வாழ்க்கையை கொண்டாடுங்கள் - கல்யாணி

‘மனம் இருந்தால் மார்க்கம் உண்டு' என்பதற்கேற்ப, ஒரு விஷயத்தைச் செய்ய வேண்டுமென முடிவு செய்துவிட்டால் அதில் எத்தனை சோதனைகள், தோல்விகள் வந்தாலும், சோர்ந்து போகாமல் திடமாகச் செய்து முடிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் பயணிக்கிறேன்.;

Update:2022-12-18 07:00 IST

நிகழ்ச்சித் தொகுப்பு, மாடலிங், நடிப்பு, ஆளுமைப் பயிற்சி என பல துறைகளில் பயணித்து வருகிறார் கோவையைச் சேர்ந்த கல்யாணி. தற்போது சென்னையில் வசிக்கும் இவர், அழகிப் போட்டிகளில் கலந்துகொண்டு மிஸ் டாஸ்லிங், மிஸ் இந்தியா ஆகிய பட்டங்களை வென்றிருக்கிறார்.

'தென்னிந்தியாவின் முக்கிய நெறியாளர்' என்ற விருதைப் பெற்றிருக்கும் இவர், 'தென்னிந்தியாவின் சாதனையாளர்' என்ற விருதை தொடர்ந்து மூன்று ஆண்டுகள் வாங்கிய பெருமைக்குரியவர். இதுதவிர 'மாஸ்டர் மைண்ட் ஆப் தமிழ்நாடு' உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றிருக்கிறார்.

"அனைவருக்கும் வாழ்க்கை ஒரு முறைதான். எனவே அதை மகிழ்ச்சியுடன் ரசித்து வாழுங்கள்" என்று கூறும் கல்யாணியுடன் ஒரு சந்திப்பு.

"எனக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் பணியைத் தேர்ந்தெடுத்தேன். பெற்றோர் ஈஸ்வர்-லட்சுமி மற்றும் தங்கை அபிநயா என்னுடைய முயற்சிகளுக்கு பக்கபலமாக இருந்தார்கள்.

ஆறு ஆண்டுகளுக்கு முன்பு சிறு சிறு மேடைகளில் நிகழ்ச்சி தொகுப்பாளராகத் தொடங்கிய என் பயணத்தில், தெலுங்கு நடிகர் நாகர்ஜுனா, நடிகை நயன்தாரா உள்ளிட்ட நட்சத்திரங்களின் திரைப்படப் பாடல் வெளியீட்டு நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி இருக்கிறேன்.

இதுவரை 500-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சித் தொகுப்புகளையும், பேட்டிகளையும் வழங்கி இருக்கிறேன். தற்போது 'கனாக்காணும் காலங்கள்' என்ற நெடுந்தொடரில் 'ஸ்வேத்தா' எனும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறேன். நன்றாக நடனம் ஆடுவேன். முறையாகப் பாடவும் கற்றுக்கொண்டேன்.

பல துறைகளில் பயணிப்பது குறித்து சொல்லுங்கள்?

மற்றவர்களை முன்னுதாரணமாகக் கொண்டு வாழ்வதை விட, பிறருக்கு நான் முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். தகுந்த உழைப்பு மற்றும் சிந்தனையால் மட்டுமே இது சாத்தியமாகும். அதனால்தான் நான் செய்யும் விஷயங்களில் அதிக ஆர்வமும், ஈடுபாடும் கொண்டு செயல்படுகிறேன். 'மனம் இருந்தால் மார்க்கம் உண்டு' என்பதற்கேற்ப, ஒரு விஷயத்தைச் செய்ய வேண்டுமென முடிவு செய்துவிட்டால் அதில் எத்தனை சோதனைகள், தோல்விகள் வந்தாலும், சோர்ந்து போகாமல் திடமாகச் செய்து முடிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் பயணிக்கிறேன்.

