பசியில்லா சமுதாயம் படைக்க முயற்சிக்கும் பானுபிரியா
2015-ம் ஆண்டு மழை மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது, நானும், எனது நண்பர்களும் குழுவாகச் சேர்ந்து, எங்களால் இயன்ற பணம் போட்டு வீட்டில் உணவு சமைத்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கும், சாலையோரம் தங்கியிருந்தவர்களுக்கும் வழங்கினோம்.;
"மரணம் எல்லோருக்கும் வரும். ஆனால், பசியால் யாரும் மரணிக்கக்கூடாது என்பதே எனது நோக்கம். ஆதரவற்றவர்கள் என யாருமில்லாத சமுதாயத்தை உருவாக்குவதே எனது வாழ்நாள் லட்சியம்" என்கிறார் சென்னையில் வசிக்கும் பானுபிரியா.
தனியார் நிறுவனத்தில் தொழில்நுட்ப வல்லுனராக, தான் பார்த்துவந்த வேலையில் இருந்து விலகி எளியவர்களுக்கு சேவை செய்வதையே முழு நேர பணியாகக்கொண்டு செயல்பட்டு வருகிறார்.
இவரது சேவைக்காக 'சேவா ரத்னா', 'சேவைச்செம்மல்' உட்பட பல விருதுகளையும், இரண்டு கவுரவ டாக்டர் பட்டங்களையும் பெற்றிருக்கிறார்.
ஆதரவற்றோருக்கு உணவளிப்பதை அன்றாடம் செய்துவரும் அவருடன் நடந்த உரையாடல் இதோ…
"நான் சென்னை, பெரம்பூரில் பிறந்து வளர்ந்தேன். அறிவியலில் இளங்கலைப் படிப்பையும், மென்பொருள் பொறியியலில் பட்டயப் படிப்பையும் முடித்திருக்கிறேன்.
ஆதரவற்றவர்களுக்கு உதவும் எண்ணம் எப்போது வந்தது?
நான் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது, பெரம்பூர் ரெயில்வே நடைபாதை வழியாக பள்ளிக்குச் செல்வேன். அங்கே ஆதரவற்ற நிலையில் ஒரு மாற்றுத்திறனாளி சகோதரியை தினமும் பார்த்து வந்தேன். ஒருநாள், எனது உண்டியல் பணம் முழுவதையும் எடுத்துச் சென்று அவரிடம் கொடுத்தேன்.
அவரோ, "எல்லோரும் எனக்குக் காசு கொடுக்கிறார்கள். ஆனால், யாரும் என்னிடம் பேசுவதில்லை, நீயாவது பேசுவாயா? எனக்குக் காசு வேண்டாம்" என்று கூறினார்.
எனக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம் அவரிடம் ஆதரவாக பேசி, உணவு வழங்கி வந்தேன். ஆரம்பத்தில் இதை மற்றவர்கள் கேலியாக பார்த்தாலும், நாளடைவில் அவர்களும் உதவ ஆரம்பித்தார்கள். அனைவரும் சேர்ந்து அவரது குடும்பத்தாரிடம் பேசி, பொருளுதவி செய்து, அவரது நிலையை மாற்றினோம். அப்போதில் இருந்து ஆதரவற்றவர்களுக்கு உதவுவதை வழக்கமாக்கிக் கொண்டேன்.
தினமும் எத்தனை பேருக்கு உணவு வழங்குகிறீர்கள்? அதற்கான நிதியை எப்படிப் பெறுகிறீர்கள்?
2015-ம் ஆண்டு மழை மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது, நானும், எனது நண்பர்களும் குழுவாகச் சேர்ந்து, எங்களால் இயன்ற பணம் போட்டு வீட்டில் உணவு சமைத்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கும், சாலையோரம் தங்கியிருந்தவர்களுக்கும் வழங்கினோம்.
அதன் பிறகு அந்தக் குழுவைக் கலைக்காமல், சேவையைத் தொடர விரும்பி, ஒரு அறக்கட்டளையைத் தொடங்கினோம். தொடக்கத்தில் நாளொன்றுக்கு ஆளுக்குப் 'பத்து ரூபாய்' என்ற கணக்கில், மாதம் 300 ரூபாய் போட்டு மளிகைப் பொருட்களை வாங்கி என் அம்மாவிடம் கொடுத்து சமைத்துத் தரச் சொன்னோம். அந்த உணவை சாலையோரம் உள்ள மக்களுக்குக் கொடுக்கத் தொடங்கினோம்.
ஆரம்பத்தில் நாளொன்றுக்கு 25 பேருக்கு உணவு வழங்கத் தொடங்கினோம். தற்போது தினம்தோறும் 100 பேருக்கு உணவு மற்றும் தண்ணீர் வழங்கி வருகிறோம்.
உங்கள் எதிர்கால திட்டம் என்ன?
24 மணி நேரமும், யார் வேண்டுமானாலும் வந்து பசியாறிச் செல்லும் வகையில் சொந்தமாக ஒரு நிரந்தர இடத்தை உருவாக்க வேண்டும். சாலையோரம் தங்கியுள்ள ஆதரவற்றவர்களுக்கு தங்குமிடத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பதே எனது எதிர்காலத் திட்டம்.