தேவையற்ற சிந்தனைகளை தவிருங்கள் - கிருத்திகா தரன்
உடலில் இரண்டு மூளைகள் இருக்கிறது என்று கூறலாம். ஒரு மூளை தலையில் உள்ளது. இன்னொரு மூளை நமது வயிறு. அதனால்தான் பதற்றம் ஏற்படும்போது, முதலில் வயிறு சரியில்லாமல் போகிறது. சாப்பிட்டவுடன் ஒரு தெளிவு கிடைக்கிறது.;
'உடல் நலத்தை மட்டுமில்லாமல், மனநலத்தையும் மேம்படுத்துவதே உண்மையான ஆரோக்கியம்' என்கிறார், ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மக்களிடம் அதிகரிக்கும் நோக்கத்துடன் செயல்பட்டு வரும் கிருத்திகா தரன். அவருடன் ஒரு உரையாடல்:
உங்களைப் பற்றி?
தஞ்சாவூரில் உள்ள கொல்லுமாங்குடி என்ற கிராமத்தில், நடுத்தர குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவள் நான். இளம் வயதிலேயே திருமணம் நடந்தது. பின்பு பெங்களூருவில் குடியேறினோம். குழந்தை பிறந்த பின்பு எனக்கு மூட்டு வலி, முதுகு வலி, குறட்டை, உடல் பருமன் போன்ற பல பிரச்சினைகள் உண்டானது. உடல் எடையைக் குறைப்பதற்காக ஆன்லைனில் செயல்படும் உணவு கட்டுப்பாடு குழுவில் சேர்ந்து, எடையை கணிசமாக குறைத்தேன். அதனால் மகிழ்ச்சியும் தன்னம்பிக்கையும் ஏற்பட்டது. 'இவற்றை நாம் ஏன் அனைவருக்கும் கற்றுத் தரக்கூடாது?' என்ற நோக்கத்தில் உணவு கட்டுப்பாடு குறித்து அனைத்தையும் கற்றுக் கொண்டேன்.
ஊட்டச்சத்துக்கும், உளவியலுக்கும் உள்ள தொடர்பை பற்றி கூறுங்கள்?
உடலில் இரண்டு மூளைகள் இருக்கிறது என்று கூறலாம். ஒரு மூளை தலையில் உள்ளது. இன்னொரு மூளை நமது வயிறு. அதனால்தான் பதற்றம் ஏற்படும்போது, முதலில் வயிறு சரியில்லாமல் போகிறது. சாப்பிட்டவுடன் ஒரு தெளிவு கிடைக்கிறது. மனநிலை சரியில்லாமல், உடல்நலனை மட்டும் பேணுவதால் எந்த பயனும் இருக்காது. சரியான ஊட்டச்சத்து இல்லையென்றால், மனநிலை சரியாக அமையாது. இவ்வாறு, உணவு மூலம் மனதையும், மன ஆரோக்கியத்தின் மூலம் வயிறையும், ஒருசேர பராமரிப்பதே 'ஊட்டச்சத்து உளவியல்' ஆகும். சுருக்கமாக சொல்லப்போனால், 'ஊட்டச்சத்து உளவியல்' என்பது உணவு மூலம் உடல் மற்றும் உள்ளத்தை ஆரோக்கியமாக மேம்படுத்துவதாகும்.
ஊட்டச்சத்து உளவியலாளராக வேண்டும் என்ற எண்ணம் எப்படி வந்தது?
ஊட்டச்சத்தில் டிப்ளமோவும், உளவியலில் முதுகலைப் பட்டமும் பெற்றிருக்கிறேன். தனியார் நிறுவனத்தில் நரம்பியல் மொழியியல் நிரலாக்கம் என்ற துறையில் பயிற்சியாளராக இருந்தேன். இந்தப் பயிற்சி, உணவு கட்டுப்பாடு குறித்த எனது ஆர்வம், ஆரோக்கியம் இவை அனைத்தும் சேர்ந்து என்னை ஊட்டச்சத்து உளவியலை தேர்ந்தெடுக்க வைத்தது.
உங்கள் செயல்பாடுகள் என்ன?
உணவுக் கட்டுப்பாடு உளவியல் குறித்த ஆலோசனைகளை அனைத்து தரப்பினருக்கும் வழங்கி வருகிறேன். கொரோனா காலகட்டத்தில் முழுமையாக இணையதளத்தில் செயல்படத் தொடங்கினேன். தற்போது 28 நாடுகளில் இருந்து பலர் பயன்பெற்றுள்ளனர்.