அழகிப் போட்டியில் பட்டம் வென்ற அனுபவம் பற்றி கூறுங்கள்?

'மிஸ் இந்தியா' அழகிப் போட்டியில் எல்லா மாநிலங்களில் இருந்தும் வந்த போட்டியாளர்களுக்கு மத்தியில் நான்காவது இடத்தை பெறுவேன் என்று கனவிலும் நினைக்கவில்லை. அதில் பங்கேற்றதே சிறந்த அனுபவம். மொத்தம் 18 சுற்றுகள் இருந்த அப்போட்டியில் 16 சுற்றுகளில் வென்றேன். அதன் பின்னர் பொதுமக்களின் வாக்குகளைப் பெற்று 'மிஸ். இந்தியா பாப்புலர்' என்ற பட்டம் வென்றேன்.

மேடை நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியது மற்றும் திரைப் பிரபலங்களை பேட்டி எடுத்த அனுபவங்கள் எப்படி இருந்தது?

மேடை நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கும்போதுதான், வாழ்க்கையையே உணர்ந்ததாகச் சொல்வேன். ரசிகர்களின் ஆரவாரமும், உற்சாகமும்தான் எனக்கான உத்வேகமாக இருக்கின்றன. 'நெறிப்படுத்துதல்' என்றால் என்னவென்றே தெரியாமல் வந்து, படிப்படியாகத்தான் கற்றுக் கொண்டேன். அதனால் நிகழ்ச்சித் தொகுப்பு எனக்குப் பிடித்த ஒரு பயணம் என்று சொல்லலாம். லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் நிறைந்திருக்கும் கூட்டத்தைப் பார்த்து, நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவதே அலாதியான உணர்வு. எனக்கான ஆற்றலை வழங்குவதே அதுபோன்ற மேடைகள்தான்.

நடிகர் சிவகார்த்திகேயனின் 'டாக்டர்' படம் வெளியாவதற்கு முன்பாக அவரை பேட்டி எடுத்தேன். அப்போது 'உன் திறமைக்கு நீ பெரிய நிலையை அடைவாய்' என்று அவர் வாழ்த்தினார். ஓ.டி.டி தளத்தில் 'ஸீ 5 தர்பார்' என்ற நிகழ்ச்சியின் மூலம் எஸ்.ஜே. சூர்யா, சுந்தர் சி, ஆர்யா, விஜய் ஆண்டனி, லைலா, தேவயானி உள்ளிட்ட பல நட்சத்திரங்களை பேட்டி எடுத்திருக்கிறேன். சென்னையில் பல லட்சம் பேர் பங்கேற்ற நிகழ்ச்சியொன்றில் இசை அமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா உடன் மேடையில் பேசியதும் மறக்க முடியாத அனுபவம். தற்போது தனியார் தொலைக்காட்சியில் சினிமா நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறேன்.

ஆளுமை பயிற்சியாளராக உங்கள் பயணத்தைப் பற்றி சொல்லுங்கள்?

'இந்தியாவின் இளம் ஆளுமைப் பயிற்சியாளர்' என்ற அங்கீகாரத்தைப் பெற்றிருக்கிறேன். 'உன்னால் இதை செய்ய முடியாது' என்று எனது வயதை காரணம்காட்டி பல இடங்களில் நான் அவமானப்படுத்தப்பட்டபோதுதான், ஆளுமைப் பயிற்சியாளர் ஆக முடிவு செய்தேன். அனுபவத்துக்கும், திறமைக்கும் முன்னால் வயது பெரிய விஷயமே இல்லை. இதுவரை ஏராளமான கல்லூரிகளில், ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களை சந்தித்துப் பிரச்சாரம் செய்திருக்கிறேன். அவர்களில் நூற்றுக்கணக்கானோரின் வாழ்க்கைப் பாதை சீராக காரணமாக இருந்திருக்கிறேன்.

Tags:    

மேலும் செய்திகள்