மனதுக்கு பிடித்ததை செய்யுங்கள் - நிருபா மலர்க்கொடி
நன்றாக வீணை வாசிப்பேன். ஒயர் கூடை, வீட்டு அலங்காரப் பொருட்கள், எம்பிராய்டரி, பேஷன் ஜுவல்லரி உள்ளிட்ட கைவினைகளைச் செய்வேன். பலவிதமான இனிப்பு வகைகளைச் செய்வது எனக்குப் பிடித்த விஷயம்.;
"கணவரின் ஆதரவு இருந்தால் ஒரு இல்லத்தரசி எந்த விஷயத்திலும் சாதிக்கலாம். திருமணமோ, வயதோ சாதிப்பதற்குத் தடையாக இருக்காது. நீங்கள் இருக்கும் சூழலுக்கு ஏற்ப உங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில், சிறிய அளவிலாவது உங்களுக்குப் பிடித்த விஷயங்களைத் தயங்காமல் செய்யுங்கள்" என்கிறார் நிருபா மலர்க்கொடி.
சென்னையில் வசிக்கும் இவர் பல அழகிப் போட்டிகளில் கலந்து கொண்டு பட்டங்கள் வென்றிருக்கிறார். விளம்பரப் படங்களிலும், வெப் சீரிஸ் எனப்படும் இணையத் தொடர்களிலும் நடித்து வருகிறார். நிருபா மலர்க்கொடி, திருமணத்துக்குப் பிறகே பல துறைகளிலும் சாதித்து வருவது குறிப்பிடத்தக்கது.
அவருடன் நடந்த உரையாடல்…
எனது தாய் ராணி ஓய்வு பெற்ற அரசு ஊழியர். தந்தை இளங்கோவன் ஓய்வு பெற்ற பேராசிரியர். சகோதரி கிருபா வெளிநாட்டில் வசிக்கிறார். கணவர் நவீன் குமார் தனியார் நிறுவனத்தில் பொறியாளராகப் பணியாற்றுகிறார். நான் பொறியியலில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்கிறேன். தற்போது முனைவர் பட்டம் பெறுவதற்காக அண்ணா
பல்கலைக்கழகத்தில் 'கட்டுமானப் பொருட்கள்' என்ற தலைப்பில் ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொண்டு வருகிறேன். விளம்பரங்களிலும் நடித்து வருகிறேன்.
அழகிப் போட்டி, மாடலிங் மற்றும் நடிப்பு தவிர நான் நன்றாகப் பாடுவேன். சிறு வயதில் ஆறு ஆண்டுகள் முறையாகக் கர்நாடக சங்கீதம் கற்றுக் கொண்டேன். நன்றாக வீணை வாசிப்பேன். ஒயர் கூடை, வீட்டு அலங்காரப் பொருட்கள், எம்பிராய்டரி, பேஷன் ஜுவல்லரி உள்ளிட்ட கைவினைகளைச் செய்வேன். பலவிதமான இனிப்பு வகைகளைச் செய்வது எனக்குப் பிடித்த விஷயம்.
அழகிப் போட்டிகளில் பங்கேற்கும் ஆர்வம் வந்தது எப்படி?
சிறு வயதில் இருந்தே போட்டிகளில் பங்கேற்பதற்கு எனது தாய் என்னை ஊக்குவித்து வந்தார். போட்டிகளுக்கான எந்த விளம்பரத்தைப் பார்த்தாலும் உடனே அதில் "கலந்துகொள்கிறாயா?" என்று கேட்பார். 2018-ல் 'மிஸ் சென்னை இண்டர்நேஷனல்' என்ற அழகிப் போட்டி சென்னையில் நடந்தது. அதில் கலந்து கொள்ளுமாறு அம்மா சொன்னார். எனக்குத் தயக்கமாக இருந்தது. எங்கள் குடும்ப நண்பரின் மகளான ஈஷா, "உன்னால் ஜெயிக்க முடியுமா, முடியாதான்னு கவலைப் படாதே, போட்டியில் கலந்துகொள்வது தான் முக்கியம், தைரியமாகப் போ" என்று கூறினாள். அதன் பிறகே நான் அப்போட்டியிலும், அதன்பின் நடந்த பல போட்டிகளிலும் கலந்து கொண்டேன். என்னுடைய குழப்பங்களுக்குத் தெளிவு தருவது முதல், பிரச்சினைகளுக்குத் தீர்வு சொல்வது வரை வயதுக்கு மீறிய பக்குவத்தோடு நடந்துகொள்பவள் ஈஷா. அவள்தான் எனக்கு மகளாகவும், நெருங்கிய தோழியாகவும் இருப்பவள்.
