மூளையின் செயல்திறனை அதிகரிக்கும் பரதம்

பரதத்தில் செய்யப்படும் பல்வேறு அசைவுகள், மூளையின் பல பகுதிகளைத் தூண்டுகிறது. இதனால், அன்றாட செயல்பாட்டில் நேர்மறையான தாக்கம் உண்டாகிறது.;

Update: 2023-01-15 01:30 GMT

மிழ்நாட்டின் பாரம்பரிய நடனமான பரதநாட்டியம், இந்தியாவின் தொன்மையான கலைகளில் ஒன்று. பரதக் கலையைக் கற்றுக்கொள்ள ஏற்ற வயது மற்றும் அதன் நன்மைகள் பற்றி பரதநாட்டியக் கலைஞராக ஜொலித்து வரும் சென்னையைச் சேர்ந்த மருத்துவர் திவ்யா பிரியலட்சுமி விரிவாகக் கூறுகிறார்.

மருத்துவரான உங்களுக்கு, பரதக்கலை மீதுள்ள ஈடுபாடு பற்றி சொல்லுங்கள்?

மருத்துவமும், பரதமும் எனக்கு நிம்மதியும், மகிழ்ச்சியும் கொடுப்பவை. இரண்டையும் மனதார விரும்பிச் செய்கிறேன். சோகம், மகிழ்ச்சி, கோபம் என எல்லா உணர்வுகளுக்கும் நாட்டியம் தீர்வாக இருந்திருக்கிறது. கவலை ஏற்பட்டாலும், மகிழ்ச்சியாக இருந்தாலும் நடனம் ஆடுவேன். பரதநாட்டியம் என்னுடன் முழுமையாக ஒன்றிவிட்டது. என்னுடைய குரு, கிருஷ்ணகுமாரி நரேந்திரனுடன் இணைந்து ஆண்டு முழுவதும் நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறேன்.

எந்த வயதில் இருந்து பரதம் கற்றுக்கொள்ளலாம்?

நான் 4 வயதில் பரதம் கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். குழந்தைகளுக்கு ஆர்வம் இருந்தால் எந்த வயதிலும் ஆடுவதற்கு அனுமதிக்கலாம். 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு பரதம் சொல்லிக் கொடுத்தால் அவர்களால் எளிதாக புரிந்துகொள்ள முடியும். விரைவாக கற்றுக்கொள்வார்கள். 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கும்போது கண்டிப்பு காட்டாமல் நிதானமாக, அவர்கள் விரும்பும் விதத்தில் பயிற்சி கொடுக்கலாம்.

ஐந்து வயது குழந்தைகளுக்கு எத்தகைய பயிற்சிகள் கொடுப்பார்கள்?

கால் தட்டுவது, கை முத்திரை வைப்பது, அரைமண்டி மற்றும் முழுமண்டி நிலையில் உட்காருவது, கால் தட்டடவு, நாட்டடவு போன்ற எளிய பயிற்சிகளை முதலில் சொல்லிக் கொடுப்பார்கள். முத்திரைகள் மட்டுமே ஆரம்பத்தில் கற்றுக் கொடுக்கப்படும். அதன் பிறகே கண் அசைவு மற்றும் உணர்வுகளை வெளிப்படுத்தும் நடிப்பு போன்ற பயிற்சிகளை ஆரம்பிப்பார்கள். ஒருவேளை குழந்தைகளுக்கு ஆர்வம் இருந்து, அவர்கள் உடல் ஒத்துழைக்கும்போது எந்தப் பயிற்சியும் கொடுக்கலாம்.

பரதம் கற்றுக் கொள்வதால் குழந்தைகளுக்கு ஏற்படும் நன்மை என்ன?

குழந்தைகளுக்கான உடற்பயிற்சியாகவும் பரதத்தைப் பார்க்கலாம். பரதம் ஆடுவதால் உடல் எடை சீராக இருக்கும். வீட்டில் முடங்கி இருப்பது, பாடச்சுமை, அமைதி இல்லாத வீட்டுச் சூழல் காரணமாக இப்போது சிறு குழந்தைகளுக்குக்கூட மனஅழுத்தம் ஏற்படுகிறது. பரத நாட்டியம் ஆடும்போது மனதில் உற்சாகம் உண்டாகும். மன அழுத்தம் குறையும். ஹார்மோன்கள் சமநிலையில் இருக்கும். உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும்.

பெண் குழந்தைகளுக்கு மாதவிடாய் பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்க பரதம் உதவுகிறது.

பரதம் ஆடுவதால் வலது-இடது என இரண்டு பக்க மூளைக்கும் பயிற்சி கிடைப்பதாக, சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவு தெரிவிக்கிறது. பரதத்தில் செய்யப்படும் பல்வேறு அசைவுகள், மூளையின் பல பகுதிகளைத் தூண்டுகிறது. இதனால் அன்றாட செயல்பாட்டில் நேர்மறையான தாக்கம் உண்டாகிறது. அசைவுகளைக் காட்சிப்படுத்துவது, மூளைக்குள் தசை நினைவகத்தை மேம்படுத்தும். மூளையின் ஆரோக்கியத்தை வலுப்படுத்தும் சிகிச்சை முறையாக பரதம் செயல்படுகிறது.

நிதானமாக யோசித்தல், நினைவாற்றல் பெருகுதல், பதற்றமின்மை, நேரத்தைச் சரியாகப் பயன்படுத்துதல் போன்ற பரதத்தின் பலன்கள் ஆண்-பெண் இருபாலருக்கும் பொதுவானவை.

Tags:    

மேலும் செய்திகள்