சமுதாயத்தோடு சேர்ந்து வாழ உதவுவதே சிறந்த கல்வி - உதயலட்சுமி

மதிப்பெண்ணை நோக்கி மட்டுமே மாணவர்களை நகர்த்தாமல், அவர்களின் வாழ்வியல் திறன்களை வளர்த்து, சமுதாயத்தோடு இணக்கமாக வாழ்வதற்கு உதவுவதாக கல்வி இருக்க வேண்டும்.;

Update:2023-02-12 07:00 IST

"ஒருவர் கற்கும் கல்வி அவரது தன்னம்பிக்கையை அதிகரிப்பதாகவும், சக மனிதர்களுடன் அன்போடு வாழ்ந்து, ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்கும் எண்ணத்தைக் கொடுப்பதாகவும் இருக்க வேண்டும்" என்கிறார் ஆசிரியை உதயலட்சுமி. காஞ்சிபுரம் மாவட்டம் திருப்புட்குழி அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியையாகப் பணியாற்றிவரும் இவர், பல்வேறு வகைகளில் மாணவர்களின் திறன்களை வளர்த்து வருகிறார். அவரது பேட்டி.

"திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி எனது சொந்த ஊர். இரண்டு முதுகலைப் பட்டங்களும், கல்வியியலில் இளங்கலைப் பட்டமும் பெற்றிருக்கிறேன். எனது குழந்தைகள் இருவரும் அரசுப் பள்ளியில் படித்து வருகிறார்கள். அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றும் நான், குழந்தைகளுக்கான பாடல்களையும், கதைகளையும் சமூக வலைத்தளங்கள் மூலமாக வழங்கி வருகிறேன். பறை, சிலம்பம், தெருக்கூத்து, நாடகம் ஆகியவற்றிலும் பயிற்சி பெற்றிருக்கிறேன்".

அரசுப் பள்ளிக் குழந்தைகளின் கல்வி மேம்பாட்டுக்கு நீங்கள் எடுத்துள்ள முயற்சிகள் என்ன?

பள்ளிப் படிப்பை முடிக்கும் பெண் குழந்தைகள் பலர், பெற்றோரின் அறியாமை மற்றும் பொருளாதார வசதியின்மை காரணமாக கல்லூரி செல்லாமல் இருக்கிறார்கள். அவர்களுக்கு, முகநூல் நண்பர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் மூலமாக கல்லூரியில் சேர்ந்து படிப்பதற்கான ஏற்பாடுகளை செய்து தருகிறேன்.

கொரோனா ஊரடங்கின்போது பலரிடம் இருந்து புத்தகங்களை நன்கொடையாகப் பெற்றேன். அந்த புத்தகங்களை சமூக ஆர்வலர்கள் மூலம் வினியோகித்து, மாணவர்களை புத்தக வாசிப்பில் ஈடுபடுத்தினேன்.

அறிவியல் வல்லுநர்கள் மற்றும் சமூகக் கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த தன்னார்வலர்களை மாணவர்களிடையே உரையாற்றச் செய்கிறேன். மாணவர் களுக்கு ஓவியப்பயிற்சி, தோட்டக்கலை பயிற்சி போன்றவற்றை அளிப்பதற்கு ஏற்பாடு செய்கிறேன்.

குழந்தைகளின் படைப்பாற்றல் திறன்களை ஊக்கப்படுத்த, சிறார் இதழ்களுக்கு அவர்களின் படைப்புகளை அனுப்பி அவர்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தி வருகிறேன்.

வகுப்பறைக்கு ஒரு நூலகம் அமைத்துத் தரும் நடைமுறையை முன்பு பணியாற்றிய பள்ளியிலும், தற்போது பணியாற்றும் பள்ளியிலும் சாதித்துக் காட்டியிருக்கிறேன். தனியார் தொண்டு நிறுவனத்தின் மூலமும் பள்ளியில் நூலகம் அமைத்து, ஆயிரம் புத்தகங்களை மாணவர்களுக்கு வாசிக்கக் கொடுத்திருக்கிறேன்.

கல்வி முறை எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?

மதிப்பெண்ணை நோக்கி மட்டுமே மாணவர்களை நகர்த்தாமல், அவர்களின் வாழ்வியல் திறன்களை வளர்த்து, சமுதாயத்தோடு இணக்கமாக வாழ்வதற்கு உதவுவதாக கல்வி இருக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.

ஆசிரியர்கள், மாணவர்களை ஆழ்ந்து புரிந்து கொள்ள வேண்டும். அவர்களின் வாழ்வியல் சூழலை முதலில் அறிந்துகொள்ள வேண்டும். மாணவர்களிடம் உள்ள திறமைகளை அடையாளம் கண்டு ஊக்குவிக்க வேண்டும். அவ்வாறு செய்யும்போது கல்வியின் மீது அவர்களுக்கு அதிக ஆர்வம் உண்டாகும். மகிழ்ச்சியான கற்றல் சாத்தியமாகும்.

Tags:    

மேலும் செய்திகள்