பெண்ணின் வளர்ச்சி நாட்டை முன்னேற்றும் - சுகுணா
தொழிலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு போக வேண்டும் என்ற எண்ணத்துடன் எங்கள் கிராமத்தில் இருந்து, கோவை நகரத்துக்கு குடிபெயர்ந்தேன். அங்கு உள்ள பயிற்சிப் பள்ளியில் வேலை செய்து கொண்டே சந்தைப் படுத்துதலில் நிர்வாகியாகவும் பணியாற்றினேன். அதன்பிறகு பேஷன் டிசைனிங்கில் முதுகலைப் பட்டயப் படிப்பையும் முடித்தேன்.;
"திருமணத்துக்குப் பிறகு தனது கனவுகளைத் தொலைத்து, குடும்பத் தலைவியாக மட்டுமே வாழ்க்கையைத் தொடரும் பெண்களை, வெற்றிகரமான தொழில் முனைவோர்களாக மாற்ற வேண்டும் என்பதே எனது லட்சியம்" என்று நம்பிக்கையோடு பேசுகிறார் சுகுணா.
சேலத்தில் பிறந்து, வளர்ந்து, கோவையைச் சேர்ந்த விவசாயக் குடும்பத்தில் மருமகளாகச் சென்ற சுகுணாவுக்கு பேஷன் டிசைனிங்கில் அதிக ஆர்வம் இருந்தது. எனவே தொழில் முறையில் பேஷன் டிசைனிங் படித்து, அதையே தனது தொழிலாக ஆரம்பித்தார். ஆர்வம் மற்றும் தொடர் முயற்சியின் காரணமாக, விரைவாகவே தனக்கென தனி முத்திரை பதித்தார்.
தமிழக அளவில் 300-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்ற போட்டியில் 'பெஸ்ட் கிரியேட்டிவ் டிசைனர் ஆப் தமிழ்நாடு' என்ற பட்டத்தை வென்றார். இப்போதுவரை, பல பெண்களை தொழில் முனைவோராக மாற்றி சொந்தக் காலில் நிற்கச் செய்திருக்கிறார். அவருடைய பேட்டி.
"என் தந்தை பிரகாசம், தாய் கிரிஜா. பள்ளிப்படிப்பை முடித்த உடனேயே எனக்கு திருமணம் நடந்தது. கனவர் சண்முகநாதன் விவசாயி. எங்களுக்கு ரதீஷ், கிஷோர் என இரண்டு மகன்கள். சொந்த பந்தங்களோடு கூட்டுக் குடும்பமாக வாழ்கிறோம்.
எனது முதல் குழந்தைக்கு ஒரு வயது ஆன பிறகு, 'தொடர்ந்து படிக்க வேண்டும்' என்ற என்னுடைய விருப்பத்தை கணவரிடம் தெரிவித்தேன். அவரது துணையுடன், தொலைதூரக் கல்வி மூலமாக இளங்கலை வணிகவியல் மற்றும் கணினி தொடர்பான பட்டயப் படிப்புகளை முடித்தேன்.
படிப்பை முடித்த பிறகு வங்கித் தேர்வுகளை எழுதும்படி குடும்பத்தினர் அறிவுறுத்தினர். ஆனால், அதில் எனக்கு ஆர்வம் ஏற்படவில்லை. பிறகு, எங்கள் வீட்டருகே உள்ள ஒரு பெண்ணிடம் தையல் கற்றுக் கொண்டேன். அதில் அதிக ஆர்வம் உண்டானதால் அது பற்றி மேலும் கற்றுக்கொள்ள விரும்பினேன். பேஷன் டிசைனிங் படித்தேன்.
பேஷன் டிசைனிங்கில் பயிற்சி அளிக்கும் தொழிலைத் தேர்ந்தெடுத்தது ஏன்?
பயிற்சிப் பள்ளியில் சேர்ந்து படித்துக்கொண்டிருந்தபோது, ஒரு நாள் தையல் ஆசிரியர் வராததால், எனக்குத் தெரிந்ததை மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுத்தேன். 'நீ நன்றாக சொல்லிக் கொடுக்கிறாய். அது எங்கள் எல்லோருக்கும் எளிதாகப் புரிகிறது' என்று மற்ற மாணவிகள் சொன்னபோது மகிழ்ச்சியாக இருந்தது. அதன்பிறகே 'ஏன் நாம் இதையே தொழிலாக்கிக் கொள்ளக் கூடாது?' என்ற எண்ணம் வந்தது. அதனால் ஆரி, எம்பிராய்டரி, கைவினைப் பொருட்கள் செய்வது என்று பல பயிற்சிகளையும் பெற்று என்னை மேம்படுத்திக் கொண்டேன்.