குழந்தைகள், பெரியவர்கள், தம்பதிகள், முதியவர்கள் என்று தனித்தனியே அவர்களுக்கு ஏற்றார்போல உணவு கட்டுப்பாடு, மனநிலை, பெண்களுக்கு மாதவிடாய் போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு ஆலோசனை வழங்கி வருகிறேன்.
பெண்களின் ஆரோக்கியத்திற்கு நீங்கள் கூறும் ஆலோசனை என்ன?
பருவ வயது முதல் மாதவிடாய் காலம் வரை பெண்களுக்கு போதிய விழிப்புணர்வு இருக்கிறது. ஆனால், மாதவிடாய் நிற்கும் காலம் பற்றி பலருக்கு தெரிவது இல்லை. உணவு கட்டுப்பாடு, மாதவிடாய் நிற்கும் பருவத்தின் அறிகுறி மற்றும் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், அதுகுறித்த பயம், பதற்றம் முதலியவற்றை போக்குவதற்கான ஆலோசனைகளை வழங்குகிறேன். மாதவிடாய் நிற்கும் பருவத்தில் ஏற்படும் தூக்கமின்மை, உயர் ரத்த அழுத்தம், படபடப்பு, அதிகமான வியர்வை போன்ற 20-க்கும் மேற்பட்ட அறிகுறிகளைக் கடப்பது பல பெண்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும். இது பற்றிய விழிப்புணர்வை ஆண்களும், பெண்களும் பெறுதல் வேண்டும்.
பல குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடுடன் பிறப்பது பற்றி?
தாய்மார்கள் ஊட்டச்சத்து குறைபாடுடன் இருப்பதுதான் அதற்கு காரணம். பெண்கள் கல்யாணத்திற்கு முன்பே நன்றாக உடற்பயிற்சி செய்து, ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டால் அவர்களின் மரபியல் ஆரோக்கியமாக இருக்கும். அத்தகைய தாய்மார்களுக்கு ஆரோக்கியமான குழந்தை பிறக்கும்.
தினசரி ஆரோக்கியத்திற்கு எத்தகைய உணவு முறையை பின்பற்றலாம்?
காலையில் எழுந்தவுடன் தண்ணீர் குடிப்பது, சாப்பிடுவதற்கு முன்பும், பின்பும் சுடு தண்ணீர் குடிப்பது, புரதம் காய்கறிகள் சாப்பிடுவது, சர்க்கரை, மைதா, சுத்திகரித்த எண்ணெய், பொரித்த உணவு முதலியவற்றை தவிர்ப்பது போன்றவற்றை கடைப்பிடித்தால் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழலாம். உட்கார்ந்து கொண்டே இருப்பதனால் கழுத்து மற்றும் முதுகுப் பகுதியில் பல பாதிப்புகள் ஏற்படுகிறது. ஆரோக்கியமான உணவு முறையுடன் தினசரி நடைப் பயிற்சியும் அவசியமானதாகும்.
ஆரோக்கியமான மனநிலையைப் பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும்?
நல்ல மனநிலைக்கு ஆக்கப்பூர்வமான எண்ணங்கள் வழிகாட்டும். தேவையற்ற சிந்தனையே மனதிற்கு எதிரியாகும். உங்கள் வேலையில் நீங்கள் ஆக்கப்பூர்வமாக ஈடுபட்டால் இதனை தவிர்த்து விடலாம்.
சாதிக்க துடிக்கும் பெண்களுக்கு என்ன கூற விரும்புகிறீர்கள்?
உங்களுக்கு பிடித்த விஷயங்களில் ஈடுபடுங்கள். ஓவியராக இருந்தால் ஓவியம் வரையுங்கள், எழுத்தாளராக இருந்தால் எழுதுங்கள், பேச்சாளராக இருந்தால் பேசுங்கள். தேவையற்ற சிந்தனைகளை தவிருங்கள். பெண்கள் அனைவருக்கும் வாழ்வில் லட்சியம், நோக்கம் வேண்டும். அதை அடைவதற்கு தேவையான விஷயங்களை கற்றுக்கொண்டு, அதில் தொடர்ந்து பயணம் செய்யுங்கள். லட்சியத்தை அடைந்ததும், சமூகத்திற்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும்.