திறமையை கண்டறியுங்கள்- மீனா

எனது பணியில் தமிழ் மொழிக்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுக்கிறேன். ஏனெனில், இன்று ஆங்கில கலப்பு காரணமாக பலரிடம் தமிழ் உச்சரிப்பின் தரத்தில் மாறுதல் ஏற்பட்டுள்ளது. இதனை மாற்ற வேண்டும் என்ற வகையில் எனது பங்களிப்பை அளித்து வருகிறேன்.

Update: 2022-07-31 01:30 GMT

"நமது திறமை எது என்று கண்டறிந்து, தன்னம்பிக்கையோடு அதை வளர்த்துக் கொண்டால் எளிதாக சாதிக்கலாம்" என்கிறார் கோவில்பட்டியைச் சேர்ந்த மீனா. தனது பலம், தன்னுடைய குரல்தான் என்று அறிந்து, அதைச் சார்ந்த வாய்ப்புகளை பெற்று தற்போது பல தளங்களில் குரல் கலைஞராக பணியாற்றி வருகிறார். அவருடன் ஒரு உரையாடல்.

குரல் கலைஞராக நீங்கள் பணியாற்ற ஆரம்பித்தது பற்றி சொல்லுங்கள்?

நான் முதன் முதலாக கொரோனா காலத்தில்தான் யூ டியூப் சேனலில், குரல் கலைஞராக எனது பணியைத் தொடங்கினேன். கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி எனது திறமையை தொடர்ந்து வெளிப்படுத்தி வந்தேன். தற்போது வீட்டில் இருந்தே வானொலி, குறும்படங்கள், விளம்பரங்கள், ஆடியோ புத்தகங்கள், சிறுகதைகள் போன்றவற்றுக்கு குரல் கொடுத்து வருகிறேன்.

எனது பணியில் தமிழ் மொழிக்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுக்கிறேன். ஏனெனில், இன்று ஆங்கில கலப்பு காரணமாக பலரிடம் தமிழ் உச்சரிப்பின் தரத்தில் மாறுதல் ஏற்பட்டுள்ளது. இதனை மாற்ற வேண்டும் என்ற வகையில் எனது பங்களிப்பை அளித்து வருகிறேன்.

சிறு வயதில் இருந்தே தமிழ் மீது எனக்கு பற்று அதிகம். பள்ளியில் படிக்கும்போது பேச்சுப் போட்டிகளில் பங்கேற்று இருக்கிறேன். திருமணத்துக்கு பிறகு, பல நிறுவனங்களில் வாடிக்கையாளர் சேவை அதிகாரியாக பணியாற்றினேன். அதன் மூலமாக எனக்கு குரல் கலைஞராக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. தற்போது பல தளங்களில் 10 வருடங்களாக என் குரல் ஒலித்து வருகிறது.

தமிழ் ஆடியோ புத்தகங்களான சிவகாமியின் சபதம் மற்றும் பார்த்திபன் கனவு ஆகியவற்றில், பல கதாபாத்திரங்களுக்கு குரல் கொடுத்திருக்கிறேன். அதற்கு நேயர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.

உங்களின் நோக்கம் என்ன?

தமிழின் மகத்துவத்தை என் குரல் மூலம் வெளிப்படுத்த வேண்டும். சொந்தமாக ஆன்லைன் பண்பலை உருவாக்கி, அதன்மூலம் தமிழை வளர்க்க வேண்டும்.

சாதிக்க நினைக்கும் பெண்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?

வளர்ந்து வரும் நவீன உலகில், திறமையை வளர்த்துக்கொள்ளவும், வெளிப்படுத்தவும் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. பெண்கள் தங்களிடம் இருக்கும் திறமையை முதலில் கண்டறிந்து மேம்படுத்த

வேண்டும். கிடைக்கும் வாய்ப்புகளை தவறவிடாமல் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தொழில்நுட்பத்தை உபயோகித்து வளர்ச்சிப் பாதையில் பயணிக்க வேண்டும். தவறான நபர்களை புறக்கணித்து தொடர்ந்து முன்னேற வேண்டும். 

Tags:    

மேலும் செய்திகள்