அறிவுறுத்துங்கள். வேலையில் ஏதேனும் தவறுகள் செய்துவிட்டால், அதை திருத்தி அமைப்பதற்கு போதுமான கால அவகாசம் கொடுங்கள்.

அவர்கள் பணியில் தவறுகள் செய்யும்போது அதைப்பற்றி நிதானமாகவும், உறுதியாகவும் அவர்களிடம் பேசுங்கள். அதேசமயம் உடல் மற்றும் மனநலம் தொடர்பான பிரச்சினைகள் அவர்களுக்கும் உண்டு என்பதை புரிந்துகொள்ளுங்கள். அத்தகைய நேரங்களில் அவர்களிடம் கருணை காட்டுவதற்கு தயங்காதீர்கள்.

உங்களுடைய வீட்டு வேலைகளின் சுமையைக் குறைப்பதற்காகத்தான் நீங்கள் பணிப்பெண்களை நியமிக்கிறீர்கள். அதேசமயம், அனைத்து வேலைகளையும் அவர்களிடம் குவிப்பதும் நியாயமானதாக இருக்காது. அதிக வேலைச்சுமை, பணிப்பெண்களின் உடல்நலத்தை பாதிக்கக்கூடும். அதனால் அவர்கள் வேலையை விட்டு விலகும் வாய்ப்புகள் உள்ளன. பணிகளுக்கு இடையே அவர்கள் சற்று ஓய்வெடுப்பதற்கும் நேரம் ஒதுக்கிக் கொடுங்கள்.

Tags:    

மேலும் செய்திகள்