நடிப்புத் துறையில் ஈடுபாடு ஏற்பட்டதைப் பற்றிச் சொல்லுங்கள்?
எனது தாயைப் பார்த்துதான் நான் நடிக்கக் கற்றுக் கொண்டேன். அவர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக மேடை நாடகங்களில் நடித்து வருகிறார். தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்திருக்கிறார்.
அவரைப் பார்த்து 'நடிப்பு எவ்வளவு அற்புதமான கலை' என்பதைத் தெரிந்து கொண்டேன். அதன் பிறகுதான் எனக்கும் நடிப்பில் ஆர்வம் வந்தது. 'குயின்' என்ற வெப் சீரிஸில் சிறு வேடத்தில் நடித்திருக்கிறேன். நிறைய விளம்பரப் படங்களில் நடித்திருக்கிறேன். திருமணப் புகைப்படங்களுக்கான ஆல்பங்களுக்கு மாடலாகவும் பணியாற்றி இருக்கிறேன்.
திருமணத்துக்குப் பிறகு சாதிப்பது எளிதானதா?
மாடலிங் துறையில் இருப்பவர்கள் திருமணத்துக்குப் பிறகு நிறைய சவால்களை சந்திக்க வேண்டியது இருக்கும். ஆனால் என்னைப் பொறுத்தவரை பெற்றோர், கணவர் மட்டுமின்றி எனது மாமனார் ஸ்ரீதரன், மாமியார் சித்ரா என எல்லோருமே 'உன் திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக, விளம்பரமோ, நடிப்போ, உனக்குப் பிடித்ததை தைரியமாகச் செய்' என்று உற்சாகப்படுத்தி உறுதுணையாக இருக்கிறார்கள். எனது குடும்பத்தின் ஆதரவு தான் எனது மிகப்பெரிய பலமாக இருக்கிறது.
சாதிக்க நினைக்கும் குடும்பத் தலைவிகளுக்கு உங்கள் ஆலோசனை என்ன?
பல இல்லத்தரசிகளுக்கு தங்களுக்குள் இருக்கும் திறமைகளை வெளிப்படுத்தவும், பிடித்த துறையில் தங்களை மேம்படுத்திக் கொண்டு தங்களுக்கான அடையாளத்தை ஏற்படுத்தவும் ஆசை இருக்கும். ஆனால், குடும்பச்சூழல் அதற்கு ஏற்றவாறு இருக்காது. அவர்களுக்கு என்னுடைய ஆலோசனை என்னவென்றால், 'முதலில் உங்களின் ஆசைகளையும், கனவுகளையும் உங்கள் கணவரிடம் அன்போடு பொறுமையாகச் சொல்லிப் புரிய வையுங்கள். அவரின் ஒத்துழைப்பு இருந்தால், அவரது பெற்றோரின் ஆதரவையும் எளிதாகப் பெற்று விடலாம்.
உங்களுக்குக் கிடைத்துள்ள விருதுகள், கவுரவங்கள் பற்றி?
பல்வேறு அழகிப் போட்டிகளில் கலந்து கொண்டு 'மிஸ். சென்னை இன்டர்நேஷனல், மிஸ். ரேம்ப் வாக், மிஸஸ். போட்டோஜெனிக்', 'மிஸஸ். டேலண்ட்டடு' போன்ற பட்டங்கள் பெற்றிருக்கிறேன். இவை தவிர, 'தமிழ் இலக்கியத்தில் மதிப்புறு முனைவர் பட்டம்' பெற்றிருக்கிறேன்.
சமூகத்துக்கு நீங்கள் செய்ய விரும்புவது?
'சாதிப்பதற்குத் திருமணம் செய்துகொள்வது ஒரு தடையல்ல' என்பதைப் பெண்களுக்கு, குறிப்பாக திருமணமான பெண்களுக்குப் புரிய வைத்து அவர்களை முன்னேற்றும் வகையில் என்னால் இயன்ற வழிகளில் எல்லாம் உதவ வேண்டும் என்பதே என்னுடைய நீண்ட நாள் ஆசை. அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறேன்.