அதன் பிறகு, சிறிய அளவில் பயிற்சி நிலையத்தைத் தொடங்கினேன். ஒன்றரை ஆண்டுகளில் 150 பேருக்கு தையல் தொழிலை முழுவதுமாகக் கற்றுக் கொடுத்தேன். படிக்காதவர்களுக்கு கூட எளிதாக புரியும்படி சொல்லிக் கொடுத்தேன். அவர்கள் மற்றவர்களுக்குத் துணிகளைத் தைத்துக் கொடுத்து வருமானம் ஈட்ட ஆரம்பித்ததும், தாங்களும் சொந்தக் காலில் நிற்கிறோம் என்று மகிழ்ச்சியைத் தெரிவித்தார்கள்.
தொழிலை விரிவாக்கியது எப்போது?
தொழிலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு போக வேண்டும் என்ற எண்ணத்துடன் எங்கள் கிராமத்தில் இருந்து, கோவை நகரத்துக்கு குடிபெயர்ந்தேன். அங்கு உள்ள பயிற்சிப் பள்ளியில் வேலை செய்து கொண்டே சந்தைப் படுத்துதலில் நிர்வாகியாகவும் பணியாற்றினேன். அதன்பிறகு பேஷன் டிசைனிங்கில் முதுகலைப் பட்டயப் படிப்பையும் முடித்தேன். பேஷன் ஷோக்களில் கலந்து கொண்டு பரிசுகளை வென்றேன். 2018-ம் ஆண்டு என்னுடைய கனவுப் பயிற்சிப் பள்ளியை கோவை நகரத்தில் தொடங்கினேன்.
இதுவரை எத்தனை பேருக்குப் பயிற்சி அளித்திருக்கிறீர்கள்? அவர்களில் எத்தனை பேர் தொழில் முனைவோராக இருக்கிறார்கள்?
நேரடிப் பயிற்சி வகுப்பில் 700-க்கும் மேற்பட்டோரும், ஆன்லைன் பயிற்சி வகுப்பில் 500-க்கும் மேற்பட்டோரும் இதுவரை பயிற்சி எடுத்துள்ளனர். அவர்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் தொழில் முனைவோராக இருக்கிறார்கள். சிலர் 'ஹோம்ப்ரனராக' அதாவது, வீட்டில் இருந்தே துணிகளைத் தைத்துக் கொடுத்து சிறிய அளவில் வருமானம் பெறுபவர்களாக உள்ளனர்.
இல்லத்தரசிகளைத் தொழில்முனைவோராக்க விரும்புவது எதனால்?
ஒரு பெண் திருமணம் ஆன பிறகு, 'குடும்பம், குழந்தை வளர்ப்பு' என்ற பொறுப்புகளைத் தாண்டி வெளியே வந்து தொழில் தொடங்கும்போது, அது அவர்களின் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கான வளர்ச்சிப் பாதையை உருவாக்கிக் கொடுப்பதாக இருக்கும். இதன் மூலம் நாடு முன்னேறும்.
பயிற்சி பெறும் பெண்களுக்கு வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்கும்விதமாக, பயிற்சி பள்ளி மூலம் ஆண்டுக்கு இரண்டு முறை பேஷன் ஷோக்களை நடத்துகிறோம். தாங்கள் வடிவமைத்த உடையை, ஒரு அரங்கில் நூற்றுக்கணக்கானோர் பார்க்கும்போது மாணவிகளுக்கு மகிழ்ச்சியும், தன்னம்பிக்கையும் ஏற்படும். கணவனால் கைவிடப்பட்டவர்கள், வறுமையில் இருப்பவர்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு இலவசமாக பயிற்சியளிக்கிறோம்.
தொழில் தொடங்க விரும்பும் பெண்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?
தொழிலில் வெற்றிபெறும் பல பெண்கள், குடும்ப வாழ்க்கையில் பொறுப்புகளை முழுமையாக நிறைவேற்ற முடியாத நிலை ஏற்படுகிறது. குடும்பத்தினரின் ஆதரவு இருந்தால் இதை மாற்ற முடியும். எனது குடும்பத்தின் ஒத்துழைப்போடுதான் நான் இந்த அளவுக்கு வளர முடிந்தது.
உங்களுக்குக் கிடைத்துள்ள விருதுகள் என்ன?
பயிற்சி நிலையம் தொடங்கிய பிறகு, சிறந்த தொழில்முனைவோர் விருது இரண்டு முறையும், இளம் தொழில் முனைவோர் விருதும், டைனமிக் பெண் தொழில் முனைவோர் விருதும் பெற்றிருக்கிறேன்.